Sunday, February 26, 2017

தடுப்பூசிகள் தேவையே!

தடுப்பூசிகள் தேவையே! அரசு இலவசமாக வழங்கும் எம்.ஆர். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. MR (Measles  Rubella) தடுப்பூசி இரு கொடிய நோய்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும். பணக்காரர்கள் மட்டுமே பெற்று வந்த MMR ஊசி போன்ற இந்த தடுப்பூசியை இன்று நம் அரசு அனைவருக்கும் இலவசமாக்கியுள்ளது. இதற்க்கு நாம் அரசுக்கும், இதை முன்னெடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
இன்று கையில் செல்போன் மற்றும் ஜியோ தரும் இலவச இணைய இணைப்பை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் தடுப்பூசிகளுக்கு எதிராக எழுதி வருகிறது. இவர்களில் யாரும் (முறையாக மருத்துவம் பயின்ற) மருத்துவர்கள் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் போலி அறிவியல் துணையோடு பிழைப்பு நடத்தும் அற்ப ஜந்துக்கள். சிலர் மத/ஆன்மீக வியாபாரிகள். இவர்கள் அனைவரும் நம் நாட்டு அரசையும் அறிவியல் மற்றும் மருத்துவ சமுதாயத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர். யாரும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. ஆனால் கேள்வி கேட்க ஒரு தகுதியும் நியாமமும் இருக்க வேண்டும். சந்தேகம் வேறு, அவதூறு வேறு. நேற்று நான் ஒரு கடைக்குச் சென்றேன். அருகில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே கூட்டம். கடைக்காரரிடம் கேட்டேன். அவன் கூறிய பதில் என்னை அதிர வைத்தது. எம். ஆர் தடுப்பூசி அறிவிப்பு வந்த நாள் முதல் இங்கு கூட்டம் அலைமோதுவதாகக் கூறினார். மக்கள் அரசை விட, மருத்துவர்களை விட, அறிவியலாளர்களை விட வாட்சாப்பையும் பேஸ்புக்கையும் நம்பும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற சிந்தனை என்னை இப்போதும் நெருடுகிறது.

அலுவலகத்தில் அருகில் இருந்த நண்பரிடம் பேசினேன். அவர் சொல்கிறார் "எல்லா வைரஸும் நிலவேம்புக்கு சாகும். எனவே தடுப்பூசி போடா வேண்டாம்" என்று. நான் கேட்டேன், "போலயோ, பெரியம்மை போன்ற நோய்களை நிலவேம்பு அல்லது இயற்க்கை மருத்துவம் மூலம் முற்றிலும் அளித்திருக்க முடியுமா?" என்று. அவர் "கண்டிப்பாக!" என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! பொறியியல் படித்து, 3ஜி, 4ஜி என்று சுத்தும் மேதைகளின் பேதைமை இப்படி! முயற்சியை விடாத நான், "வெறி நாயிடம் கடிபட்டாலும் ஊசி போடா மாடீர்களா?" என்றேன். சுதாரித்த நண்பர் "உங்கள் விதண்டாவாதம் தவறு" என்று முடித்துக்கொண்டார்.
என்ன நடக்கிறது இங்கே? இதை எழுதும் நான் கிறிஸ்தவ மிஷனரி என்றோ (என் பெயரை வைத்து), ப.ஜ.க. கட்சிக்காரர் என்றோ (மத்திய அரசு திட்டத்தை ஆதரிப்பதால்), மருந்துக் கம்பெனிகளின் ஏஜென்ட் என்றோ, ஏன், இல்லுமினாட்டி என்றோகூட முத்திரை குத்தப்படலாம். இவர்களைப் பொறுத்தவரையில் உலகத்தில் நடப்பது எல்லாம் சாதி. எல்லாம் பெரிய சூழ்ச்சியின் பகுதி. கேட்டல் "தனி ஒருவன்", "பூலோகம்" என்று ஜெயம் ரவி படங்களை மேற்கோள் காட்டுவார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தில்கூட தமிழர்களின் கலாச்சார உரிமை என்ற நேரடி வாதத்தைவிட ஏ1, ஏ2 புரளிவே போராட்டம் வெடிக்க உதவியது. மீத்தேன் திட்டம், கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ ஆராய்ச்சி, ஹைட்ரோகார்பன் திட்டம் என எதை எடுத்தாலும் ஒரு அறிவியல் புறம்பான நிலைப்பாட்டை நாம் எடுப்பது சரியா? தக்க பாதுகாப்பு அம்சங்களும், நியாயமான நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தங்களும் வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை. நம்மாழ்வார் சொன்னார், செந்தமிழன் சொன்னார், ஹீலர் பாஸ்கர் சொன்னார் என்று ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு நாட்டின் வளர்ச்சியை முடக்குவது சரியா?

நீங்கள் செய்யாவேண்டியது ஒன்றே! துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்தைக் கேளுங்கள். அதுவும் ஒருவர் இருவர் கூறுவதை மட்டும் அல்ல, பெரும்பான்மை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். அதை உங்கள் அடிப்படை அறிவைக்கொண்டு அலசி ஆராய்ந்து பாருங்கள். பின் ஒரு முடிவுக்கு வாருங்கள். தடுப்பூசி என்றால் மருத்துவர், அணுஉலை என்றால் அணு விஞ்ஞானிகள் என்று எல்லாவற்றிற்கும் படித்த வல்லுநர்கள் நிறைந்த நாடு நம் நாடு. அவர்களை விட்டு விட்டு தெருவில் போகும் குடுகுடுப்பைக்காரன் அளவுக்கே அறிவு உள்ள, பயத்தையும் பொய்களையும் மட்டுமே விற்று பிழைப்பு நடத்தும் ஆட்களை நம்பினால் நாம் எப்படி வல்லரசு ஆவோம்?

பல லட்சம் குழந்தைகளுக்குப் போடும் ஊசியில் சதி செய்யும் கேவலமான அரசும் மருத்துவர்களும் உள்ள நாடா இந்தியா? இன்னும் உங்களுக்கு இந்த நாட்டின் மீதும் இங்குள்ள அறிவியல் ஆய்வாளர்கள்மீதும் நம்பிக்கை வரவில்லையா? வர வேண்டாம்... குறைந்தபட்சம் உங்கள் குழந்தை விஷயமான தடுப்பூசியை உங்கள் பேஸ்புக்/வாட்சாப் புளுகு மூட்டைகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு அருகில் உள்ள மருத்துவரையோ அல்லது துறை சார்ந்த நிபினரையோ கேளுங்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், தங்களுக்கும் இந்த ஊசியை போடுகிறார்களா என்று கேளுங்கள். அப்போதாவது உங்களுக்கு புரிந்தால் சரி. எக்காரணம் கொண்டும் உங்கள் மூட நம்பிக்கை ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தில் விளையாட அனுமதிக்காதீர்கள்.

Thursday, February 23, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 7

நூலின் தலைப்பு: தி பெஸ்ட் ஆஃப் தாகூர் (The Best of Tagore)
ஆசிரியர்: ரபீந்த்ரநாத் தாகூர்
ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜர்னா பாசு
பக்கங்கள்: 88
வெளியீடு: ஸ்கொலாஸ்டிக் இந்தியா
மொழி: ஆங்கிலம்
விலை: ~ ரூ. 80/-
வயது: 10+
பொருள்: சிறுகதைகளின் தொகுப்பு
இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஐரோப்பியரல்லாதவர், இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒரு மேதை உங்கள் குழந்தைக்கோ ஏன் உங்களுக்கோ கதை சொன்னால் எப்படி இருக்கும்? அந்த அனுபவத்தை பெற இந்த நூல் உதவும். இது தாகூர் என்ற கடலின் ஓரத்தில் நம் போன்ற எளியவர்களும் விளையாடக் கிடைத்த கடற்கரையே!

எளிய ஆங்கிலத்தில், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த நூலில் பத்துக்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. சிறுவர்களுக்கு ஏற்றார் போல ஓவியங்களும் உள்ளன. சிறுவர்களும் புரிந்துகொள்ளும்படியான எளிய உணர்வுகளின் வெளிப்பாடு, நல்லொழுக்கங்கள் மற்றும் தாகூரின் எழுத்தோட்டம் என்று மேலும் பல சிறப்புகள் இந்நூலுக்குண்டு.

English Summary:  

Book Title: The Best of Tagore
Author: Rabindranath Tagore
English Translation: Jharna Basu
Pages: 88
Publisher: Scholastic India
Language: English
Price: ~ Rs. 80/-
Age Group: 10+ 
Category: Short stories collection