Wednesday, April 13, 2016

இ-நூல்களால் வரும் இன்னல்கள்

எழுதியவர்:  ரிச்சர்டு ஸ்டால்மேன் (Richard Stallman)

வணிகமயம் நம் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி நாட்டின் சட்டங்களை எழுதும் இந்தக் காலத்தில், ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் வணிக நிறுவனங்கள் பொது மக்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பாக அமைகின்றன. நமக்கு அதிக ஆற்றல் அளித்திருக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், நம்மை அடிமைப்படுத்தப் பயன்படுகின்றன.

அச்சிடப்பட்ட நூல்களை வாங்கும்போது,
  • நீங்கள் பணம் கொடுத்து "முகம் தெரியாமல்"(anonymous) வாங்க இயலும். [சில புத்தகங்கள் தங்கள் மன உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி, அவற்றை எழுதியவர்கள், மொழிபெயர்த்தவர்கள் மற்றும் வெளியிடுபவர்கள் மீது தாக்குதல்களும், மிரட்டல்களும் பெருகியுள்ள இந்தக்காலத்தில், கடன்-அட்டை, இணைய வணிகம் போன்ற வழிகளில் நீங்கள் ஒரு புத்தகத்தை வாங்கினால், உங்களை அடையாளம் காண்பது எளிதாகிவிடும். மேலும், நீங்கள் என்னென்ன புத்தகங்காளை எவ்வெப்போது வாங்கினீர்கள் என்று  சிறிது முயற்சித்தால் அறிந்துகொள்ளலாம். இது விளம்பரம் செய்வது முதல், தணிக்கை செய்வதுவரை எல்லாவற்றுக்கும் பயன்படும்!]
  • அது உங்கள் உடைமையாகிறது.
  • அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று உங்களை நிர்பந்திக்கும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டியதில்லை.
  • அதன் வடிவம் அனைவர்க்கும் புரியும்படியானது. அதை வாசிக்க எந்த ஒரு காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பமும் தேவையில்லை.
  • இரவல் கொடுக்கவோ, வேறு ஒருவருக்கு விற்கவோ உங்களுக்கு உரிமை உண்டு.
  • நீங்கள் அந்த நூலை திடப் பிரதி(physical copy) எடுக்க முடியும். சிலநேரங்களில் அது பதிப்புரிமைச் சட்டப்படி செல்லும்.
  • உங்கள் புத்தகத்தை யாராலும் தொலைவில் இருந்துகொண்டே அளிக்க முடியாது.
அமேசான் இ-நூல்களுடன்(பொதுவான எடுத்துக்காட்டாக) ஒப்பிடல்
  • ஒரு இ-நூலை வாங்க நீங்கள் உங்கள் முழு அடையாளத்தை அமேசானுக்குக் கொடுக்கவேண்டும்.
  • அமெரிக்க ஐக்கியம் உட்பட சில நாடுகளில் நீங்கள் இ-நூல்களை உடைமையாக்கிக்கொள்ள முடியாது.
  • பயனர்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒப்பந்தத்தை ஏற்க அமேசான் நிர்பந்திக்கிறது.
  • அதன் வடிவம் வெளிப்படைத்தன்மையற்றது. காப்புரிமைக்குட்பட்ட பயனர்களைக் கட்டுப்படுத்தும் மென்பொருள்களால் மட்டுமே அவற்றை சட்டப்பூர்வமாக வாசிக்க முடியும். [வேறு மென்பொருள்கள் கொண்டு இ-நூல்களை வாசிப்பது சட்டவிரோதம்]
  • பயனர் எந்தப் பக்கத்தை வாசிக்கிறார், அதில் என்ன குறிப்பு எழுதுகிறார் என்று கிண்டில்(Kindle) அமேசானுக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கும்.
  • இரவல் கொடுப்பதை ஒத்த முறை மூலம் நீங்கள் இ-நூல்களை இரவல் கொடுக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே. அதுவும் அந்த நபரும் அதே நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருக்கவேண்டும் அவருடைய பெயரை அந்நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.[நீங்கள் யாருக்கு எப்போது என்னென்ன புத்தகங்களை இரவல் தருகிறீர்கள் என்று அந்நிறுவனத்தால் அறிய முடியும்] நிரந்தரமாகக் கொடுப்பதோ விற்பதோ முடியாது.
  • அமேசானால் தொலைவிலிருந்தே உங்கள் கருவியில் உள்ள புத்தகங்களை அழிக்க முடியும். 2009-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "1984" நூலின் ஆயிரக்கணக்கான பிரதிகளை அமேசான் இப்படி அழித்தது.
  • அமேசான் கிண்டிலில் உள்ள ஒரு தொழில்நுட்ப ஓட்டை வழியாக அந்நிறுவனம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த ஒவ்வொரு உரிமைமீறல்களும் இ-நூல்களை அச்சு நூல்களைக்காட்டிலும் கீழானவைகளாக்குகின்றன. இ-நூல்கள் அச்சு நூல்கள் வழங்கும் ஒவ்வொரு உரிமையையும் இம்மி அளவுகூடக் குறையாமல் வழங்க நாம் நிர்பந்திக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகளும் [உரிமைகள் மீதான] தாக்குதல்களும் எழுத்தாளர்களுக்குப் பலனளிக்கத் தேவை என்று இ-நூல் நிறுவனங்கள் கூறுகின்றன. அனால் தற்போதைய பதிப்புரிமைச் முறை இந்நிறுவனங்களுக்குக் கணிசமான ஆதரவு அளிப்பதாகவும் எழுத்தாளர்களுக்கு உதவாததாகவும் உள்ளது. நம் உரிமைகள் பறிபோகாமல் இதைவிட அதிகமாக எழுத்தாளர்களைத் தாங்க வழிகள் உள்ளன. பகிர்வதைக்கூடச் சட்டப்பூர்வமாக்கலாம். நான்(ரிச்சர்டு ஸ்டால்மேன்) பரிந்துரைக்கும் இரு முறைகள்:
  • ஒவ்வொரு எழுத்தாளருக்கு இருக்கும் வரவேர்ப்பின் கனமூலத்தின் அடிப்படையில் வரி நிதியைப் பகிர்ந்தளிக்கலாம். (மேலும் படிக்க: http://stallman.org/articles/internet-sharing-license.en.html)
  • இ-நூல் கருவிகளின் மூலம் எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் தாமாக முன்வந்து  "முகம் தெரியாமல்"(anonymous) பண-அன்பளிப்பு செலுத்தும் முறையைக் கொண்டுவரலாம்.
இ-நூல்கள் நம் உரிமைகளைப் பறிப்பதாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை (ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் இ-நூல்கள் அப்படிப் பறிப்பதில்லை). ஆனால் நிறுவனங்களின் முடிவுகளால் இ-நூல்கள் நம் உரிமைகளைப் பறிக்கின்றன. அதைத் தடுப்பது நம் வேலை.

இந்த இயக்கத்தில் எங்களுடன் இணையுங்கள்: http://DefectiveByDesign.org/ebooks.html
இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம்: http://stallman.org/articles/ebooks.pdf
பதிப்புரிமை: 2011, 12, 14, 15 ரிச்சர்டு ஸ்டால்மேன், க்ரியேடிவ் காமன்ஸ் அட்ரிப்யுஷன் 3.0 உரிமம் (Creative Commons  Attribution 3.0 License).
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு: 2016 டேவிட். எஸ். (க்ரியேடிவ் காமன்ஸ் அட்ரிப்யுஷன் 3.0 உரிமம்)
*சதுர அடைப்புக்குறிகளுக்குள் [ ] இருப்பவை என் சொந்தக் கருத்துக்கள்.

No comments: