நன்றி: விக்கிமீடியா |
கிஷ் ஓட்டம் என்றால் என்ன?
எவ்வளவுதான் படித்தவராக இருந்தாலும், எவ்வளவு நினைவுத்திறன் கொண்டவராயினும், எல்லோர் அறிவுக்கும் ஒரு எல்லை உண்டு. திடீர் என்று ஒரு மேடையில் பல்வேறு தொடர்பற்ற, பொருளற்ற வாதங்களை அடுக்கிக்கொண்டே போனால், முதலில் எதை மறுப்பது, சொல்லியதில் எது உண்மை எது பொய், எப்படி பல்வேறு வாதங்களை ஒரு பதில்கொண்டு மறுப்பது போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இதனால் அவர்கள் தடுமாறுவதோ, அல்லது முழுமையான விடை சொல்லாமல் போவதோ இயல்பே! இத்தகைய வகையில் விவாதத்தில் வென்றது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதுவே "கிஷ் ஓட்டம்" ஆகும்.
எடுத்துக்காட்டு
கிறிஸ்துமஸ் தாத்தா உண்டா இல்லையா என்று விவாதம் நடப்பதாக வைத்துக்கொள்வோம். வரலாறு மற்றும் அறிவியல் அறிஞர்களும், கிறித்துமஸ் தாத்தா உண்டு என்று நம்பும் சிறுவனும் பங்கெடுப்பதாகக் கொள்வோம். திடீர் என்று அந்தச் சிறுவன், "கிறித்துமஸ் தாத்தா இருப்பது, நாசா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஜான் வில்லியம்சன் எழுதிய 'வடதுருவ விசித்திரங்கள்' புத்தகத்தில் அவர் புகைப்படம் உள்ளது. சென்ற ஆண்டுகூட என் வீட்டிற்கு வந்து அவர் பரிசு கொடுத்தார். உலகில் என் போல 30 கோடி சிறுவர்கள் அவரை நம்புகின்றனர். நாங்கள் எல்லோரும் முட்டாள்களா, மயில் இறகு குட்டி போடும் பொது கிறிஸ்துமஸ் தாத்தா இருக்க முடியாத? அவர் தாத்தா என்பதால்தானே அவருக்கு தாடி இருக்கிறது? அதுவே அது பாட்டியாக இருந்தால் எப்படி தாடி இருக்கும்? தாடி வெள்ளையாய் இருப்பதே அவர் வயதான தாத்தா என்பதற்கு சான்று. இதுகூடப் புரியாமல் நீங்கள் எப்படி அறிஞர்கள்? 1932 வரை கிறிஸ்துமஸ் தாத்தா பச்சை சட்டைதான் போடுவார். பிறகு அது என் சிவப்பாக மாறியது என்று பெனெடிக் கிங்ஸ்லி என்ற வரலாற்று ஆய்வாளர் எழுதியுள்ளார்" என்று அடுக்கிக்கொண்டேய போகிறான்.
இப்போது நாம் எங்கிருந்து பதில் சொல்லத் தொடங்குவது? முதலில் அந்தச் சிறுவன் கூறியது போல ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையில் உள்ளனவா? அப்படி இருந்தாலும் அவை நம்பகத்தன்மை உள்ளனவா? இது உடனுக்குடன் அறியக்கூடியவை அன்று. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அந்த ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையாக உள்ளவையே என்று நிறுவும் சுமை (burden of proof) யாருக்கு உள்ளது? உண்மையில் அது அந்தச் சிறுவனின் பொறுப்பு. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஆய்வாளர்களும், ஆய்வுகளும் இல்லை என்று எதிர் அணி நிறுவ வேண்டும். மேலும் விவாதத்துக்குத் தொடர்பில்லாத கிறிஸ்துமஸ் தாத்தா ஆணா பெண்ணா, வயதானவரா இளைஞரா, அவரை எத்தனை சிறுவர்கள் நம்புகிறார்கள் போன்ற வாதங்களை முன்வைப்பதன் மூலம் விவாதம் திசைதிருப்பப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடையையோ அல்லது ஒரு சில சிறு விடைகளையோ சொல்லி எதிர்கொள்ள முடியாது. ஆனால, அந்த மேடையில் பெரிய விளக்கங்களோ, ஆய்வுகளோ, நூல் தேடல்களோ மேற்கொள்ள நேரமும் வாய்ப்பும் கிடையாது. ஆகவே எதிர் அணி பாடு திண்டாட்டம்தான்.
தாக்கம்
இது போன்ற "கிஷ் ஓட்டங்களை" சமயப் பரப்புரை மற்றும் ஆன்மீக வியபாரம் செய்யும் ஆட்களிடம் அதிகம் பார்க்கலாம். ஒரு மேடையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இவ்வாறு பேசுவதன் மூலம், தன் தரப்பு வாதங்கள் சரி போலவும், எதிர்தரப்பு அறியாமையில் மூழ்கியுள்ளது போலவும் காட்டிக்கொண்டு விவாதத்தில் வென்று விட்டது போல பெருமிதம் அடைகிறார்கள் இவ்ரகள். போலி அறிவியல் துணைகொண்டு பிழைப்பு நடத்தும் ஒட்டுன்னிகளும் இத்தகைய பேச்சுக்கள் மூலம் மக்களை முட்டாள்களாக்குகின்றனர். அரசியல்வாதிகளும்கூட இதற்க்கு விதிவிலக்கல்ல. அறிவு நாணயம் (intellectual honesty) அற்ற இதுபோன்ற நடவடிக்கைகளால் உண்மைகள் மறைக்கப்படுவதோடு பொய்கள் மக்களின் மனதில் நிலைநிறுத்தப்படுகின்றன.
என்ன செய்யலாம்?
இது எவ்வளவு பெரிய சமூகக்கேடு என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இனி விவாதங்களை கவனிக்கும்போது இவ்வாறான தவறான முறைகள் கையாளப்படுகின்றனவா என்று உற்றுநோக்குங்கள். இத்தகைய அறிவு நாணயமற்ற செயல்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாவே இருப்பர். அத்தகையவர்களை அடையாளம்கண்டு அவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பது நலம். எந்த ஒரு மேடை விவாதமோ, தொலைகாட்சி விவாதமோ, வலைத்தள கருத்துப்பதிவு (comment) சண்டைகளோ ஒரு அறிவுப்பூர்வமான முடிவுக்கு வர உதவாது. ஏனென்றால், அறிவு (அறிவியல்/அரசியல்/சமூகம்) என்பது பல ஆண்டுகள் கடின உழைப்பு, வாசிப்பு, கற்றல், புரிதல், ஆய்வுகள் என்று நெடிய வழிப் பயணம். ஒரு குறுகிய கால விவாதம் அதைத் தீர்மானிக்க முடியாது. அதற்காக விவாதங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. அவற்றை வாழ்வியல் உண்மைகளாக நம்பவேண்டாம் என்று சொல்கிறேன்.
"அறிவியலில் தேரோடும் தெருக்கள் கிடையாது. அதன் செங்குத்தான வழிகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் ஒளிமயமான உச்சிகளை எட்டுகின்ற வாய்ப்பு கிடைக்கும்." -காரல் மார்க்ஸ்