Thursday, June 29, 2017

தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம்

அறிமுகம்:

NPTEL முத்திரை
தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் (The National Programme on Technology Enhanced Learning - NPTEL) இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் இணையத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை மற்றும் வாழ்வியல் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பாடங்களை காணொளி மற்றும் மின்-கல்வி வழியாக வழங்கிவருகிறது. இது ஏழு இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய அறிவியல்க் கழகங்களால் (IIScs) முன்னெடுக்கப்படுகிறது. மேலும் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்குபெறுகின்றன. இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) கல்வித்திட்டம் மற்றும் பல முன்னணி பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள்  பின்பற்றப்படுகின்றன.

நோக்கம்:

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், பொறியியல் கற்கும் மாணாக்கர்களுக்கு எளிய பாடங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உதவுவதே ஆகும். பொதுவில், இந்திய இளைஞர்களிடம் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த அறிவுத்திறனைப் பெருக்குவதன் மூலம் உலக அளவில் அவர்களின் தரத்தை உயர்த்தவும் இத்திட்டம் முனைகிறது.

வரலாறு:

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 1999ஆம் ஆண்டு "தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வி" குறித்த பட்டறை (Workshop) ஒன்று அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தோடு (Carnegie Mellon University) இணைந்து நடத்தப்பட்டது. அதன் முடிவில், இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்விக்கான திட்டத்தின் அவசியம் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டன. ஜூன், 2017 நிலவரப்படி, இதில் 1200க்கும் மேற்பட்ட காணொளிகள் மின்-கல்விப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடங்கள் பற்றி:

ஒவ்வொரு பாடத்திட்டத்தில் தோராயமாக 40 ஒரு மணி நேரக் காணொளிகள் உள்ளன. இரு மற்றும் முப்பரிமாண அனிமேஷன்கள், பவர் பாய்ண்டு ஸ்லைடுகள், கரும்பலகை மற்றும் இதர கற்பிக்கும் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

துறைகள்:

வான்வெளிப் பொறியியல், விவசாயம், கட்டடக்கலை, வளிமண்டல அறிவியல், அடிப்படைப் பாடங்கள், கட்டுமானப் பொறியியல், கணினி, மின்னியல், மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பவியல், பொறியியல் வடிவமைத்தல், சுற்றுச்சூழல், பொது, வாழ்வியல் மற்றும் சமூகம், உயிர்த்தொழில்நுட்பம், மேலாண்மை, வேதிப் பொறியியல், வேதியியல் மற்றும் உயிர்-வேதியல், கணிதம், இயந்திரப் பொறியியல், உலோகவியல், சுரங்கப் பொறியியல், கடல் பொறியியல், இயற்பியல் மற்றும் துணிப் பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.

எழுத்து வடிவில்:

இத்திட்டத்தில் உள்ள எல்லாக் காணொளிகளின் பேச்சுக்களும் எழுத்துவடிவிலும் கிடைக்கிறது. பி.டி.எப்., காணொளி அடியெழுத்துக்கள் மற்றும் காணொளியாற்ற வெறும் பேச்சுக்களாக எம்.பி.3 கோப்புகளாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இவை அனைத்தும் NPTEL இணையத்தளத்திலேயே உள்ளன. வரும் நாட்களில், காணொளிகளுக்குள் தேடுவது மற்றும் வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பு போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறிப்பிடத்தக்க வலைத்தளங்கள்:

1. http://nptel.ac.in  - அதிகாரப்பூர்வ இணையதளம்
2. http://www.youtube.com/iit
3. இணைய இணைப்பு இல்லாதவர்கள் NPTEL.BODHBRIDGE@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு இப்படங்களை குறுந்தகடுகளாகவும் குறைந்த கட்டணத்தில் பெறலாம்.

Tuesday, June 27, 2017

குறுக்கும் நெடுக்கும்

மின்தூக்கிகள் (lift) நம் வாழ்வில் ஆடம்பரங்களில் ஒன்றாக இருந்து தற்போது அத்தியாவசியமாக மாறிக்கொண்டுள்ளன. நகரங்களின் நெரிசல்களைச் சமாளிக்க அடுக்கடுக்காக மாடிகளைக் கட்டிக் கொண்டே போகிறோம். வானளாவிகளின் (skyscrapers) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. ஓரிரண்டு மாடிகள் என்றல் படிகளில் ஏறலாம். பத்துப் பதினைந்து மாடிகள் என்றல்? மேலும் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண்கள் என்று படிகளில் எற முடியாதவர்களும் உண்டல்லவா? ஆகவே மின்தூக்கிகள் நமக்கு இன்றியமையாத ஒன்றாகின்றன.


நான் சிலகாலம் முன் ஒரு பெரிய தொழில்நுட்பப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கு மின்தூக்கிகள் இருந்தன. ஆனால் மின்தூக்கி நம்மை இறங்கிவிடும் இடத்தில் இருந்து நாம் வேண்டிய இடத்திற்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. காரணம், உயரத்தில் மட்டுமல்ல, அகலத்திலும் அந்தக் கட்டடம் பெரிது. இதுபோன்ற சூழல்களில் மின்தூக்கி மட்டும் போதாதாதல்லவா? மேல்/கீழ் நோக்கி மட்டும் செல்லும் மின்தூக்கியாக இல்லாமல் பக்கவாட்டிலும் செல்லும் "மின்நகர்த்தி"யாக இருந்தால் எப்படி இருக்கும்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தைசன்க்ரப் (ThyssenKrupp) என்ற நிறுவனம் அப்படி ஒரு மின்நகர்த்தியை வடிவமைத்துள்ளது. அதற்க்கு "மல்டி" (The Multi) என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.


பொதுவாக மின்தூக்கிகள் கம்பியின் (cable) மூலமே மேலும் கீழும் இழுக்கப் படும். ஆனால் "மல்டி"யில் எந்தக் கம்பியும் கிடையாது! பின்பு எப்படி அது நகரும் என்று யோசிக்கிறீர்களா? ஜப்பானில் ஓடும் காந்தமிதவுந்தில் (Maglev Train) பயன்படுத்தப்படும் காந்தமிதவுத் (Magnetic Levitation) தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. காந்தப்புலத்தின் உந்தலால் மின்நகர்த்தி அந்தரத்தில் மிதக்கிறது. பின்பு மின்-காந்தப்புலத்தில் செய்யப்படும் மாற்றத்தால் அது குறிப்பிட்ட திசை நோக்கி நகர்கிறது. இதனால் கம்பிகள் பளு தாங்காமல் அறுந்து போவது, உராய்வு மற்றும் தேய்மானம் போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் மின்தூக்கிகள் போல் மேலும்/கீழுமாக மட்டும் அல்லாமல் இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் பக்கவாட்டிலும், குறுக்குவாட்டிலும்கூடப் பயணிக்கக்கூடியவை. இதனால் நேரம் மிச்சமாவதோடு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களும் பெருமளவு குறையும்.

இதுகுறித்து தைசன்க்ரப்பின் முதன்மை செயல் அலுவலர் (CEO) ஆன்ட்ரியாஸ் ஸ்கைரென்பெக் (Andreas Schierenbeck) கூறுகையில் "500 டன் எடைகொண்ட தொடர்வண்டியை 500 மணிக்கு கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றால், 500 அல்லது 1000 கி.கி. எடைகொண்ட பெட்டியை நொடிக்கு 5 மீட்டர் நகர்த்த முடியாத என்ன!" என்றார். இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்தூக்கிகள் போல 3 முதல் 5 மடங்கு வரை விலை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தற்போதுள்ள மின்தூக்கிகள் கம்பிகளின் பளுதாங்கும் திறன் காரணமாக குறிப்பிட்ட உயரத்திற்குமேல் பயன்படுத்த முடியாது. ஆனால், காந்தமிதவு மின்நகர்த்திகள் அதிஉயரக் கட்டடங்களில்கூடப் பயன்படுத்தலாம்.

Thursday, June 22, 2017

என் கோள்! என் முடிவு!

எதோ சீயக்காய் விளம்பரம் என்று உங்கள் உலாவியை மூடிவிடாதீர்கள்! சில நாட்களுக்கு முன், "நானே கப்பல்! நானே மாலுமி!" என்ற பதிவில் தானியங்கிக் கப்பல்கள் குறித்து நடந்துவரும் முன்னேற்றங்கள் பற்றிப் பார்த்தோம். தற்போது வந்துள்ள செய்திகளின் படி, நாசா (NASA) அனுப்பிய க்யூரியாசிட்டி ஆளில்லா ஆய்வுக்கலம் (Curiosity Rover) தனாகவே முடுவுகள் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி ஆய்வுக்கலம் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா, வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா அல்லது வாழும் வாய்ப்பு உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாயில் க்யூரியாசிட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபீ !
நன்றி: NASA/JPL-Caltech/MSSS

இதுவரை புவியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்த அக்கலம், தற்போது தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு இயந்திரக்கலத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் வேறு ஒரு கோளில் இருந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இங்கிருந்து அனுப்பப்படும் ஆணைகள் செவ்வாயில் உள்ள கலத்தை அடைய பல மணிநேரங்கள் ஆகலாம்! தூரம், இடையில் உள்ள தகவல்த்தொடர்பு செயற்கைக்கோள்களின் நிலை (position) போன்றவற்றால் இந்த வகையில் கலத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் நேரம் மற்றும் உழைப்பை வீணாக்கும் ஒன்றாக இருந்துவந்தது.

அதனால் ஏற்கனவே திட்டமிட்ட படி செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) மூலம் இந்தக்காலம் இயங்கத்தொடங்கியுள்ளது. எதேச்சையாக வெவ்வேறு இடங்களை லேசர் ஒளி கொண்டு உணர்ந்து அதில் செயற்கை அறிவுத்திறன் மூலம் ஆய்வுக்குச் சிறந்த இடம் எது என்று அடையாளம் கண்டு அந்த இடத்தை ஆராய்கிறது. இந்த செயற்கை அறிவுத்திறனுக்கு "அதிக அறிவியல் சேகரிப்புக்கான தன்னிச்சையான தேடல்" (Autonomous Exploration for Gathering Increased Science -AEGIS) என்று பெயரிட்டுள்ளனர். இந்த "ஏஜிஸ்" கருவி, 94% நேரங்களில் சரியான இலக்குகளை ஆராய்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது!

Wednesday, June 21, 2017

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் - இணையத்தில் உலாவ ஒரு நம்பகமான தோழன்

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் (Fire Fox Focus) ஒரு புதிய ஆண்டிராய்டு / ஐ-ஓ.எஸ் (Android / iOS) செயலி (App) ஆகும். மிகவும் அறியப்பட்ட உலாவிகளில் (Browsers) ஒன்றான ஃபயர் ஃபாக்ஸின் மற்றுமொரு பரிமாணமே இந்தப் புதிய உலாவி செயலி. இந்த உலாவி விளம்பரங்கள் மற்றும் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கும் டிராக்கர்கள் (Trackers) ஆகியவற்றை தானாகவே தடைசெய்துவிடுகிறது. இந்தப் புதிய செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலி வெறும் 4 எம்.பி அளவு மட்டுமே கொண்டது. எனவே உங்கள் கைப்பேசியின் வேகத்தை இது குறைக்காது.


சில வலைத்தளங்கள் உங்கள் கைப்பேசியில் உள்ள ஜீ.பீ.எஸ். மூலம் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்றார் போல விளம்பரங்களை காட்டுகின்றன. சில தளங்கள், நீங்கள் படிக்கும் பக்கங்கள், மற்றும் தேடும் சொற்களைக் கொண்டு உங்களை பற்றிய ஒரு ப்ரோபைலை உருவாக்கி வைத்துக்கொண்டு நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், எங்கு உள்ளீர்கள், என்ன விருப்பு/வெறுப்பு உள்ளவர் என்று ஒரு அனுமானத்திற்கு வருகின்றன. இதனால் என்ன தப்பு என்கிறீர்களா? அவர்கள் இத்தனை மெனக்கெட்டு இதைச் செய்ய என்ன காரணம்? இந்தத் தகவல்களைக்கொண்டு குறிவைத்து விளம்பரத்தாக்குதல் நடத்தி (Targeted Ad Campaigns), உங்களைப் பொருட்களை வாங்க வைப்பதே நோக்கம்.

ஆன்லைன் வர்த்தகம், நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற முன்யோசனையின்றி, நம்மைப் பல பொருள்களை வாங்க வைக்கும் ஒரு சிலந்திவலை. கடன் அட்டைகளும், ஆன்லைன் வர்த்தகமும் நம்மை தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் அடிமைகளாக்கியுள்ளன. முதலாளித்துவத்தின் இன்றியமையாத அம்சங்களான அதீத உற்பத்தி (over production), நுகர்வுக்கலாச்சாரம் (consumerism) மற்றும் கடன் மூலம் அடிமைப்படுத்துவது (debt slavery) எல்லாம் உங்கள் கைப்பேசிக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன. இந்நிலையில், ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் உங்களுக்கு ஓரளவேனும் இந்த துல்லியத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

மேலும் கூடுதல் பயன்களாக, இந்தச் செயலி மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது, உங்கள் கைபேசியில் உள்ள டேட்டா குறைவாகப் பயன்படுகிறது. இதனால் பக்கங்கள் சீக்கிரத்தில் தெரிகின்றன. மேலும் குறைவான மெமரி, டேட்டா மற்றும் ப்ராசசர் பயன்பாட்டால் உங்கள் மின்கலன்(பேட்டரி) பயன்பாடும் வெகுவாகக் குறைகிறது. கூகிளின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் ஆண்டிராய்டு இயங்குதளமும், அதனோடு வரும் உலாவியும் (ஆப்பிள்/ஐ-ஓ.எஸ் குறித்து சொல்லவே வேண்டாம்!) ஏற்படுத்திடும் அச்சுறுத்தல்களில் இருந்து நாம் சற்றேனும் தப்ப இந்த புதிய உலாவி நமக்கு உதவும் என்று நம்புவோமாக!

Monday, June 12, 2017

நானே கப்பல்! நானே மாலுமி!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சில கப்பல் நிறுவனங்கள் தானியங்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ஆம் ஆண்டையொட்டி இவ்வகைக் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. மிட்ஸு ஓ.எஸ்.கே. லைன்ஸ் (Mitsu OSK Lines) மற்றும் நிப்பான் யூஸென் (Nippon Yusen) ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence - AI) மூலம் கப்பல் செல்ல மிகவும் பாதுகாப்பான, குறைந்த தூரம், நேரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகும் வழித்தடத்தை தானே கண்டறிந்து பயணிக்கும் வகையில் இக்கப்பல்கள் வடிவமைக்கப் படவுள்ளன. முதல் கட்டமாக ஒரு சிறு ஊழியர்குழு கப்பலுடன் பயணிக்கும். பின்பு நாளாடைவில் முற்றிலும் தன்னிச்சையாக இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டுக்குள்ளாகவே தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் (remote controlled) கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கப்பல்த் துறை ஆய்வாளர் ஆஸ்கர் லெவாண்டர் தெரிவித்துள்ளார். என்னதான் தானாகவே இயங்கும் திறன் இருந்தாலும் சில இன்றியமையாத சூழ்நிலைகளில் மனித மாலுமி ஒருவரின் முடிவுகள் தேவைப்படும். அந்நேரங்களில், கரையில் இருந்தே கண்கணிக்கும் ஒரு மாலுமி, வேண்டிய கட்டளைகளை கப்பலுக்கு அனுப்ப முடியும்.

இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன விந்தைகள் நமக்காகக் காத்திருக்கின்றனவோ!

Friday, June 9, 2017

India Ranks 89 in Average Internet Connection Speed

According to the latest Akami State of The Internet Report, India ranks 89 globally in average connection speed. The report observes that the average connection speed in India is around 6.5 Mbps. This makes India 14th of the 15 countries surveyed in the Asia Pacific region. It is worth noting that Asia Pacific region contains the global leader South Korea.
In terms of peak speed, India is in 15th position in Asia Pacific region and  the global rank is an abysmal 97. Despite the high penetration of 4G networks like Jio and Airtel and higher smartphone adaptation, the country remains far behind both globally and in the neighborhood in terms of connectivity speed.

Further on the distribution of broadband speeds, 42% of Indians have 4 Mbps lines, 19% have 10 Mbps lines and only 10% have 15 Mbps lines. On an interesting side note, USA ranks 28th in terms of Wireless Connectivity speeds!

வீட்டு விலங்குகளின் தோற்றம்

நாம் நினைப்பது போல எல்லா விலங்குகளும் கடவுளால் தனித்தனியாகப் படைக்கப்பட்டவை அல்ல. இன்று நாம் வீட்டு விலங்குகளாக வளர்க்கும் பல விலங்குகள் மனித வரலாற்றின் பிந்தைய காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டவையே! அதாவது பின்வரும் இரண்டில் எதோ ஒன்று.

1. மனிதன் தன்னுடைய தேவை கருதி ஒரு வகை விலங்கைப் பழக்கப்படுத்தி, தனக்கு வேண்டிய பண்புகள் உள்ள விலங்குகளை மட்டும் தேர்வு முறையில் இனப்பெருக்கம் செய்து (selective breeding) தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது.

2. மனிதனின் உணவு மற்றும் இருப்பிடம் சார்ந்த பழக்கங்களால் மனிதனோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மிருக இனங்கள் சில, காலப்போக்கில் இயற்கையாகவே வீட்டு விலங்குகளாகப் பரிணமித்தது (coevolution).

விலங்குகள் மட்டும் அல்ல, பூச்சிகள், தாவரங்கள் என்று பலவும் இவ்வாறு தெரிவு முறை இனப்பெருக்கம் மூலமோ, சார்புப் பரிணாமம் மூலமோ (coevolution) தற்கால நிலையை அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக பேன்களை எடுத்துக்கொண்டால், மனிதன் ஆடை அணியும் பழக்கம் வரும் முன் வாழ்ந்த பேன் இனம், அவன் ஆடை அணிய ஆரம்பித்த பிறகு சார்புப் பரிணாம வளர்ச்சியால் வேறு வைகையாகப் பரிணமித்தது. அதுபோல, மனிதன் தன் விருப்பத்தின்படி தேர்வு செய்த பண்புகள் உள்ள செடிகளை பயிரிட்டு ஒரே வகையாக இருந்த காட்டு முட்டைகோஸ் செடியை, முட்டைகோஸ், காளிபிரளவர், நூல்கோல் போன்ற பல வகைத் தாவரங்களாக மாற்றினான். இப்படி நம் கண்முண்ணே இருக்கும் பலவும் நம்மை அறியாமலோ அல்லது நம் விருப்பத்தின் படியோ நம்மால் உருப்பெற்றவை என்றால் நம்ப முடிகிறதா?

சரி, இங்கே சில விலங்குகளை மட்டும் எப்போது, எங்கு, எதிலிருந்து வீட்டு விலங்குகளாக மனிதனால் மாற்றப்பட்டன என்று பார்ப்போம்.(இந்த அட்டவணை காலத்தால் முந்தையது தடங்கிப் பிந்தியது வரை தொகுக்கப்பட்டுள்ளது)

வ.எண் விலங்கு/பறவை மூதாதை காட்டு இனம் (wild ancestor) காலம் இடம்
1 நாய் ஓநாய் கி.மு. 13,000 ஐரோப்பா
2 வெள்ளாடு பாரசீக ஐபெக்ஸ் கி.மு.10,000 மேற்கு ஆசியா (துருக்கி, இரான்)
3 பன்றி காட்டுப் பன்றி கி.மு. 9,000 மேற்கு ஆசியா, சீனா
4 செம்மறி ஆடு காட்டுச் செம்மறி கி.மு. 8,500 துருக்கி
5 மாடு (திமில் இல்லாத இனம்) ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா
6 மாடு (திமில் உள்ள இனம்) இந்திய ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா
7 பூனை ஆபிரிக்கக் காட்டுப் பூனை கி.மு. 7,500 மேற்கு ஆசியா
8 கோழி காட்டுக்கோழி கி.மு. 6,000 இந்தியா, தென்கிழக்கு ஆசியா
9 கழுதை ஆபிரிக்கக் காட்டுக் கழுதை கி.மு. 5,000 எகிப்து
10 வாத்து காட்டு வாத்து கி.மு. 4,000 சீனா
11 எருமை காட்டெருமை கி.மு. 4,000 வடகிழக்கு இந்தியா, சீனா
12 ஒட்டகம் பாலை ஒட்டகம் கி.மு. 4,000 அரேபியா
13 குதிரை காட்டுக் குதிரை கி.மு. 3,500 மத்திய ஆசியா
14 புறா மாடப்புறா கி.மு. 3,500 மத்தியத் தரைக்கடல்ப் பகுதி
15 வான்கோழி காட்டு வான்கோழி கி.பி. 100 - 200 மெக்சிக்கோ, யூ.எஸ்.ஏ
16 தங்க மீன் பிரஷ்ஷியக் கெண்டை கி.பி. 300 - 400 சீனா
17 சண்டை மீன் (fighter fish) பெட்டா மீன் கி.பி. 1800 தாய்லாந்து
18 வளர்ப்பு நாரி (ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது) நாரி கி.பி. 1950 சோவியத் ஒன்றியம்

Friday, June 2, 2017

ஈசல் வறுவல்!

கேட்டாலே சிலருக்கு பிரட்டிக்கொண்டு வரலாம்... எப்படி சிலருக்குப் பன்றிக்கறி பற்றிய சிந்தனையே ஒவ்வாத ஒன்றோ, எப்படி சிலருக்குக் கருவாட்டு வாடையே ஆகாத ஒன்றோ, எப்படி சிலருக்கு வெண்டைக்காயே வேண்டாத ஒன்றோ, அப்படி பழக்கம் இல்லாதவருக்கு, இதுவும் அறுவோறுப்பாகவே இருக்கும். ஆனால், பிறந்ததில் இருந்து வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் ஈசலை உணவாகப் பார்த்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது எதார்த்தமான உணவே! இந்தப் பதிவின் நோக்கம் எல்லோரும் ஈசல் சாப்பிடவேண்டும் என்பதல்ல. உணவுப் பழக்கங்கள், இடம்தோறும், காலம்தோறும், கலாச்சாரந்தோறும் மாறும் ஒன்று. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது மற்றவருக்கு முற்றிலும் ஒவ்வாத ஒன்றாகவும், உங்களுக்கு கேட்கவே சகிக்காத ஒன்று மற்றவர் நாக்குக்கு சுவையானதாகவும் இருக்கலாம். உங்கள் உணவை அவர் வாயிலும், அவர் உணவை உங்கள் வாயிலும் திணிக்காத வரையில், யாரும் வாந்தி எடுக்கத் தேவை இல்லை. உங்கள் உணவை உங்கள் வாயிலிருந்தும், அவர் உணவை அவர் வாயிலிருந்தும், பிடுங்காத வரை, யாரும் ஆத்திரப்படவும் தேவையில்லை.

எப்படிப் பிடிப்பது?

