Wednesday, August 30, 2017

சோவியத் ஒன்றியம் என்ன கிழித்தது?

சோவியத் ஒன்றியம் வீழ்ந்துவிட்டதால் பொதுவுடைமைச் சித்தாந்தமே வீழ்ந்துவிட்டதாக பெரும்பான்மையானோர் கருதுகிறார்கள். ஒரே ஒரு நடைமுறை அமலாக்கம் தோல்வியுற்றதால் அந்த கருத்தாக்கமே தோல்வியடைந்துவிட்டதாக முடிவுகட்டிவிடலாமா? அப்படிப் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பொருளாதார வீழ்ச்சிகள், தாராளமயம்/உலகமயம் அறிமுகமாகிய சில காலத்திலேயே வறுமையிலும், குளறுபடிகளிலும் சிக்கும் எண்ணற்ற நாடுகள் போன்றவை முதலாளித்துவத்தின் தோல்வி என்று ஏன் நாம் எடுத்துக்கொள்வதில்லை? வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றால் பரவாயில்லை. சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளும் திரித்துக்கூறப்படுவது சரியா? நாம் ஒன்றும் சில நூற்றாண்டுகளோ பல ஆயிரம் ஆண்டுகளோ முந்தைய பழைய வரலாற்றைப் பற்றி பேசவில்லை. இன்று 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பிறந்தபோது சோவியத் ஒன்றியம் உயிரோடு இருந்தது. வெறும் 25 ஆண்டுகள்... நம் அம்மா அப்பா, தாத்தா பாட்டி என்று எல்லோரும் பார்த்து, கோட்டு, வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டன? பொதுப்புத்தியில் இருந்தே அழித்தொழிக்கப் பட்டுவிட்டதே?

வணிகவியல், பொருளாதாரம் போன்ற பட்டப் படிப்பு படித்தவர்களிடம்கூடக் கேளுங்கள், "பங்குச் சந்தையே இல்லாமல் அவ்வளவு பெரிய பொருளாதாரம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் பல சோதனைகளைக் கடந்து பற்பல  சாதனைகளைப் புரிந்து வெற்றிநடை போட்டது அவர்கள் பாடத்தில் உண்டா?" என்று. பலருக்கு அது தெரியவே தெரியாது. சிலர் சோவியத் ஒன்றியத்தை நேரடியாக அமெரிக்காவோடோ, ஐரோப்பிய நாடுகளோடோ ஒப்பிட்டு அதன் சாதனைகளை சிறுமைப்படுத்துவதும் உண்டு. அமெரிக்கா போல அடிமைகளின் உழைப்புச் சுரண்டலோ, ஐரோப்பிய நாடுகள் போல காலனிய ஏகாதிபத்தியச் சுரண்டலோ இல்லாமல் வெறும் 75 வருடம் நடந்த பொதுவுடைமை ஆட்சியை பலநூறு ஆண்டுகளாக அடாவடி ஆட்சி புரிந்த நாடுகளுடன் ஒப்பிடுவதா? இதுதான் கல்வி அவர்களுக்குக் கொடுக்கும் புரிதலா?

"ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். சோவியத் மக்கள் பஞ்சம் பட்டினியில் செத்தார்கள். அங்கு சுதந்திரமே கிடையாது." என்பன போன்ற பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. அவற்றை எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை. ஒரு பொருளாதார சக்தியாக சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் என்ன? 1917ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது, விவசாயக் கூலிகள் பெரும்பான்மையாக வாழ்ந்த, தொழில் புரட்சிக்கு முற்பட்ட, கல்வி அறிவு, மின்சாரம் போன்ற எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு மன்னராட்சி நாடகத் தொடங்கிய இவ்வொன்றியம் என்னவெல்லாம் சாதித்தது என்று பார்ப்போம்.

1. அனைவருக்கும் உணவு உறுதிப்படுத்தப் பட்டது. இன்றும் கூட இதுபோன்ற ஒரு உத்திரவாதம் வளர்ந்தநாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட இல்லை!

2. மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் விலையில்லாமல் கொடுக்கப்பட்டது.
3. அனைவருக்கும் கல்வி உறுதிசெய்யப்பட்டது. கட்டாய, விலையில்லா கல்வி, வயது, இனம், மதம் மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சென்றடைந்தது.

4. உலக அளவில் பெரிய அம்மை நோய் ஒழிப்பில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிகப் பெரியது.
5. உலகிலேயே அதிக புத்தகங்களை அச்சிட்ட நாடு. உலகின் மீத எல்லா நாடுகளும் அச்சிட்ட அளவை விட அதிக நூல்களை அச்சிட்ட பெருமை சோவியத் ஒன்றியத்தைச் சேரும். உலக மொழிகள் பலவற்றிலும் நல்ல நூல்களை தயாரித்து மலிவு விலையில் ஏற்றுமதியும் செய்தது. தமிழில்கூட பல நூல்கள் வெளியிடப்பட்டன.

6. 15% மக்கள்தொகை வளர்ச்சி இருந்த காலத்தில் 55% தொழில் வல்லுநர்கள் வளர்ச்சியை எட்டியது.
7. இசை மற்றும் இதர கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. பெரும்பான்மை மக்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.

8. வணிகமயமாக்கப்படாத கல்வி, பொழுதுபோக்கு, தொலைகாட்சி போன்றவை மக்களிடமும் இளைய தலைமுறையினரிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துச் சென்றன.
9. அனைவருக்கும் விலையில்லா, தரமான மருத்துவம் கொடுத்த முதல் நாடும் இதுவே!

10. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் உறுதிசெய்யப்பட்டது.
11. பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் பங்கேற்க இருந்த தடைகள் தகர்க்கப்பட்டன.

12. உடல் உறுப்புகள் தானம்/மாற்று அறுவைசிகிச்சைகள் முதலில் வந்ததும் இங்குதான்.
13. புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது சராசரி ஆயுள்காலம் இரட்டிப்பானது.

14. குழந்தைகள் இறப்பு விகிதம் பத்தில் ஒரு பங்காகக் குறைந்தது.
15. 1972க்குள் 4,84,000 மருத்துவர்கள் மற்றும் 22,24,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் என்று மருத்டுவத்துறை அபரீத வளர்ச்சி அடைந்தது.

16. பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாச்சாரப் பிரிவுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவியது.
17. இன்று ஐரோப்பியர்கள் நிம்மதியாக இருப்பதற்கு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காலனிகளில் இருந்து வந்து இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்ட வீரர்கள் காரணம். அதுபோல உலகையே அச்சுறுத்திய நாஜி ஜெர்மனியை வீழ்த்த சோவியத் வீர்கள் செய்த தியாகமும் மிகப் பெரியது. கிட்டத்தட்ட 2 கோடி உயிர்களை தியாகம் செய்து ஹிட்லரை வீழ்த்தியது.

18. இந்த பொதுவுடைமை சமுதாயத்தை முளையிலேயே கிள்ளி எரித்துவிட 14 முதலாத்துவ நாடுகள் ஒன்றுதிரண்டு போர்தொடுத்தன. மேலும் உள்நாட்டு சாதிகளும் செய்யப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து சுயமாக முன்னேறி வந்தது சோவியத் ஒன்றியம்.
19. மின்சார  ரயில்,அணுமின் நிலையங்கள், பெரிய அணைகள், பசுமைப் புரட்சி, பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் என்று 5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

20. வெறும் 40 வருடங்களில் குதிரை வண்டிகளில் போய்க்கொண்டிருந்த மன்னராட்சி, விண்வெளியை எட்டிப்பிடித்த மக்களாட்சியாக மாறியது. சோவியத் விண்வெளியில் செய்த சாதனைகள் தனிப் பதிவாகவே போடவேண்டும்! [இங்கே படிக்கவும்]

இப்போது சொல்லுங்கள். வெறும் 75 ஆண்டுகள்கூட முழுதாக இல்லாத இந்த பொதுவுடைமை கூட்டமைப்பின் சாதனைகள் நாம் எளிதில் கடந்துசெல்லக்கூடியாவைகளா?

நன்றி: http://www.northstarcompass.org

விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள்

1957: முதல் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - ஆர் 7 செம்யோர்க்கா
1957: முதல் புவியை சுற்றும் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக் 1
1957: விண்வெளியில் முதல் உயிரினம் - லைக்கா (நாய்) - ஸ்புட்னிக் 2
1959: புவியின் ஈர்ப்பைத் தாண்டிய முதல் ஏவுகணை - லூனா 1
1959: புவியிலிருந்து விண்வெளிக்கு நடந்த முதல் தொலைத்தொடர்பு - லூனா 1
1959: நிலவின் அருகில் சென்ற முதல் செயற்கைக்கோள் - லூனா 1
1959: நிலவில் இறங்கிய முதல் விண்கலம் - லூனா 2
1959: நிலவின் பின்புறத்தை ஆராய்ந்த முதல் செயற்கைக்கோள் - லூனா 3
1960: செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - மார்ஸ்னிக் 1
1961: வெள்ளியை நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - வெனீரா 1
1961: விண்வெளியில் முதல் மனிதன் - யூரி ககாரின்- வோஸ்டோக் 1
1961: ஒருநாள் முழுவதும் விண்வெளியில் சுற்றிய முதல் மனிதன் - கெர்மன் டிடோவ் - வோஸ்டோக் 2
1962: ஒரே சமயத்தில் இரு விண்வெளி வீரர்கள் - வோஸ்டோக் 3 மற்றும் வோஸ்டோக் 4
1963: விண்வெளியில் முதல் பெண் - வாலெண்டின டெரெஷ்கோவ் - வோஸ்டோக் 6
1964: மூன்று விண்வெளி வீரர்கள் ஒரே கலத்தில் - வோஸ்கோத் 1
1965: முதல் விண்வெளி நடை - அலெக்சி லியோனோவ் - வோஸ்கோத் 2
1965: வேறு கோளை அடைந்த முதல் விண்கலம் - வெனீரா 3
1966: நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் - லூனா 9
1966: நிலவன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் கலம் - லூனா 10
1967: ஆளில்லா விண்கலங்கள் சந்திப்பு - காஸ்மோஸ் 186 & காஸ்மோஸ் 188
1969: இரு விண்கலங்கள் சந்தித்து அதில் இருந்த மனிதர்கள் இடம் மாறியது - சோயூஸ் 4 & சோயூஸ் 5
1970: புவியில் இருந்து நிலவுக்கு முதல் தகவல் அனுப்பப்பட்டது - லூனா 16
1970: நிலவில் முதல் நகரும் கலம் - லூனாகோத் 1
1970: வேறு கோளில் இருந்து வந்த முதல் தகவல் - வெனீரா 7
1971: முதல் விண்வெளி நிலையம் - சல்யூட் 1
1971: செவ்வாயைச் சுற்றிய மற்றும் தரை இறங்கிய முதல்  விண்கலம் - மார்ஸ் 2
1984: விண்வெளியில் நடந்த முதல் பெண் - ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா - சல்யூட் 7
1986: இரு விண்வெளி நிலையங்களுக்குச் சென்ற முதல் குழு - சல்யூட் & மிர் (7 நபர்கள்)
1986: முதல் நிரந்தர விண்வெளி ஆய்வு நிலையம் - மிர் 1986 - 2001
1987: ஒருவருடத்திற்கு மேல் விண்வவெளியில் கழித்த முதல் குழு - விளாடிமிர் டிடோவ் & மூஸா மனரோவ் - மிர்

நன்றி: விக்கிபீடியா, http://www.northstarcompass.org

Friday, August 11, 2017

"துளிர்"க்கட்டும் அறிவியல் ஆர்வம்

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சமூக வலைத்தளங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சு ஊடகங்களாகட்டும், எங்கு திரும்பினாலும் போலி அறிவியலின் தாக்குதல் எட்டுத்திக்கும் இருந்து சீறிப்பாய்கிறது. திரைப்படங்களைச் சொல்லவே வேண்டாம். "மனிதனின் சராசரி ஆயுள்காலம் 300 வருடம்" என்றெல்லாம் வசனம் பேசி கைதட்டலும் காசும் சம்பாதித்துவிட்டு அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள், பார்க்கும் நம் மக்களோ அறிவைத்தொலைத்துவிட்டு மூடமயக்கத்தில் தடுமாறுகிறார்கள். அறிவியல் பற்றிய பத்திரிக்கைகள் வெகு சிலவே கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை விலை அதிகமுள்ளவையாகவும், ஆங்கிலப் பாதிப்புகளாகவும் உள்ளன. தமிழில் ஒரு நல்ல அறிவியல் பத்திரிகை இருந்தால்? அதுவும் அது குறைந்தவிலையில் எல்லோரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் இருந்தால்? எவ்வளவு நன்றாக இருக்கும்?
அப்படி ஒரு மாத இதழ் இருக்கிறது! தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாத இதழ், "துளிர்" என்ற பெயரில் வெளிவருகிறது. இதழ் ஒன்றுக்கு 10 ரூபாய் என்கிற நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. வெறும் 100 ரூபாய் சந்தா செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் உங்கள் வீடு தேடியே வரும்! சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் பார்க்க இதைவிட அதிகம் செலவாகும். ஒரு சின்ன பொம்மை இதைவிட அதிக விலை இருக்கும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ, அல்லது உங்கள் உறவினர்/நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ ஒருவருட சந்தாவைக் கட்டி அவர்கள் வீடுதேடி இவ்விதழ் மாதம்தோறும் வரும்வகையில் ஒரு அன்பளிப்பைத் தரலாம். நீங்களும் இவ்விதழை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவை கூர்மையாக வைத்துக்கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும் அறிவியல் கருத்துக்கள் சரியாகப் புரியாமலோ அல்லது அறிவியல் ஆர்வத்தின் மிகுதியிலோ குழந்தைகள் எழுப்பும் கேள்விகள் ஏராளம். ஆனால் பொறியியலோ மருத்துவமோ பயின்ற பெற்றோர்கள்கூட அக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் தடுமாறும் நிலையில் உள்ளனர். இதுவே அவர்களிடம் ஏதாவது மூடநம்பிக்கைகள் குறித்துக் கேட்டுப் பாருங்கள்? பக்கம் பக்கமாக விளக்குவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் துளிர் இதழ் இருந்தால், நீங்களும் உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு இளைய தலைமுறைக்கும் பயன்படும் வகையில் அதைப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள்கூட தங்கள் ஓய்வு நேரத்தில் "துளிர்" இதழை வாசித்து, அதில் உள்ள தகவல்களை எளிய கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

துளிர் அறிவியல் மாத இதழை உங்கள் வீட்டிற்கே வரவழைக்க, கீழ்காணும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.

முகவரி:

துளிர் நிர்வாக அலுவலகம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை 600 086

தொலைப்பேசி எண்: 044 28113630

மின்னஞ்சல் முகவரி: thulirmagazine@gmail.com

சந்தா விவரங்கள்:
ஒரு இதழ்: ரூ. 10/-
ஆண்டுச் சந்தா: ரூ. 100/-
ஆண்டுச் சந்தா (வெளிநாடுகளுக்கு): $ 20
ஆயுள்ச் சந்தா: ரூ. 1000/-

Wednesday, August 9, 2017

வந்தேறிச் செடிகள்!

இன்று எல்லாப் பொருட்களிலும் பழமை நல்லது, புதுமை கெட்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்போ, உணவோ, மருந்தோ, உடையோ வந்தால் போதும்! "ஐயோ! நம் முன்னோர்கள் பாரம்பரியம் எல்லாம் போச்சே! பழமையை அழித்துவிட்டோமே! புதியவற்றால் தீமைகள்தான் வரும்!" என்றெல்லாம் முட்டி மோதும் கூட்டம் எங்கிருந்தாவது கிளம்பிவருகிறது. இவர்கள் கூற்றின் படி, நம் முன்னோர்களும் புதுமைகளை ஏற்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்?

வேட்டையாடிய மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது இதேபோல "நம் முன்னோர்கள் விவசாயம் செய்யவில்லை. விவசாயத்தால் காடுகள் அழியும். அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவை. இவற்றை உண்டால் நோய் வரும்!" என்றெல்லாம் போராட்டம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அல்லது நெருப்பை மூட்ட மனிதன் கற்ற காலத்தில், "நெருப்பு ஆபத்தானது! அதை நம் வீட்டுக்குள் கொண்டு வருவது கூடாது! அதனால் காற்று மாசு படுகிறது!" என்று ஒரு கூட்டம் கோஷம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? இப்படியே சக்கரம், படகுகள், ஆடை, சமைத்த உணவு, உணவில் உப்பு சேர்ப்பது போன்ற ஒவ்வொரு மாற்றத்தையும் பழமைவாதிகள் எதிர்த்திருந்தால் நாம் இன்று மகிழ்ச்சியாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்திருக்கலாம்!

இப்படிப் பழம்பெருமை பேசும் பலருக்கும், நம் முன்னோர்கள் புதுமையை வரவேற்று ஏற்றுக்கொண்டு முன்னேறியவர்கள் என்பது தெரியாது. இன்று அவர்கள் பழமை என்று தூக்கிப்பிடிக்கும் பலவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் புதுமையாக நம் முன்னோர்கள் பார்த்தவையே! "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!" என்ற இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், நம் முனோர்களைப் போல நாமும் புதுமையைக் கண்டு அஞ்சாமல், அதை ஆராய்ந்து ஏற்பதே நல்லது.

அவ்வகையில் நம் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்ட புதுமைகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் புதுமைகள் இன்று எவ்வாறு பழமைகளாகப் பார்க்கப்படுகின்றன என்று கவனியுங்கள். ஒரு குறுகிய வலைப்பதிவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாததால், 1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்க கண்டங்களைக் கண்டறிந்த பின், அக்கண்டங்களில் இருந்து ஐரோப்பியர்கள் மூலம் நம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சில தாவர வகைகளை மட்டும் பார்ப்போம். அதாவது, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தாவரங்களோ அவை தரும் காய்கனிகளோ, நம் முன்னோர்கள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள பலவும் இன்று நம் "பண்பாடு, பாரம்பரியம், மரபு" வட்டத்துக்குள் இருப்பதைக் கவனியுங்கள். இன்னும் 500 வருடங்களில், பிட்சாவும், நூடுல்சும் நம் பரம்பரியமானாலும் வியப்பதற்கல்ல!

குடை மிளகாய் - சில்லி சிக்கன் முதல் பச்சடி வரை...

முந்திரிப்பருப்பு - இது இன்று நம் பாரம்பரிய உணவாகப் பார்க்கப்படும் ஒன்று. முந்திரி பக்கோடா, முந்திரி அல்வா, முந்திரி ஸ்வீட், பொங்கல், லட்டு, பாயசம்,புலவு என்று நம் பாரம்பரிய உணவுகள் பலவும் முந்திரியால் சிறப்புப் பெறுகின்றன. "முந்திரிக்கொட்டை போல" என்ற வழக்கும்கூட நம் மொழியில் இருப்பது வியப்பே!

மிளகாய் - மீன்குழம்பு, சாம்பார், சட்டினி, வடை, இட்டிலிப் பொடி இப்படி எது எடுத்தாலும் மிளகாய்ப் பொடி இல்லாமல் ருசிக்குமா? ஒருநாள் உங்கள் சமையலறையில் மிளகாய்ப் பொடி டப்பாவை ஒளித்துவைத்துவிட்டு சமையல் செய்ய முயலுங்கள். நீங்கள் தமிழரின் பாரமபரிய உணவுகள் என்று நம்பும் பலவும் இந்த அமெரிக்க இறக்குமதி இல்லாமல் சமைக்க முடியாது! இதில் இந்த மிளகையைக் கொண்டு திருஷ்டி கழிப்பது, வாகனங்களைப் பாதுகாப்பது போன்ற விஞானங்கள் வேறு! 500 வருடங்களுக்கு முன் இல்லாத இந்தப் பழக்கங்கள் இன்று நம் பண்பாடு என்று சொல்லும் மனிதர்களை என்னவென்பது?

சீதா/ராமன்-சீதா பழம் - பெயரளவில் நம் நாட்டு இதிகாசங்களின் தாக்கம் இருந்தாலும் இதுவும் வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானதே!

கொய்யாப் பழம் - நம் ஊர்களில் பாட்டிகள் கூடை தூக்கி விற்பார்களே! அதேதான். அதுவும் அமெரிக்க இறக்குமதியே!

மக்காச் சோளம் - இரும்புச் சோளம் மற்றும் இதர சோளங்கள் ஏற்கனவே இருந்தாலும், மக்காச் சோளம் புதுவரவே! இதில் நாட்டு மக்காச் சோளம், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் என்று நாம் வகை பிரித்தாலும் இரண்டுமே அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையே!

மரவள்ளிக் கிழங்கு - கிராமிய உணவாகப் பார்க்கப்படும் இதுவும் சில நூற்றாண்டுகளாக இங்கு வந்தேறிய பயிர்!

பப்பாளி - மெக்சிக்கோ நாட்டைத் தாயமாகக் கொண்ட மரம். இந்த மரத்தின் இலைச்சாறு டெங்குவைக் குணப்படுத்தும் என்று அரசாங்கமே விளம்பரம் போடுகிறது. ஆனால் இதன் தாயகமான மெக்சிக்கோவிலோ டெங்குவிற்கு தடுப்பூசி போடுகிறார்கள்!  இதைச் சிலர் சித்த மருத்துவம் என்றுகூடச் சொல்கிறார்கள். எந்தச் சித்தர் எந்த நூலில் பப்பாளி பற்றிக் குறிப்பெழுதியுள்ளார்? சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.

நிலக் கடலை - கடலை போடுவது முதல் "பாரம்பரிய மரச்செக்கு கடலெண்ணெய்" வரை கடலை நம் உணவிலும் வாழ்விலும் கலந்த ஒன்று. ஆனால் ஒரு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இதைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை! கடலை மிட்டாய், கடலை எண்ணெய் பலகாரம் இதெல்லாம் நம் பாரம்பரியம் என்று நம்புபவர்கள் பலர். உண்மையில் இது சில நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட பயிரே!

அன்னாசிப் பழம் - எனக்கு மிகவும் பிடித்த பழம். தனியாக ஒரு முழு பழத்தைக் கூட சாப்பிட்ட நாட்கள் உண்டு! பிரேசில் நாட்டைத் தாயகமாக் கொண்டது இப்பழம்.

உருளைக்கிழங்கு - மற்றுமொரு "பாரம்பரியம்". பூரி கிழங்கு முதல் ஆலு பரோட்டா வரை! வட நாட்டின் உயிர் மூச்சான இந்த "ஆலு" அமெரிக்காவில் இருந்து வந்த "விதேசி" பயிர். அமெரிக்க விதேசி பயிரான உருளைக்கிழங்கைத் தடை செய்துவிட்டால் வடாஇந்தியர்கள் பாடு திண்டாட்டம்தான்!

பூசணி - பரங்கிக்காய் (வெள்ளைப் பூசணி ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது!)

சப்போட்டா - "சிக்கு" என்று வடஇந்தியர்களால் (வடஇந்தியத் தாக்கம் உள்ள தமிழர்களினாலும்) அறியப்படும் இப்பழம் மெக்சிகோ இறக்குமதி.

சூரியகாந்தி - எண்ணெய் வித்தாகப் பயன்படும் இப்பயிர் வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து வந்தது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பெயரைக்கேட்டால் தூய தமிழாகத்தான் உள்ளது... ஆனால் சொந்த ஊர் தென்-அமெரிக்கா.

புகையிலை - புகையிலைப் பாக்குகளைக் குதப்பி, அங்கங்கு துப்பி வைப்பது வடஇந்தியர்கள் நடமாடும் பகுதி என்பதன் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு நம் "கலாச்சாரத்தில்" கலந்தது இந்தப் புகையிலை. வெற்றிலையோடு புகையிலை போடும் பழக்கம் தமிழகத்திலும் இருந்தது (இன்னும் சிலரிடம் இருக்கிறது). எல்லாவற்றிற்கும் மேல், சில தெய்வங்களுக்கு சுருட்டு படைத்து வழிபாடும் வழக்கம் உள்ளது. இந்த எல்லா "பாரம்பரியங்களும்" வெள்ளைக்காரன் கொண்டுவந்த உயிர்கொல்லிப் புகையிலைமீது கட்டப்பட்டுள்ளது!

தக்காளி - கிலோ 120 ரூபாய் விற்றாலும் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் வங்கியில் கடன் வாங்கியாவது தக்காளி வாங்குகிறோம் அல்லவா? அந்தத் தக்காளியும் வெள்ளைக்காரன் கொண்டுவந்ததுதான். ரசம், சாம்பார், குழம்பு என்று நீக்கமற நம் உணவில் நிறைந்துள்ள தக்காளி நம் முன்னோர்களுக்கு ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தியபோது புதுமையாகவே இருந்திருக்கும்.

முன்பே கூறியது போல நாம் இயல்பாக நம் மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நம்பும் பலவும் நம் முன்னோர்களுக்கு புதியவையாகவும் அந்நியமாகவும் இருந்தவையே! அவர்கள் நம்மைப்போல முன்னோர் பெருமை பேசி இந்தப் புதுமைகளை ஏற்காமல் விட்டிருந்தால் வத்தல் குழம்பும் வஞ்சிர மீன் வறுவலும் நம் உணவுகளாக இருந்திருக்காது! புதுமைகள் எல்லாமே தீமை என்று எண்ணி அஞ்சாமல் அவற்றில் நல்லவற்றை எடுத்து தீயவற்றைத் தவிர்ப்போம்!

Wednesday, August 2, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 8

நூலின் தலைப்பு: தி கிரேட்டெஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth)
ஆசிரியர்: ரிச்சர்டு டாவ்கின்ஸ்
பக்கங்கள்: ~500
வெளியீடு: டிரான்ஸ்வேர்ல்டு வெளியீடு
மொழி: ஆங்கிலம்
விலை: ~ ரூ. 400/-
வயது: 15+
பொருள்: அறிவியல், உயிரியல், பரிணாமம்
"இவ்வுலக மேடையில் நாம் அனைவரும் நடிகர்கள்!" என்ற ஷேக்ஸ்பியர் கூற்றுப்படி, உலகிலேயே பல கோடி ஆண்டுகளாகத் தொடந்து நடந்துவரும் நாடகம் எது? அனைத்து உயிர்களாலும் கூட்டாக நடத்தப் படும் பரிணாமமே அது! அத்தகைய பரிணாமத்தை பாடத்தில் படிக்கும்போது நாம் புரிந்துகொள்வது கொஞ்சமே. அந்தப் புரிதலும் பெரும்பாலான நேரங்களில் தவறாகவே உள்ளது. ஆனால் மத வியாபாரமும் போலி அறிவியலும் மலிந்துள்ள இன்றைய சூழலில் பரிணாமக் கோட்பாடைச் சரியாகப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. இந்நூல் அந்த முக்கியமான பணியைச் செய்கிறது.

சுமார் 500 பக்கங்கள் நீளும் இந்நூல் சற்றுப் பெரியதுதான். மேலும் குறைந்தது 15 வயதாவது ஆனா அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் ஆர்வம் மற்றவர்களும், சிறுவயதினரும், பிறர் உதவியுடன் படிக்கலாம் அல்லது இந்நூலைப் படித்தவர்கள் அவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம். எளிய சோதனை விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் விரித்தல் மூலம் டாவ்கின்ஸ் அவர்கள் பரிணாமக் கோட்ப்பாட்டை முடிந்தவரை எளிமையாக நம் முன் வைக்கிறார். மேலும் இதனால் பரிணாமம் குறித்த சரியான புரிதல் நமக்கு கிடைக்கிறது (இது தான் மிக முக்கியமான சிறப்பம்சம்!).

English Summary:  

Book Title: The Greatest Show on Earth
Author: Richard Dawkins
Pages: ~500
Publisher: Transworld Publishers
Language: English
Price: ~ Rs. 400/-
Age Group: 15+ 
Category: Science, Biology, Evolution