Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts

Wednesday, July 5, 2017

தமிழை வளர்க்க என்ன செய்யலாம்? - 5 எளிய செயல்கள்

1. தமிழில் பேசுங்கள்/எழுதுங்கள்!

ஒரு மொழியின் உயிர்ப்பே அதை எவ்வளவு பேர் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறாரகள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தது. நீங்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தமிழிலேயே பேசுங்கள். நாளுக்கு நாள் உங்கள் பேச்சில் உள்ள பிறமொழிச் சொற்களைக் குறைக்க முயலுங்கள். "உதாரணமாக" --> "எடுத்துக்காட்டாக", "சேஞ்ச் இருக்கா?" --> "சில்லறை இருக்கா?", "மொசாம்பி ஜூஸ்" --> "சாத்துக்குடிச் சாறு". இப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை பழக்கப்படுத்துங்கள். சில ஆண்டுகளுக்கு முன், கணினி, இணையம் போன்ற சொற்கள் சிலர் மட்டுமே அறிந்ததாக இருந்தன. இன்றோ பெரும்பான்மை தமிழர்களுக்கு இச்சொற்கள் பரிட்சயமானவை நன்கு தெரிந்தவை.

வங்கி சென்றால் தமிழில் படிவங்களைக் கேளுங்கள். வங்கி, அலைப்பேசி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குத் தமிழிலேயே பதிலளியுங்கள். அவர்கள் வேறு மொழி பேசினால், தமிழ் தெரிந்த ஒருவரைப் பேசச் சொல்லுமாறு கூறும் உரிமை நமக்குண்டு! இப்படி அதிக எண்ணிக்கையில் தமிழில் சேவைகள் பெறப்படும்போது, அவற்றின் அவசியம் அந்நிறுவனங்களுக்கும் புரியும். தமிழ் நூல்கள், செய்தித் தாள்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை அதிகம் படியுங்கள். தமிழுக்குச் சந்தை மதிப்பு அதிகரித்தால், தானாகப் பல நிறுவனங்கள் தமிழில் தங்கள் நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்களை மொழிபெயர்த்து வெளியிடுவர்.

2. தமிழ்வழிக் கல்வி 

இது இன்றைய சூழலில் சற்று சிக்கலான செயலே! தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் இன்னும் சற்று பின்தங்கி உள்ளது மறுக்கமுடியாதது. ஆகவே ஆங்கிலம் நமக்கு இந்த இடைவெளியை நிரப்ப அவசியமாகிறது. அதனால் நாம் கல்வியில் ஆங்கிலத்தை சேர்த்துக்கொள்வது தவறில்லை. தமிழ் என்று எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைகிறதோ, அன்று ஆங்கிலத்தை நாம் அடியோடு நிறுத்திவிடலாம். எப்படி நீச்சல் கற்கச் சுரைக்குடுக்கை உதவுகிறதோ, அதுபோல! அதுவரை ஆங்கிலத்தை அளவோடு கற்போம். ஆங்கிலத்தை இப்படித் தேவைக்குக் கற்றாலும், அதை ஒரு பெருமையாக எண்ணாமல் இருப்பது அவசியம்.


குழந்தைகளுக்கு நாம் ஏன் ஆங்கிலம் கற்கிறோம் என்று சொல்லுங்கள். ஆங்கிலம், அறிவின் அடையாளமோ, நாகரீகத்தின் குறியீடோ இல்லை. மாறாக அது நாம் இழந்த அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைய உதவும் பாலம் மட்டுமே என்று விளங்க வையுங்கள். இவ்வாறு நாம் தமிழில் மட்டும் எல்லாப் பாடங்களையும் கற்கும் நாளுக்கு அவர்களை ஆயத்தப் படுத்துங்கள். இன்னும் சில தலைமுறைகளில் அது நடக்கும். ஆங்கிலேயர் நம்மை சில காலம் ஆண்டதாலும், ஆங்கிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மொழி என்பதாலும் மட்டுமே ஆங்கிலம் தேவையாகிறது. இந்தி, ப்ரெஞ்சு, ஜெர்மன், சமஸ்க்ருதம் போன்ற மொழிகள் மேற்கூறிய வகையில் நமக்கு உதவாதவைகள்.

3. சமூக வலைத்தளங்களில் தமிழ்

இன்று சமூக வலைத்தங்கள் அனைவரையும் தங்களின் வலையில் சிக்கவைத்துள்ளன. இதையே ஒரு வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கைப்பேசி வாங்கும்போதே அதில் தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அல்லது செயலிகள் மூலம் உங்கள் கைப்பேசியில் தமிழ் உள்ளீடு செய்ய முடியுமா என்று பாருங்கள். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களிலும் தமிழிலேயே உள்ளீடு செய்யுங்கள். வலைப்பூக்கள், யூட்யூப் போன்ற காணொளித் தளங்கள், மற்றும் இதர வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பகிரும்போது தமிழில் பகிருங்கள்.

தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பாருங்கள்

இதன் மூலம் தமிழின் இணைய ஊடுருவல் அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களும் சந்தையைப் பிடிக்க தமிழ் மொழியில் சேவைகளை மேம்படுத்த முற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைய்ப்பேசி நிறுவனங்களும் தமிழ் மொழி உள்ளீடு உள்ள கருவிகளை அதிகம் தயாரிக்க இது ஒரு உந்துதலாக இருக்கும். கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது சற்று கடினமே. ஆனால், கைப்பேசிகள் இன்று இதை எளிதாக்கியுள்ளன. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இணையத்தில் தமிழை அரியணை ஏற்றுவோம்!

4. மொழிபெயருங்கள்

விக்கிபீடியா, ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் போன்ற கட்டற்ற கலைக்களஞ்சியங்கள் மற்றும் மின்-நூலகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். மேலும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் உதவிக் கோப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். இதன் மூலம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணினி மற்றும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் உதவலாம்.


கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைக் காலச் செயல்பாடாக இதுபோன்ற மொழிபெயப்புப் பணிகளை கல்லூரிகள் வழங்கலாம். மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு விடுமுறையில் விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் ஒன்றையோ இரண்டையோ மொழிபெயர்த்தால் சில ஆண்டுகளில், எந்த அளவுக்கு நாம் மருத்துவ அறிவைத் தமிழுக்கு இறக்குமதி செய்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். இப்படியே  வரலாறு, தொல்லியல், உயிரியல், வேதியல், கணிதம், பொறியியல் என்று பலவேறு துறை மாணவர்களும் ஆளுக்கு ஒன்றாகத் தங்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்!

5. புதிய கலைச்சொற்களை கற்றல்/உருவாக்குதல் 

எல்லாவற்றிற்கும் காரணப்பெயர்களா?
(நகைப்புக்காக மாற்றப்பட்ட படம்!)
இது இன்றியமையாத ஒன்று. ஒரு உயிருள்ள மொழி, வளர்ந்துகொண்டே இருக்கும். அகவே, தமிழ் மொழி வளர்வதற்கு அதற்க்குப் புதிய சொற்கள் தேவை. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் ஏராளம். அவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் உருவாக வேண்டும். எல்லாவற்றையும் காரணப்பெயர்களாக மட்டும் வைப்பது சற்றே கடினமான ஒன்று. மிக நீண்ட மற்றும் நகைப்புக்குரிய வகையில் காரணப்பெயர்களை வைப்பதைவிட, சற்று சிறிய, மனதில் நிற்கக்கூடிய எளிய சொற்களை உருவாக்குவதும் இன்றைய தேவை! இச்சொற்களை உருவாக்குவது மொழியியல் வல்லுனர்களின் வேலை! இவ்வாறு உருவான சொற்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, அனைவரது கடமை! ஆகவே உங்கள் ஆர்வத்திற்கேற்ப இவ்வகையிலும் நீங்கள் உதவலாம்!

Wednesday, June 21, 2017

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் - இணையத்தில் உலாவ ஒரு நம்பகமான தோழன்

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் (Fire Fox Focus) ஒரு புதிய ஆண்டிராய்டு / ஐ-ஓ.எஸ் (Android / iOS) செயலி (App) ஆகும். மிகவும் அறியப்பட்ட உலாவிகளில் (Browsers) ஒன்றான ஃபயர் ஃபாக்ஸின் மற்றுமொரு பரிமாணமே இந்தப் புதிய உலாவி செயலி. இந்த உலாவி விளம்பரங்கள் மற்றும் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கும் டிராக்கர்கள் (Trackers) ஆகியவற்றை தானாகவே தடைசெய்துவிடுகிறது. இந்தப் புதிய செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலி வெறும் 4 எம்.பி அளவு மட்டுமே கொண்டது. எனவே உங்கள் கைப்பேசியின் வேகத்தை இது குறைக்காது.


சில வலைத்தளங்கள் உங்கள் கைப்பேசியில் உள்ள ஜீ.பீ.எஸ். மூலம் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்றார் போல விளம்பரங்களை காட்டுகின்றன. சில தளங்கள், நீங்கள் படிக்கும் பக்கங்கள், மற்றும் தேடும் சொற்களைக் கொண்டு உங்களை பற்றிய ஒரு ப்ரோபைலை உருவாக்கி வைத்துக்கொண்டு நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், எங்கு உள்ளீர்கள், என்ன விருப்பு/வெறுப்பு உள்ளவர் என்று ஒரு அனுமானத்திற்கு வருகின்றன. இதனால் என்ன தப்பு என்கிறீர்களா? அவர்கள் இத்தனை மெனக்கெட்டு இதைச் செய்ய என்ன காரணம்? இந்தத் தகவல்களைக்கொண்டு குறிவைத்து விளம்பரத்தாக்குதல் நடத்தி (Targeted Ad Campaigns), உங்களைப் பொருட்களை வாங்க வைப்பதே நோக்கம்.

ஆன்லைன் வர்த்தகம், நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற முன்யோசனையின்றி, நம்மைப் பல பொருள்களை வாங்க வைக்கும் ஒரு சிலந்திவலை. கடன் அட்டைகளும், ஆன்லைன் வர்த்தகமும் நம்மை தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் அடிமைகளாக்கியுள்ளன. முதலாளித்துவத்தின் இன்றியமையாத அம்சங்களான அதீத உற்பத்தி (over production), நுகர்வுக்கலாச்சாரம் (consumerism) மற்றும் கடன் மூலம் அடிமைப்படுத்துவது (debt slavery) எல்லாம் உங்கள் கைப்பேசிக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன. இந்நிலையில், ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் உங்களுக்கு ஓரளவேனும் இந்த துல்லியத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

மேலும் கூடுதல் பயன்களாக, இந்தச் செயலி மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது, உங்கள் கைபேசியில் உள்ள டேட்டா குறைவாகப் பயன்படுகிறது. இதனால் பக்கங்கள் சீக்கிரத்தில் தெரிகின்றன. மேலும் குறைவான மெமரி, டேட்டா மற்றும் ப்ராசசர் பயன்பாட்டால் உங்கள் மின்கலன்(பேட்டரி) பயன்பாடும் வெகுவாகக் குறைகிறது. கூகிளின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் ஆண்டிராய்டு இயங்குதளமும், அதனோடு வரும் உலாவியும் (ஆப்பிள்/ஐ-ஓ.எஸ் குறித்து சொல்லவே வேண்டாம்!) ஏற்படுத்திடும் அச்சுறுத்தல்களில் இருந்து நாம் சற்றேனும் தப்ப இந்த புதிய உலாவி நமக்கு உதவும் என்று நம்புவோமாக!

Thursday, August 25, 2016

லினக்ஸுக்கு வயசு 25!

1991-ஆம் ஆண்டு லினஸ் பெனடிக்ட் டோர்வால்ட் (Linus Benedict Torvalds) என்னும் ஃபின்லாந்து நாட்டுக் கணினியியல் மாணவரால் ஒரு பொழுதுபோக்காக ஆரம்பிக்கப் பட்டதே இந்த லினக்ஸ். லினக்ஸ் என்பது முழுமையான இயங்குதளம் (OS) இல்லை. அது இயங்குதளத்தின் கெர்னல் (Kernel) எனப்படும் உட்கருவாகும். லினக்ஸ் கெர்னல் கிணு-வுடன் (GNU) சேர்ந்து கிணு/லினக்ஸ் (GNU/Linux) இயங்குதளத்தை சாத்தியப்படுத்தியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் லினக்ஸின் ஆரம்ப நாட்கள் குறித்து லினஸ் டோர்வால்ட் கூறுகையில், "அது முழுவதும் ஒரு தனிநபர் செயல்பாடாகவே இருந்தது" என்கிறார். மேலும் 1991-ஆம் ஆண்டு அவர் லினக்ஸ் குறித்து எழுதிய முதல் பதிவில், "இது கிணு போன்று திட்டவட்டமானதாக இல்லாமல் ஒரு பொழுதுபோக்குக்கான ஒன்று" என்று குறிப்பிட்டிருந்தார்.
கிணு இயங்குதளத்திற்கான வேலைகள்  அமெரிக்கரான ரிச்சர்டு ஸ்டால்மன் (Richard Stallman) தலைமையில் வழிநடத்தப்பட்டு வந்த நேரம் அது. ஏறத்தாழ முழு இயங்குதளமும் முடியும் தருவாயில் இருந்த நிலையில் அதற்குத்தேவையான ஹர்ட் (Hurd) உட்கரு (கெர்னல்) மட்டும் தேக்கநிலையில் இருந்தது (இன்றும் அப்படியே உள்ளது!). மினிக்ஸ் (Minix) என்னும் மாற்று இருந்த போதிலும் அது கட்டற மென்பொருளாக (Free Software) அப்போது இல்லை.  அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஃபின்லாந்திலிருந்து உதவி வந்தது.
ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி பல்கலையில் கணினியியல் துறையில் பயின்று வந்த லினஸ் இணையத்தின் மூலம் தன்னுடைய கெர்னலை வெளியிட்டார். மேலும் அதை கிணு பொது உரிமத்தின் (GPL - GNU General Public License) கீழ் வெளியிட்டார். அப்போது மினிக்ஸ் கெர்னலை எழுதிக்கொண்டு இருந்த ஆண்ட்ரு டனேன்பௌம் (Andrew Tanenbaum) லினக்ஸின் கட்டமைப்பு மோசமானது என்றும் தன்னுடைய மைக்ரோ-கெர்னல் கட்டமைப்பே சீரியதென்றும் விவாதித்தார். அதற்க்கு லினஸ் தன்னுடைய கெர்னல் ஒரு சிறிய அளவிலான ஆதாயமற்ற மென்பொருள். மேலும் அது இன்டெல் 80386 சிப்பிற்கு மட்டுமே எழுதப்படுவது என்று கூறினார்.
ஆனால் இன்றோ இந்த லினக்ஸ் கெர்னல் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது. உங்கள் கைப்பேசியில் உள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளம் முதல் பங்குச்சந்தைகள், நீர்மூழ்கிக்கப்பல்கள், குளிர்சாதனப்பெட்டிகள், தொலைக்காட்சிகள், விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்கள் வரை பல இடங்களில் லினக்ஸ் ஊடுருவியுள்ளது. உலகில் உள்ள மிக வேகமான 500 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒருசிலவற்றைத் தவிர அனைத்தும் லினக்ஸ் கெர்னல் மூலமே இயங்குகின்றன.
கைப்பேசிச் சந்தையில் ஆண்ட்ரைடுக்குப் போட்டியாக இருக்கும் ஒரே இயங்குதளம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-ஓ.எஸ். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தால் கணினிகளில் (மேசைமேல் மற்றும் மடிமேல்) ஒன்றும் சாதிக்க முடியவில்லை. மேலும் ஃபயர் ஃபாக்ஸ், டைசன் இயங்குதளங்களும் லினக்ஸ் உட்கருவையே பயன்படுத்துகின்றன. இதற்க்கு நேர்மாறாக கணினிகளில் மேலாதிக்கம் செலுத்தும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் கைப்பேசிகளில் சொற்ப அளவிலேயே பயன்படுகிறது. ஆனால் கைபேசி மற்றும் கணினிகள் என்று மொத்தமாகப் பார்த்தல் லினக்ஸ் உட்காருவே அதிகமாக பயன்பாட்டில் இருக்கிறது. இணையத்தை இயக்கும் சர்வர்கள் (server) பெரும்பாலும் கிணு/லினக்ஸிலே இயங்குகின்றன. இந்த அடிப்படையில் இன்று உலகிலேயே அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள இயங்குதள உட்கரு லினக்ஸே!

இதன் வெற்றிக்கு முழுக்காரணமும் யாருக்கும் சேராது. இது ஒரு கூட்டு முயற்சியே! இன்றைய நிலையில் லினக்ஸ் நிரலில் வெறும் 0.2% பங்களிப்பே லினஸ் டோர்வால்டிடம் இருந்து வருகிறது. இணையமும் தொழில்நுட்ப முன்னேற்றமும் பல புதிய வழிகளைத் திறந்துள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த இணையமும் கணினியும் சாதிக்க முடிந்த ஒன்றை இன்றைய நிலையில் 4ஜி-யும் ஸ்மார்ட்போனும் கொண்டு நாம் செய்ய முடியாதா? கூட்டு முயற்சியும், ஒத்துழைப்பும், ஆர்வமும், தேடலும் இருந்தால் லினக்ஸ் போன்ற எண்ணற்ற புதிய படைப்புகள் தோன்றும். அது கணினித்துறையில் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மருத்துவம், வேளாண்மை, வாணியல் என்று எந்தத் துறையிலும் இருக்கலாம்! வாருங்கள் அறிவைப் பகிர்ந்து ஆற்றலைப் பெருக்குவோம்!

Friday, June 3, 2016

கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?

கட்டற்ற மென்பொருள் (சுதந்திர மென்பொருள், Free Software) பயனர்களுக்குப் பின்வரும் உரிமைகளை அளிக்கிறது: பயன்படுத்துதல், நகல் எடுத்தல், பகிர்தல், ஆராய்தல், மாற்றம் செய்தல் மற்றும் மேம்படுத்துதல்.

கட்டற்ற மென்பொருள் என்பது அதன் கட்டற்ற தன்மை மற்றும் பயனரின் உரிமைகள் குறித்தது. இது மென்பொருளின் விலையைக் குறித்தது அல்ல. குறிப்பாக இலவசம் என்று இதனைப் பொருள்கொள்ளக் கூடாது!
 
கூண்டு இலவசம் என்பதால் அது சுதந்திரம் ஆகாது!
மேலும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், கட்டற்ற மென்பொருள் 4 அடிப்படை உரிமைகளைப் பயனர்களுக்கு வழங்குவதாகும். அவை:
  • பயனர் விரும்பும்படி, எந்த பயன்பாட்டிற்கும் மென்பொருளை இயக்கலாம். (உரிமை 0)
  • மென்பொருளை ஆராயவும், தேவைக்கேற்ப மாற்றம் செய்யவும் உள்ள உரிமை. (உரிமை 1)  இதற்க்கு மூல நிரல் (source  code) வெளிப்படையாக இருப்பது அவசியம்.
  • உங்களிடம் உள்ள மென்பொருளின் பிரதி/நகல்களை அயலாருக்கு விநியோகிக்கும் உரிமை. (உரிமை 2)
  • மென்பொருளை மேம்படுத்துவதற்கான உரிமை மற்றும் பிறருக்கும் பயன்படும் வகையில் அதை வெளியிடும் உரிமை. (உரிமை 3) இதற்க்கும் மூல நிரல் வெளிப்படையாக இருப்பது அவசியம்.
தொழில்நுட்பம் மற்றும் இணையம் அதீத வளர்ச்சிபெற்றுள்ள இந்திய சூழலில், கட்டற்ற மென்பொருள் இயக்கம் அது ஆரம்பிக்கப்பட்ட 1983-ஆம் ஆண்டைவிட இன்று பெருமுக்கியத்துவம் பெறுகிறது!

மேலும் விவரங்களுக்கு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தளத்தைப் பார்க்கவும்.

நன்றி: http://www.gnu.org/

Wednesday, April 13, 2016

இ-நூல்களால் வரும் இன்னல்கள்

எழுதியவர்:  ரிச்சர்டு ஸ்டால்மேன் (Richard Stallman)

வணிகமயம் நம் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி நாட்டின் சட்டங்களை எழுதும் இந்தக் காலத்தில், ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் வணிக நிறுவனங்கள் பொது மக்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பாக அமைகின்றன. நமக்கு அதிக ஆற்றல் அளித்திருக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், நம்மை அடிமைப்படுத்தப் பயன்படுகின்றன.

அச்சிடப்பட்ட நூல்களை வாங்கும்போது,
  • நீங்கள் பணம் கொடுத்து "முகம் தெரியாமல்"(anonymous) வாங்க இயலும். [சில புத்தகங்கள் தங்கள் மன உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி, அவற்றை எழுதியவர்கள், மொழிபெயர்த்தவர்கள் மற்றும் வெளியிடுபவர்கள் மீது தாக்குதல்களும், மிரட்டல்களும் பெருகியுள்ள இந்தக்காலத்தில், கடன்-அட்டை, இணைய வணிகம் போன்ற வழிகளில் நீங்கள் ஒரு புத்தகத்தை வாங்கினால், உங்களை அடையாளம் காண்பது எளிதாகிவிடும். மேலும், நீங்கள் என்னென்ன புத்தகங்காளை எவ்வெப்போது வாங்கினீர்கள் என்று  சிறிது முயற்சித்தால் அறிந்துகொள்ளலாம். இது விளம்பரம் செய்வது முதல், தணிக்கை செய்வதுவரை எல்லாவற்றுக்கும் பயன்படும்!]
  • அது உங்கள் உடைமையாகிறது.
  • அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று உங்களை நிர்பந்திக்கும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டியதில்லை.
  • அதன் வடிவம் அனைவர்க்கும் புரியும்படியானது. அதை வாசிக்க எந்த ஒரு காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பமும் தேவையில்லை.
  • இரவல் கொடுக்கவோ, வேறு ஒருவருக்கு விற்கவோ உங்களுக்கு உரிமை உண்டு.
  • நீங்கள் அந்த நூலை திடப் பிரதி(physical copy) எடுக்க முடியும். சிலநேரங்களில் அது பதிப்புரிமைச் சட்டப்படி செல்லும்.
  • உங்கள் புத்தகத்தை யாராலும் தொலைவில் இருந்துகொண்டே அளிக்க முடியாது.
அமேசான் இ-நூல்களுடன்(பொதுவான எடுத்துக்காட்டாக) ஒப்பிடல்
  • ஒரு இ-நூலை வாங்க நீங்கள் உங்கள் முழு அடையாளத்தை அமேசானுக்குக் கொடுக்கவேண்டும்.
  • அமெரிக்க ஐக்கியம் உட்பட சில நாடுகளில் நீங்கள் இ-நூல்களை உடைமையாக்கிக்கொள்ள முடியாது.
  • பயனர்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒப்பந்தத்தை ஏற்க அமேசான் நிர்பந்திக்கிறது.
  • அதன் வடிவம் வெளிப்படைத்தன்மையற்றது. காப்புரிமைக்குட்பட்ட பயனர்களைக் கட்டுப்படுத்தும் மென்பொருள்களால் மட்டுமே அவற்றை சட்டப்பூர்வமாக வாசிக்க முடியும். [வேறு மென்பொருள்கள் கொண்டு இ-நூல்களை வாசிப்பது சட்டவிரோதம்]
  • பயனர் எந்தப் பக்கத்தை வாசிக்கிறார், அதில் என்ன குறிப்பு எழுதுகிறார் என்று கிண்டில்(Kindle) அமேசானுக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கும்.
  • இரவல் கொடுப்பதை ஒத்த முறை மூலம் நீங்கள் இ-நூல்களை இரவல் கொடுக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே. அதுவும் அந்த நபரும் அதே நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருக்கவேண்டும் அவருடைய பெயரை அந்நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.[நீங்கள் யாருக்கு எப்போது என்னென்ன புத்தகங்களை இரவல் தருகிறீர்கள் என்று அந்நிறுவனத்தால் அறிய முடியும்] நிரந்தரமாகக் கொடுப்பதோ விற்பதோ முடியாது.
  • அமேசானால் தொலைவிலிருந்தே உங்கள் கருவியில் உள்ள புத்தகங்களை அழிக்க முடியும். 2009-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "1984" நூலின் ஆயிரக்கணக்கான பிரதிகளை அமேசான் இப்படி அழித்தது.
  • அமேசான் கிண்டிலில் உள்ள ஒரு தொழில்நுட்ப ஓட்டை வழியாக அந்நிறுவனம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த ஒவ்வொரு உரிமைமீறல்களும் இ-நூல்களை அச்சு நூல்களைக்காட்டிலும் கீழானவைகளாக்குகின்றன. இ-நூல்கள் அச்சு நூல்கள் வழங்கும் ஒவ்வொரு உரிமையையும் இம்மி அளவுகூடக் குறையாமல் வழங்க நாம் நிர்பந்திக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகளும் [உரிமைகள் மீதான] தாக்குதல்களும் எழுத்தாளர்களுக்குப் பலனளிக்கத் தேவை என்று இ-நூல் நிறுவனங்கள் கூறுகின்றன. அனால் தற்போதைய பதிப்புரிமைச் முறை இந்நிறுவனங்களுக்குக் கணிசமான ஆதரவு அளிப்பதாகவும் எழுத்தாளர்களுக்கு உதவாததாகவும் உள்ளது. நம் உரிமைகள் பறிபோகாமல் இதைவிட அதிகமாக எழுத்தாளர்களைத் தாங்க வழிகள் உள்ளன. பகிர்வதைக்கூடச் சட்டப்பூர்வமாக்கலாம். நான்(ரிச்சர்டு ஸ்டால்மேன்) பரிந்துரைக்கும் இரு முறைகள்:
  • ஒவ்வொரு எழுத்தாளருக்கு இருக்கும் வரவேர்ப்பின் கனமூலத்தின் அடிப்படையில் வரி நிதியைப் பகிர்ந்தளிக்கலாம். (மேலும் படிக்க: http://stallman.org/articles/internet-sharing-license.en.html)
  • இ-நூல் கருவிகளின் மூலம் எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் தாமாக முன்வந்து  "முகம் தெரியாமல்"(anonymous) பண-அன்பளிப்பு செலுத்தும் முறையைக் கொண்டுவரலாம்.
இ-நூல்கள் நம் உரிமைகளைப் பறிப்பதாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை (ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் இ-நூல்கள் அப்படிப் பறிப்பதில்லை). ஆனால் நிறுவனங்களின் முடிவுகளால் இ-நூல்கள் நம் உரிமைகளைப் பறிக்கின்றன. அதைத் தடுப்பது நம் வேலை.

இந்த இயக்கத்தில் எங்களுடன் இணையுங்கள்: http://DefectiveByDesign.org/ebooks.html
இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம்: http://stallman.org/articles/ebooks.pdf
பதிப்புரிமை: 2011, 12, 14, 15 ரிச்சர்டு ஸ்டால்மேன், க்ரியேடிவ் காமன்ஸ் அட்ரிப்யுஷன் 3.0 உரிமம் (Creative Commons  Attribution 3.0 License).
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு: 2016 டேவிட். எஸ். (க்ரியேடிவ் காமன்ஸ் அட்ரிப்யுஷன் 3.0 உரிமம்)
*சதுர அடைப்புக்குறிகளுக்குள் [ ] இருப்பவை என் சொந்தக் கருத்துக்கள்.

Tuesday, March 22, 2016

அறிவுசார் சொத்துரிமையின் அறிவிலித்தனம்

பதிப்புரிமை, வர்த்தகக்குறியுரிமை மற்றும் காப்புரிமை எனும் மூன்று வெவ்வேறு பொருள்படும் சொற்களை "அறிவுசார் சொத்துரிமை" (Intellectual Property) என்று பொதுமைப்படுத்தி இன்று பலர் தாங்களும் குழம்பி, பிறரையும் குழப்பிக்கொண்டுள்ளனர். இந்த குழப்பம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இதனால் ஆதாயம் அடையும் பெருநிறுவனங்கள் இதைப் பரப்புவதில் குறியாக உள்ளன. முதலில் இவை மூன்றும் என்ன என்று பார்ப்போம். அதோடு, இவை எந்த நோக்கத்தில் எப்படிப் பயன்படுகின்றன என்றும், எப்படி இருந்தால் இது பெரிதும் நன்மை பயக்கும் என்றும் சேர்த்தே பார்ப்போம்.

பதிப்புரிமை (Copyrights)

ஒரு கதையோ, கவிதையோ, ஓவியமோ, பாடலோ மற்றும் இதுபோன்ற கலைவடிவங்கள் அனைத்தும் பதிபுரிமைக்கு உட்பட்டவையே. ஒருவர் எழுதிய அதே வரிகளை நீங்களும் எழுதிவிட்டு, "இது என் பாடல்!" என்று சொந்தம் கொண்டாடினால் நீங்கள் பதிப்புரிமையை மீறுகிறீர்கள். ஆனால், அதில் வரும் இரண்டு மூன்று வரிகளை நீங்கள் மேற்கோள் காட்டினாலோ, அல்லது அந்தப் பாடலை தழுவி வேறு வார்த்தைகளோடு ஒரு பாடலை எழுதினாலோ, அது பதிப்புரிமை மீறல் ஆகாது. அதே போல ஒரு புத்தகத்தை இரவல் கொடுப்பதும், மறு விற்பனை செய்வதும் பதிப்புரிமை மீறல் ஆகாது. ஆனால், நீங்களே அந்தப்  புத்தகத்தை அச்சிட்டு விற்றால் அது பதிப்புரிமை மீறல் ஆகும். இது நாடுளுக்கு ஏற்ப வெவ்வேறு கால அளவுகளுக்கு செல்லுபடியாகும்.

இது தோன்றியபோது உண்மையான படைப்பாளிக்கு உரிய அங்கீகாரமும், புகழும், ஊதியமும் கிடக்கவே உருவாக்கப்பட்டது எனக் கொள்ளலாம். ஆனால் இன்றோ இது படைப்பாளிகளையும் மக்களையும் பெருமுதலாளிகள் சுரண்டவே பயன்படுகின்றன. ஒரு புத்தகமோ, பாடலோ, ஓவியமோ ஒரே ஒரு தனிமனிதனின் உழைப்பால் உருவாவதில்லை. மாறாக பலரின் கூட்டு முயற்சியே அது. ஒரு பாடலை எடுத்துக்கொள்வோம். ஒருவர் வரிகளை எழுதுகிறார். ஒருவர் இசை அமைக்கிறார். பலர் வாத்தியங்களை வாசிக்கின்றனர். வேறு பலர் அதை ஒளிப்பதிவு செய்கின்றனர். வேறு ஒருவர் பாடுகிறார். அனால் இந்த பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நிறுவனம் இதற்குப் பதிப்புரிமையைப் பெறுகிறது. இனி இதை ஒவ்வொரு முறை நீங்கள் வாங்கும்  போதும், ரேடியோவில் கேட்கும்போதும், அந்த நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கும். ஆனால் அந்தப் பாட்டை உருவாக்க உழைத்த இதர அனைவருக்கும் கொடுக்கப்பட்ட சம்பளத்தோடு சரி. இந்த கொள்ளை லாபத்தில் 10 பைசாகூடப் பங்கு கிடையாது! இது நியாயமா?

பார்பதற்கு நன்மை செய்யும் சட்டம் போலத் தெரிந்தாலும், இது உண்மையில் இன்று பெருமுதலாளிகளால் வளைக்கப்பட்டு படைப்பாளிகளுக்கு விரோதமாகவே திருப்பப்படுகின்றன. நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால், அதை அச்சிடும் நிறுவனம் அதன் பதிப்புரிமையை உங்களிடம் இருந்து பெற்றபின் தான் விரும்பும் மாற்றங்களைச் செய்யலாம், நினைத்த விலைக்கு விற்கலாம். மொழிபெயர்க்கலாம். அனால், உங்கள் மகனால் கூட அந்த புத்தகத்தைத் தழுவி ஒரு நாடகமோ, பாடலோ எழுத முடியாது. இதுவே இன்றைய பதிப்புரிமைச் சட்டத்தின் நிலை!

அமெரிக்காவில் இந்தச் சட்டத்தின் கால அளவு அதிகரிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. இதற்கு மிக்கி மௌஸும் ஒரு காரணம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? மிக்கி மௌஸின் பதிப்புரிமையைத் தக்கவைத்துக்கொள்ள டிஸ்னீ குழுமம் அரசியல்வாதிகளிடம் பேரம் பேசி, பதிப்புரிமைச் சட்டத்தை தனக்கேற்றார்போல மாற்றிகொண்டிருக்கிறது. இதனால் இன்று பல லட்சக்கணக்கான புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் என்று பல்வேறு படைப்பாளிகளின் உழைப்பு பொதுமக்களுக்குப் பயன்படாமல், மூலையில் முடங்கியுள்ளன!

இதுபோல படைப்புகளும், படைப்பாளிகளும் வீணாவதைத் தடுக்க என்ன செய்யலாம்? நேரடியாகப் படைப்பில் தொடர்பில்லாத நபர்களோ, நிறுவனங்களோ எந்த ஒரு படைப்பு வடிவத்திற்கும் பதிப்புரிமை கோர முடியாதவாறு சட்டங்கள் மாற்றப்படவேண்டும். படைப்பாளியின் உழைப்புக்கு உரிய கூலியும், அதே சமயம் அந்த படைப்பை ஆக்கப்பூர்வமாக (ஆதயமற்ற வகையில்) பயன்படுத்தவோ, தழுவி புதிய படைப்புகளை உருவாக்கவோ எந்தத் தடையும் இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் க்ரியேடிவ் காமன்ஸ் (Creative Commons) பல நல்ல முயற்சிகளை முன்னெடுக்கிறது. நாமும் அவர்களுக்கு உதவலாம்.

வர்த்தகக்குறியுரிமை (Trademark)

கடைக்குப் போகும் நாம், அங்கு எந்த சோப்பு அல்லது எண்ணெய் வேண்டும் என்று எப்படிக் கேட்கிறோம்? அந்தப பொருளின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைச்சொல்லித்தானே? போலிகளைத் தடுக்கவும், மக்கள் மத்தியில் தங்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவும், பெயர்கள், லோகோக்கள் மற்றும் சில அடையாளக்குறிகளையும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதுவே வர்த்தகக்குறியுரிமையாகும்.

இன்றும்கூட இது முக்கியமான ஒரு உரிமை என்றே கருதிகிறேன். சந்தையில் விற்பனை செய்யப்படும் தனியார் தயாரிப்புகள் உள்ள வரை இந்த உரிமை தேவையான ஒன்றே. போலிகளையும், தரமற்ற மாற்றுகளையும் அடையாளம் காணவும், தரமான பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இவை அவசியமே.

அனால், இது இங்கேயே நின்றுவிடுவதில்லை. "பிராண்ட் வேல்யூ" (Brand Value) என்று மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட மாயை இந்த வர்த்தகக்குறியுரிமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. ஒரே பொருளை வேறு வேறு நிறுவனங்கள் வேறு வேறு விலைக்கு விற்பது நாம் அறிந்த ஒன்றே. வெவேறு உற்பத்தி முறை அல்லது தரம் என்று மட்டும் இல்லாமல், அந்த நிறுவனத்தின் மீது இருக்கும் ஒரு மூடத்தனமான மரியாதைக்காகவே மக்கள் கூடிய விலை கொடுக்கத் தயங்குவதில்லை. ஒரே தொழிற்சாலையில் தயாராகும்  ரொட்டி,சர்க்கரை, கைபேசி என்று பல விதமான பொருட்களும், சந்தைப்படுத்தும் நிறுவங்களின் பிராண்ட் வேல்யூ காரணமாக வெவ்வேறு விலைக்கு விற்பது அவலம்.

அரசாங்கம் ஒரே மாதிரிப் பொருட்களுக்கு விலை உச்ச வரம்பினை விதிக்க வேண்டும். லாபத்திற்கும் சதவிகித உச்ச வரம்பினை நிர்ணயிக்க வேண்டும். இதை அரசாங்கம் சட்டம் போட்டு மட்டும் தடுக்க முடியாது. மக்களும் குருட்டுத்தனமாக ஒரு நிறுவனத்தின் பொருளே உயர்ந்தது என்று மொய்க்காமல் அறிவைக்கொண்டு ஆராய்ந்து வாங்க வேண்டும். ஆப்பிள் நிறுவனத்தின் ஆட்டுமந்தை வாடிக்கையாளர்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு கைபேசியை 40,000 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு முக்கியக் காரணம் அது "ஆப்பிள்" நிறுவனத் தயாரிப்பு என்பதே! இந்த வகைக் குருட்டுத்தனமான போக்கை மக்கள் கைவிடுவது நல்லது.

காப்புரிமை (Patents)

இது இருப்பதிலேயே அபாயமான, அபத்தமான ஒரு சட்டம். ஒருவர் ஒரு கருத்தை(idea) சிந்தித்து, அதை மேலோட்டமாக விவரித்து எழுதி, அதற்க்கு காப்புரிமை வாங்கிவிட்டால்,வேறு யாரும் அந்த ஐடியாவையோ அதை ஒத்த ஐடியாவையோ பயன்படுத்த முடியாது. ஒருவர் தூண்டில் முள்ளையோ, தைக்கும் ஊசியையோ காப்புரிமை பெற்றுவிட்டால், வேறு யாரும் அதே போல ஒரு தூண்டில் முள்ளையோ, ஊசியையோ தயாரித்தால் அவருக்கு நஷ்டஈடு கொடுக்கவேண்டும் அல்லது கம்பி எண்ண வேண்டும்! இது இங்கேயே நின்றுவிடாமல், மருந்து, கல்வித்திட்டம், அறுவை சிகிச்சை முறை, தயாரிப்பு உக்தி, மனித மரபணு என்று எதில் வேண்டுமானாலும் காப்புரிமை பெற வழிசெய்கிறது.

கல கலமாக நாம் தாழ்பாளை பக்கவாட்டில் தள்ளித்தானே திறக்கிறோம்? இதை "Slide to  unlock " என்ற பெயரில் ஆப்பிள் காப்புரிமை பெற்றுள்ளது. இதேபோல விதைகளுக்கும் மொசாண்டோ நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இங்கே சொல்லவேண்டும் என்றால், இந்த வலைப்பூ போதாது! அவ்வளவு முட்டாள்த்தனமான காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தவனுக்கு அதன் பலனாக வருமானம் ஈட்டித்தரும் திட்டம் போலச் சொல்லப்பட்டாலும், இது உண்மையில் அப்படி வேலை  செய்வதில்லை.

பல பெருநிறுவனங்கள் பணியில் அமர்த்தும் முன் போடும் ஒப்பந்தங்களில் அந்தப் பணியாளர் என்ன கண்டுபிடித்தாலும் அந்த நிறுவனத்துக்கே சொந்தம் என்று கையொப்பம் இட வைக்கின்றன. மேலும் பணிஉயர்வு வேண்டும் என்றால் இத்தனை காப்புரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் நிர்பந்திக்கின்றன. அதனால்த்தான் இன்று பல கண்டுபிடிப்புகள் யாருடையது என்று தெரியாமல் ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பாக அறியப்படுகின்றன. மாத ஊதியம் தவிர அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய நபருக்கு எந்தப் பயனும் இல்லை. அதே நேரம், இந்த காப்புரிமையை வைத்துக்கொண்டு எதிர் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் மீதும்கூட வழக்குகள் தொடுத்து பணம் சம்பாரிக்க முடியும்.

இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா, உலக வங்கி, இந்தியப் பெருமுதலாளிகள் என்று பலதரப்பிலும் அழுத்தம் கொடுத்து இதுபோன்ற லாபவெறிக்கென்றே உருவாக்கப்பட்ட சட்டங்களையும் ஒப்பந்தங்களையும் ஏற்க வைக்கின்றனர். இதனால் தொழிலில் தரம் மற்றும் விலை ரீதியிலான போட்டி இல்லாமல் சட்ட ரீதியான சிக்கல்களும், மிரட்டல்கலுமே அதிகரிகின்றன. இதில் குறிப்பிட்ட தொழில்நுட்பம் தொடர்பான பல காப்புரிமைகளை வாங்கி வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தும் இதர நிறுவனங்களையும் அரசுகளையும் மிரட்டியே சம்பாரிக்கும் காப்புரிமை ஒட்டுண்ணிகளும் (patent  trolls) உண்டு.

ஒரு சிறு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒரு தோல் புற்றுநோய் செல்லை எடுத்து அதில் சில மாறுதல்கள் செய்து அந்நோயைக் குணப்படுத்த ஒரு முறையை ஒருவர் சுய முயற்சியில் உருவாகுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அனால் அவர் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்திடம் அவர் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி, அந்தக் கண்டுபிடிப்புக்கு அந்த நிறுவனமே காப்புரிமையாளர்! அந்த நிறுவனமோ மென்பொருள் நிறுவனம். அகவே அது இந்தக் காப்புரிமையை வேறு ஒரு மருத்துவ நிறுவனத்திற்கு விற்றுக் காசு பார்த்துவிடும். வாங்கிய நிறுவனமோ, இதே முறையில் வேறு பல புற்றுநோய்களுக்கும் மருந்து தயாரிக்க முடியும் என்று அறிந்துகொள்ளும். பிறகு ஒரு மருந்தை தயாரித்து அதை நினைத்த விலைக்குச் சந்தைப் படுத்தும். காப்புரிமை உள்ளதால், வேறு யாரும் அந்த மருந்தைத் தயாரிக்க முடியாது. இப்போதே கண்ணைக்கட்டுகிறதா? கவனியுங்கள்.இப்போது வேறு ஒரு மருத்துவ நிறுவனம், தைராய்டு புற்றுநோய்க்கு ஒரு மருந்தை உருவாகுகிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் நிறுவனம் இரண்டாம் நிறுவனம் பயன்படுத்திய முறையையே கேள்விக்குள்ளாக்கலாம். அவர்கள் ஒரு புற்றுநோய் செல்லை எடுத்து அதில் மாறுதல் செய்தது அந்த மருந்தை உருவாக்கொயிருந்தால் (இப்படிப் பொத்தம்பொதுவாகவே காப்புரிமை வழங்கப்படுகிறது) அதுவே போதும்! முதல் மருந்து நிறுவனம் இரண்டாம் மருந்து நிறுவனம் மேல் வழக்குப் போடும். அந்த வழக்கில் எவன் கை ஓங்குகிறதோ அவனுக்கு மற்றவன் கப்பம் கட்ட வேண்டும்! மீண்டும் இந்த வழக்குக்கு ஆனா செலவு முதல் இவர்கள் லாப வெறிவரை அனைத்தும் நோயாளிகளின் மேல் சுமத்தப்படும்! முடிவாக, அந்த தோல் புற்றுநோய் மருந்தை முதலில் கண்டுபிடித்தவருக்கே அந்த நோய் வந்தாலும் அவரும் அதை அவர்கள் விற்கும் விலைக்கே வாங்க வேண்டும்! இது சரியா?

முடிவாக...

இனி யாராவது உங்களிடம் வந்து "அறிவுசார் சொத்துரிமை" என்று சொன்னால் அவர்களிடம் "பதிப்புரிமை, வர்த்தகக்குறியுரிமை மற்றும் காப்புரிமை. இதில் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேளுங்கள். இப்படி முட்டாள்தனமான வார்த்தைகளை வைத்துக்கொண்டு மக்களைச் சுரண்ட ஒரு கூட்டமே அலைகிறது. ஒவ்வொரு படைப்பும் அதற்க்கு முன்னால் இருந்த படைப்புகளை உள்வாங்கியே உருவாகிறது. ஒவ்வொரு மனிதனும் தனியாக எதையும் படைப்பதில்லை. அதுபோலவே கண்டுபிடிப்புகளும். யாரும் பிறந்ததுமுதல் தானாகவே எல்லாம் கற்றுத் தேர்ந்து பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்லை. நம் முன்னோர்கள் நெருப்புக்கும் கிணறுக்கும் துணிக்கும் மொழிக்கும் காப்புரிமை பெற்றிருந்தால் இன்றும் நாம் அம்மணமாக குரங்குகளோடு குரங்காகவே வாழவேண்டும். பிறர் அறிவை கூசாமல் "திருடும்" நாம், நம் அறிவை பிறருடன் பகிர்வதே மனிதம்! ஆம். விலங்குகள் தலைமுறைதோறும் அறிவை சேர்த்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவதில்லை. அவற்றிடம் அறிவைப் பரிமார மொழியும் இல்லை. இந்த ஒரு வேறுபாடே மனிதனை மனிதனாக மாற்றியது. அறிவைப் பகிர்ந்தும், பரப்பியும், இருக்கும் கருத்துகளை சேர்த்தும், மேன்படுத்தியும் நாம் முன்னேறியுள்ளோம். இப்படி வந்த அறிவும், கலையும் இன்று ஒருசிலரின் லாபவெறிக்காக பூட்டிவைக்கப்படுகிறது. இருக்கும் அறிவை மேம்படுத்தவும் வேறு அறிவுடன் சேர்த்து புதிய ஒன்றை உருவாக்கவும் முடியாமல் தேக்கநிலை ஏற்படுகிறது. இவை எல்லாம் பல்லாயிரம் கொடிகளை சிலர் மட்டும் சேர்த்துக்கொள்ள செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றால் மிகை ஆகாது.

இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்களை எதிர்ப்போம். பொதுவில் இருந்து எடுக்கப்பட்ட அறிவும் கலையும் பொதுவிலேயே வைக்கப் பாடுபடுவோம்!

Saturday, April 5, 2014

Free Software, Open Source and Freeware

There are lot of confusion about the words Free Software, Open Source and Freeware. I try my best with my limited knowledge to explain things in layman's terms so that people from non-technical background too can understand.

1. Free Software (கட்டற்ற/சுதந்திர மென்பொருள்)

Many people confuse that Free Software is the one that is available for free of cost. But that is not true. Most free software are available for free of cost but the word "free" in the free software stands for freedom. Free software respects your freedom by allowing you to study the code, modify the code, redistribute or sell the copy or modified copy to whomever you want and to give back your changes to the community. All of these good things come with one condition. If you modify the code of a free software, your code should also be released to the public (whenever the modified version is distributed). So with all these good intentions, Free Software becomes the morally superior choice of software for anyone! If you are a programmer, then you should release your code under GPL v3 or any other FSF approved software license to protect your and everybody's freedom. If you are an ordinary user, still you can help Free Software movement by using free software alternatives, avoiding proprietary software, reporting bugs, helping with translation, asking for new functionalities, donating money and by introducing others to use free software.

2. Open Source (திறந்த ஆணைமூல மென்பொருள்)

These are the software in grey area. These software have their source code open but the motive may be different than respecting user freedom. For example, a company may throw a small tool as open source to boast about the code quality and by that gain popularity. Or else they can give a software as open source but the software needs to consume their service which may be paid or ad supported (as in the case of Android). Still some other companies release their outdated or hard to maintain projects as open source so that the community will take over bug-fixing and enhancing the same. There are some open source licenses that restrict forking. So we can't say that all open source projects respect the user/developer freedom. And there are some developers who release their source code without any proper license and these code can be misused/abused by corporates. As the source is open, we can be sure that there is no backdoor or provision to steal your data. So not all open source software are free software but all free software are open source. Even though open source software are superior than proprietary software, they are still inferior to free software. So they can be used sparingly and if possible, the open source project maintainers should be educated to release their code with a more freedom respecting license.

3. Freeware (இலவச மென்பொருள்)

Any software that is given for free of cost is called freeware. The Tamil name says more clearly what it means. Most of the Windows users think about these software when we tell them about "free software". Examples are µTorrent, AVG Antivirus, Winamp. These are given for free of cost but with no freedom attached. For example, if you find a bug in the software, you can't really do anything about this other than contacting the creator even if you know the programming language with which the application is developed. This is because the source code will not be available. Also if you make modifications to their software there are good chances for you to get sued for "intellectual property" (which is non-existent) infringement. Also you can't be sure that these software are not spying you by collecting your data or allowing back doors to others like NSA to spy you or take control of your machine. So one should try every possible way to not to use any freeware.

Sunday, March 30, 2014

ஆண்ட்ராய்டு கருவிகளில் தமிழ் தட்டச்சு

<<<Read this article in English>>>
<<<இதை ஆங்கிலத்தில் படிக்க>>>
இப்பொழுதெல்லாம் அனைவரும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு கருவிகள் வைத்துள்ளனர். அதே சமயம் இணையத்திலும் நிறைய தமிழ் மொழியில் எழுதப்பட்ட கதைகள், கட்ருரைகள், கவிதைகள், செய்திகள் மற்றும் பல உள்ளன. இவற்றை நாம் வாசிக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம், இவற்றை நாம் எவ்வாறு தேடுவது? கூகிள், யாஹூ, பிங், டக்டக்கோ போன்ற முன்னணி தேடுபொறிகள் தமிழ் வலைத்தளங்களையும் தேடக்கூடியவையே. ஆனால் நாம் எப்படி அதைத் தேடுவது? ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தா? கணினியிலாவது நாம் சில மென்பொருள்களின் மூலமோ ஆன்லைன் மொழிமாற்றிகள் மூலமோ தமிழில் எழுதலாம். ஆனால் மொபைல் மற்றும் டேப்ளெட்களில் என்ன செய்வது?

உங்களுக்குதவ இதோ வருகிறது ஒரு நல்ல ஆண்ட்ராய்டு மென்பொருள். AnySoftKeyboard with Tamil layout extension. (எனிசாப்ட்கீபோர்டு மற்றும் தமிழ் இணைப்பு)

இதை உங்கள் ஆண்ட்ராய்டு கருவியில் பெற கீழே உள்ள எழிய வழிமுறையைப் பின்பற்றவும்:

1. முதலில் உங்கள் கருவியில் தமிழ் எழுத்துக்கள் சரியாக காண்பிக்கப்படுகிறதா என்று சோதிக்க இந்தப் பக்கத்தை உங்கள் கருவியில் உள்ள browser-இல் பார்க்கவும்.

குறிப்பு: பெரும்பாலனவர்களுக்கு இந்தப் பக்கத்தில் உள்ள தமிழ் எழுத்துகள் சரியாகத் தெரியும். ஒருவேளை இந்த பக்கம் சரியாகத் தெரியவில்லை என்றால், உங்கள் கருவியில் தமிழ் எழுத்துக்களுக்கான font இல்லை என்று பொருள். இதை எப்படிப் பெருவது என்பது இணையத்தில் உள்ளது. அதை நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள்.

2. கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து எனிசாப்ட்கீபோர்டு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும். இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்.

3. எனிசாப்ட்கீபோர்டு தமிழ் இணைப்பை இந்த இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.

4.இந்த இரண்டும் உங்கள் கருவியில் install செய்யப்பட்டபின், உங்கள் கருவியில் "Settings -> Language & Keyboard "க்குச் செல்லவும்.

5. அதில்  "AnySoftKeyboard"-ஐ அனுமதிக்கவும்.

6. உங்களிடம் இந்த மென்பொருளை நீங்கள் அனுமதிக்க விருப்பமா என்று கேட்கும். இது பொதுவாக எந்த தட்டச்சு மென்பொருள் பயன்படுத்தினாலும் கேட்கப்படுவதே! இது கட்டற்ற மென்பொருள். ஆகவே, பயமில்லாமல் அனுமதிக்கவும்.

7. இப்பொழுது, sms, browser அல்லது வேறு ஏதாவது எழுத்து உள்ளீடு செய்யும் பகுதிக்குச் சென்று, long press செய்யவும். ஆண்ட்ராய்டு 4+ கருவிகளில் notification பகுதியில் select input method மூலம் இதை செய்யலாம்.

8. ஒத்த ஓசையுடைய எழுத்துக்களை பெற அவற்றை long  press செய்யவும். எடுத்துக்காட்டாக "ஆ" டைப் செய்ய "அ"-வை long press செய்யவும். "ய" டைப் செய்ய "ஐ"-யை long press செய்யவும்.

9. உயிர்மெய் எழுத்துகளைப் பெற மெய் எழுத்தை முதலில் டைப் செய்துவிட்டு பின் அதற்கான உயிரெழுத்து இணைப்பை டைப் செய்யவும். எடுத்துக்காட்டாக "பூ" டைப் செய்ய, "ப" டைப் செய்துவிட்டு, பின் "உ"-வை long press செய்து வேண்டிய துணை எழுத்தைத் தேர்வுசெய்யவும்.

10. "AnySoftKeyboard settings"-இல் "suggestion"-ஐ நிறுத்துவதன் மூலம், உங்கள் தட்டச்சு அனுபவம் மேலும் நன்றாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்:

1.  முற்றிலும் கட்டற்ற மென்பொருள். விளம்பரங்களோ கட்டணமோ இல்லை. மூல நிரலைப்பெற இங்கே சொடுக்கவும்.

2. ஆங்கில QWERTY தட்டச்சைப் மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டது. ஆகவே, எழிதாக நினைவல் வைத்துக்கொள்ளலாம்.

3. ஒரே தொடுதலில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்கிடையே மாற்றிக்கொள்ளலாம்.

4. பயன்படுத்த இணைய இணைப்பு தேவை இல்லை.

5. சிறிய அளவிலான மென்பொருள். வேகமாகவும் இயங்கும்.

6. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள். 4+ நட்சத்திர புள்ளிகள் பெற்றது.

இன்னும் என்ன யோசனை? இதை இன்றே பயன் படுத்துங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உலகுடன் தமிழ்லில் பேசுங்கள்/எழுதுங்கள்/பகிருங்கள்.

கருதுக்கள், சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன.