Wednesday, August 30, 2017

சோவியத் ஒன்றியம் என்ன கிழித்தது?

சோவியத் ஒன்றியம் வீழ்ந்துவிட்டதால் பொதுவுடைமைச் சித்தாந்தமே வீழ்ந்துவிட்டதாக பெரும்பான்மையானோர் கருதுகிறார்கள். ஒரே ஒரு நடைமுறை அமலாக்கம் தோல்வியுற்றதால் அந்த கருத்தாக்கமே தோல்வியடைந்துவிட்டதாக முடிவுகட்டிவிடலாமா? அப்படிப் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பொருளாதார வீழ்ச்சிகள், தாராளமயம்/உலகமயம் அறிமுகமாகிய சில காலத்திலேயே வறுமையிலும், குளறுபடிகளிலும் சிக்கும் எண்ணற்ற நாடுகள் போன்றவை முதலாளித்துவத்தின் தோல்வி என்று ஏன் நாம் எடுத்துக்கொள்வதில்லை? வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றால் பரவாயில்லை. சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளும் திரித்துக்கூறப்படுவது சரியா? நாம் ஒன்றும் சில நூற்றாண்டுகளோ பல ஆயிரம் ஆண்டுகளோ முந்தைய பழைய வரலாற்றைப் பற்றி பேசவில்லை. இன்று 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பிறந்தபோது சோவியத் ஒன்றியம் உயிரோடு இருந்தது. வெறும் 25 ஆண்டுகள்... நம் அம்மா அப்பா, தாத்தா பாட்டி என்று எல்லோரும் பார்த்து, கோட்டு, வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டன? பொதுப்புத்தியில் இருந்தே அழித்தொழிக்கப் பட்டுவிட்டதே?

வணிகவியல், பொருளாதாரம் போன்ற பட்டப் படிப்பு படித்தவர்களிடம்கூடக் கேளுங்கள், "பங்குச் சந்தையே இல்லாமல் அவ்வளவு பெரிய பொருளாதாரம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் பல சோதனைகளைக் கடந்து பற்பல  சாதனைகளைப் புரிந்து வெற்றிநடை போட்டது அவர்கள் பாடத்தில் உண்டா?" என்று. பலருக்கு அது தெரியவே தெரியாது. சிலர் சோவியத் ஒன்றியத்தை நேரடியாக அமெரிக்காவோடோ, ஐரோப்பிய நாடுகளோடோ ஒப்பிட்டு அதன் சாதனைகளை சிறுமைப்படுத்துவதும் உண்டு. அமெரிக்கா போல அடிமைகளின் உழைப்புச் சுரண்டலோ, ஐரோப்பிய நாடுகள் போல காலனிய ஏகாதிபத்தியச் சுரண்டலோ இல்லாமல் வெறும் 75 வருடம் நடந்த பொதுவுடைமை ஆட்சியை பலநூறு ஆண்டுகளாக அடாவடி ஆட்சி புரிந்த நாடுகளுடன் ஒப்பிடுவதா? இதுதான் கல்வி அவர்களுக்குக் கொடுக்கும் புரிதலா?

"ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். சோவியத் மக்கள் பஞ்சம் பட்டினியில் செத்தார்கள். அங்கு சுதந்திரமே கிடையாது." என்பன போன்ற பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. அவற்றை எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை. ஒரு பொருளாதார சக்தியாக சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் என்ன? 1917ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது, விவசாயக் கூலிகள் பெரும்பான்மையாக வாழ்ந்த, தொழில் புரட்சிக்கு முற்பட்ட, கல்வி அறிவு, மின்சாரம் போன்ற எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு மன்னராட்சி நாடகத் தொடங்கிய இவ்வொன்றியம் என்னவெல்லாம் சாதித்தது என்று பார்ப்போம்.

1. அனைவருக்கும் உணவு உறுதிப்படுத்தப் பட்டது. இன்றும் கூட இதுபோன்ற ஒரு உத்திரவாதம் வளர்ந்தநாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட இல்லை!

2. மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் விலையில்லாமல் கொடுக்கப்பட்டது.
3. அனைவருக்கும் கல்வி உறுதிசெய்யப்பட்டது. கட்டாய, விலையில்லா கல்வி, வயது, இனம், மதம் மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சென்றடைந்தது.

4. உலக அளவில் பெரிய அம்மை நோய் ஒழிப்பில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிகப் பெரியது.
5. உலகிலேயே அதிக புத்தகங்களை அச்சிட்ட நாடு. உலகின் மீத எல்லா நாடுகளும் அச்சிட்ட அளவை விட அதிக நூல்களை அச்சிட்ட பெருமை சோவியத் ஒன்றியத்தைச் சேரும். உலக மொழிகள் பலவற்றிலும் நல்ல நூல்களை தயாரித்து மலிவு விலையில் ஏற்றுமதியும் செய்தது. தமிழில்கூட பல நூல்கள் வெளியிடப்பட்டன.

6. 15% மக்கள்தொகை வளர்ச்சி இருந்த காலத்தில் 55% தொழில் வல்லுநர்கள் வளர்ச்சியை எட்டியது.
7. இசை மற்றும் இதர கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. பெரும்பான்மை மக்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.

8. வணிகமயமாக்கப்படாத கல்வி, பொழுதுபோக்கு, தொலைகாட்சி போன்றவை மக்களிடமும் இளைய தலைமுறையினரிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துச் சென்றன.
9. அனைவருக்கும் விலையில்லா, தரமான மருத்துவம் கொடுத்த முதல் நாடும் இதுவே!

10. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் உறுதிசெய்யப்பட்டது.
11. பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் பங்கேற்க இருந்த தடைகள் தகர்க்கப்பட்டன.

12. உடல் உறுப்புகள் தானம்/மாற்று அறுவைசிகிச்சைகள் முதலில் வந்ததும் இங்குதான்.
13. புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது சராசரி ஆயுள்காலம் இரட்டிப்பானது.

14. குழந்தைகள் இறப்பு விகிதம் பத்தில் ஒரு பங்காகக் குறைந்தது.
15. 1972க்குள் 4,84,000 மருத்துவர்கள் மற்றும் 22,24,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் என்று மருத்டுவத்துறை அபரீத வளர்ச்சி அடைந்தது.

16. பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாச்சாரப் பிரிவுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவியது.
17. இன்று ஐரோப்பியர்கள் நிம்மதியாக இருப்பதற்கு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காலனிகளில் இருந்து வந்து இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்ட வீரர்கள் காரணம். அதுபோல உலகையே அச்சுறுத்திய நாஜி ஜெர்மனியை வீழ்த்த சோவியத் வீர்கள் செய்த தியாகமும் மிகப் பெரியது. கிட்டத்தட்ட 2 கோடி உயிர்களை தியாகம் செய்து ஹிட்லரை வீழ்த்தியது.

18. இந்த பொதுவுடைமை சமுதாயத்தை முளையிலேயே கிள்ளி எரித்துவிட 14 முதலாத்துவ நாடுகள் ஒன்றுதிரண்டு போர்தொடுத்தன. மேலும் உள்நாட்டு சாதிகளும் செய்யப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து சுயமாக முன்னேறி வந்தது சோவியத் ஒன்றியம்.
19. மின்சார  ரயில்,அணுமின் நிலையங்கள், பெரிய அணைகள், பசுமைப் புரட்சி, பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் என்று 5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

20. வெறும் 40 வருடங்களில் குதிரை வண்டிகளில் போய்க்கொண்டிருந்த மன்னராட்சி, விண்வெளியை எட்டிப்பிடித்த மக்களாட்சியாக மாறியது. சோவியத் விண்வெளியில் செய்த சாதனைகள் தனிப் பதிவாகவே போடவேண்டும்! [இங்கே படிக்கவும்]

இப்போது சொல்லுங்கள். வெறும் 75 ஆண்டுகள்கூட முழுதாக இல்லாத இந்த பொதுவுடைமை கூட்டமைப்பின் சாதனைகள் நாம் எளிதில் கடந்துசெல்லக்கூடியாவைகளா?

நன்றி: http://www.northstarcompass.org

No comments: