Thursday, June 22, 2017

என் கோள்! என் முடிவு!

எதோ சீயக்காய் விளம்பரம் என்று உங்கள் உலாவியை மூடிவிடாதீர்கள்! சில நாட்களுக்கு முன், "நானே கப்பல்! நானே மாலுமி!" என்ற பதிவில் தானியங்கிக் கப்பல்கள் குறித்து நடந்துவரும் முன்னேற்றங்கள் பற்றிப் பார்த்தோம். தற்போது வந்துள்ள செய்திகளின் படி, நாசா (NASA) அனுப்பிய க்யூரியாசிட்டி ஆளில்லா ஆய்வுக்கலம் (Curiosity Rover) தனாகவே முடுவுகள் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி ஆய்வுக்கலம் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா, வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா அல்லது வாழும் வாய்ப்பு உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாயில் க்யூரியாசிட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபீ !
நன்றி: NASA/JPL-Caltech/MSSS

இதுவரை புவியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்த அக்கலம், தற்போது தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு இயந்திரக்கலத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் வேறு ஒரு கோளில் இருந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இங்கிருந்து அனுப்பப்படும் ஆணைகள் செவ்வாயில் உள்ள கலத்தை அடைய பல மணிநேரங்கள் ஆகலாம்! தூரம், இடையில் உள்ள தகவல்த்தொடர்பு செயற்கைக்கோள்களின் நிலை (position) போன்றவற்றால் இந்த வகையில் கலத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் நேரம் மற்றும் உழைப்பை வீணாக்கும் ஒன்றாக இருந்துவந்தது.

அதனால் ஏற்கனவே திட்டமிட்ட படி செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) மூலம் இந்தக்காலம் இயங்கத்தொடங்கியுள்ளது. எதேச்சையாக வெவ்வேறு இடங்களை லேசர் ஒளி கொண்டு உணர்ந்து அதில் செயற்கை அறிவுத்திறன் மூலம் ஆய்வுக்குச் சிறந்த இடம் எது என்று அடையாளம் கண்டு அந்த இடத்தை ஆராய்கிறது. இந்த செயற்கை அறிவுத்திறனுக்கு "அதிக அறிவியல் சேகரிப்புக்கான தன்னிச்சையான தேடல்" (Autonomous Exploration for Gathering Increased Science -AEGIS) என்று பெயரிட்டுள்ளனர். இந்த "ஏஜிஸ்" கருவி, 94% நேரங்களில் சரியான இலக்குகளை ஆராய்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது!

2 comments:

  1. thozhilnutpa ulagil nadakkum mempaadukalai tamizhil thoguththu varuvatharku nandri

    ReplyDelete
  2. Thanks a lot for your encouraging comment. Please continue visiting this blog for more such articles.

    ReplyDelete