மழை நாட்களில், மின்விளக்குகள் முன் படபடக்கும் சிறகுகளுடன் நடனமாடும் ஈசல்களை பார்க்காதவர்கள் வெகு சிலரே! இன்று நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக கீழே அதன் படத்தை இணைத்துள்ளேன். முதலில் நீங்கள் பிடிக்கும் ஈசல் உண்ணத்தகுந்ததா என்று சரிபார்த்துக் கொள்வது அவசியம். விவரம் தெரிந்த நண்பர்களிடம் கேட்பது நல்லது. ஈசல் என்று பறக்கும் எறும்புகளை பிடித்த சிறுவர்களையும் என் இளம் வயதில் கண்டதுண்டு. பெரும்பாலும் மாலை நேரமே ஈசல் வேட்டைக்கு உகந்தது (அப்போதுதான் அவை வீடுகள் நோக்கிப் படை எடுக்கும்). அதிகாலையிலும் சில சமயங்களில் வயல்வெளிகள், புல்வெளிகள் போன்ற இடங்களில் ஈசல் கூட்டம் சுற்றுவதுண்டு.
நன்றி: விக்கிமீடியா
ஒரு சொம்பு அல்லது தம்பளரில் கால்பங்கு நீர் நிரப்பிக்கொள்ளவும். ஈசல்கள் அதிகம் சுற்றும் இடத்தில் அமர்ந்து அவற்றைக் கையால் பிடிக்கவும். பயம் வேண்டாம்... அவை உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை! பிடித்த ஈசலை நீரில் போடவும். அதன் சிறகுகள் நீரில் பட்டவுடன் பெரும்பாலும் உதிர்ந்துவிடும். இல்லையென்றாலும் அவை பறக்கும் தன்மை போய்விடும். சிறிது நேரத்தில் பாத்திரம் நிரம்பி விடும். பின்பு ஒரு முறத்திலோ, அகலமான தட்டிலோ அல்லது சொளவிலோ ஈசல்களைப் பரப்பி காய வைக்கவும். ஒன்றிரண்டு ஈசல்கள் நடந்து தப்ப முயலலாம்! மறுநாள் வெயில் வந்தால் ஈசல்களை வெயிலில் காயவிடவும். காய்ந்தபின் லேசாகப் பரசி சிறகுகளை நீக்கவும். நன்று காய்ந்த ஈசல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அரிசிப்பொரி போல இருக்கும்.

எப்படிச் சமைப்பது?

அரிசிப்பொறி, பொட்டுக்கடலை (வறுகடலை/உடைத்தகடலை), உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணை விட்டு வாணலியில் மிதமான சூட்டில் வறுக்கவும். கலகலவென நன்கு வறுபட்டவுடன், தட்டில் வைத்துப் பரிமாறவும்! குளிர்கால மாலைகளில் எளிதாகக் கிடைக்கும் இந்த புரதம் நிறைந்த ஈசல் வறுவலின் சுவையும் அருமையாக இருக்கும்.

சிலர் (நானும்கூட) ஈசல்களைப் பிடித்தவுடன் பச்சையாக உண்பர். சமைக்காத நிலையில் அதன் சுவை, பால்க்  கருது (சோளம்) போல இருக்கும். பச்சை(சமைக்காத) ஈசல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றாலும், அதற்குமுன் அது ஏதாவது அசுத்தமான இடங்களில் அமர்ந்திருந்தால் நோய்த்தொற்று ஏற்படலாம். ஆகவே சமைத்து உண்பது சாலச்சிறந்தது!

புறநானூற்றில் ஈசல் உணவு!

சில வருடங்கள் முன்பு, தமிழாசிரியரான என் தந்தை புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் 119-வது பாடலில் ஈசல்களை மோருடன் சேர்த்துப் புளிச்சாறு (புளிச்சோறு கிண்டப் பயன்படுவது) தயாரித்ததாகக் குறிப்புள்ளதை எனக்குச் சொன்னார். இப்படியும் ஈசலை சமைக்க முடியுமா?!? ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்! தற்போது நகரத்தில் வாழும் எனக்கு வாய்ப்பிருக்கும் போது இதை முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

குறிப்பு: இந்த இடுகை 2010ஆம் ஆண்டு வேறு ஒரு வலைப்பூவில் நான் ஆங்கிலத்தில் எழுதிய இடுகையின் சில மாறுபாடுகள் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.