Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Wednesday, August 9, 2017

வந்தேறிச் செடிகள்!

இன்று எல்லாப் பொருட்களிலும் பழமை நல்லது, புதுமை கெட்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்போ, உணவோ, மருந்தோ, உடையோ வந்தால் போதும்! "ஐயோ! நம் முன்னோர்கள் பாரம்பரியம் எல்லாம் போச்சே! பழமையை அழித்துவிட்டோமே! புதியவற்றால் தீமைகள்தான் வரும்!" என்றெல்லாம் முட்டி மோதும் கூட்டம் எங்கிருந்தாவது கிளம்பிவருகிறது. இவர்கள் கூற்றின் படி, நம் முன்னோர்களும் புதுமைகளை ஏற்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்?

வேட்டையாடிய மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது இதேபோல "நம் முன்னோர்கள் விவசாயம் செய்யவில்லை. விவசாயத்தால் காடுகள் அழியும். அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவை. இவற்றை உண்டால் நோய் வரும்!" என்றெல்லாம் போராட்டம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அல்லது நெருப்பை மூட்ட மனிதன் கற்ற காலத்தில், "நெருப்பு ஆபத்தானது! அதை நம் வீட்டுக்குள் கொண்டு வருவது கூடாது! அதனால் காற்று மாசு படுகிறது!" என்று ஒரு கூட்டம் கோஷம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? இப்படியே சக்கரம், படகுகள், ஆடை, சமைத்த உணவு, உணவில் உப்பு சேர்ப்பது போன்ற ஒவ்வொரு மாற்றத்தையும் பழமைவாதிகள் எதிர்த்திருந்தால் நாம் இன்று மகிழ்ச்சியாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்திருக்கலாம்!

இப்படிப் பழம்பெருமை பேசும் பலருக்கும், நம் முன்னோர்கள் புதுமையை வரவேற்று ஏற்றுக்கொண்டு முன்னேறியவர்கள் என்பது தெரியாது. இன்று அவர்கள் பழமை என்று தூக்கிப்பிடிக்கும் பலவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் புதுமையாக நம் முன்னோர்கள் பார்த்தவையே! "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!" என்ற இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், நம் முனோர்களைப் போல நாமும் புதுமையைக் கண்டு அஞ்சாமல், அதை ஆராய்ந்து ஏற்பதே நல்லது.

அவ்வகையில் நம் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்ட புதுமைகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் புதுமைகள் இன்று எவ்வாறு பழமைகளாகப் பார்க்கப்படுகின்றன என்று கவனியுங்கள். ஒரு குறுகிய வலைப்பதிவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாததால், 1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்க கண்டங்களைக் கண்டறிந்த பின், அக்கண்டங்களில் இருந்து ஐரோப்பியர்கள் மூலம் நம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சில தாவர வகைகளை மட்டும் பார்ப்போம். அதாவது, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தாவரங்களோ அவை தரும் காய்கனிகளோ, நம் முன்னோர்கள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள பலவும் இன்று நம் "பண்பாடு, பாரம்பரியம், மரபு" வட்டத்துக்குள் இருப்பதைக் கவனியுங்கள். இன்னும் 500 வருடங்களில், பிட்சாவும், நூடுல்சும் நம் பரம்பரியமானாலும் வியப்பதற்கல்ல!

குடை மிளகாய் - சில்லி சிக்கன் முதல் பச்சடி வரை...

முந்திரிப்பருப்பு - இது இன்று நம் பாரம்பரிய உணவாகப் பார்க்கப்படும் ஒன்று. முந்திரி பக்கோடா, முந்திரி அல்வா, முந்திரி ஸ்வீட், பொங்கல், லட்டு, பாயசம்,புலவு என்று நம் பாரம்பரிய உணவுகள் பலவும் முந்திரியால் சிறப்புப் பெறுகின்றன. "முந்திரிக்கொட்டை போல" என்ற வழக்கும்கூட நம் மொழியில் இருப்பது வியப்பே!

மிளகாய் - மீன்குழம்பு, சாம்பார், சட்டினி, வடை, இட்டிலிப் பொடி இப்படி எது எடுத்தாலும் மிளகாய்ப் பொடி இல்லாமல் ருசிக்குமா? ஒருநாள் உங்கள் சமையலறையில் மிளகாய்ப் பொடி டப்பாவை ஒளித்துவைத்துவிட்டு சமையல் செய்ய முயலுங்கள். நீங்கள் தமிழரின் பாரமபரிய உணவுகள் என்று நம்பும் பலவும் இந்த அமெரிக்க இறக்குமதி இல்லாமல் சமைக்க முடியாது! இதில் இந்த மிளகையைக் கொண்டு திருஷ்டி கழிப்பது, வாகனங்களைப் பாதுகாப்பது போன்ற விஞானங்கள் வேறு! 500 வருடங்களுக்கு முன் இல்லாத இந்தப் பழக்கங்கள் இன்று நம் பண்பாடு என்று சொல்லும் மனிதர்களை என்னவென்பது?

சீதா/ராமன்-சீதா பழம் - பெயரளவில் நம் நாட்டு இதிகாசங்களின் தாக்கம் இருந்தாலும் இதுவும் வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானதே!

கொய்யாப் பழம் - நம் ஊர்களில் பாட்டிகள் கூடை தூக்கி விற்பார்களே! அதேதான். அதுவும் அமெரிக்க இறக்குமதியே!

மக்காச் சோளம் - இரும்புச் சோளம் மற்றும் இதர சோளங்கள் ஏற்கனவே இருந்தாலும், மக்காச் சோளம் புதுவரவே! இதில் நாட்டு மக்காச் சோளம், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் என்று நாம் வகை பிரித்தாலும் இரண்டுமே அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையே!

மரவள்ளிக் கிழங்கு - கிராமிய உணவாகப் பார்க்கப்படும் இதுவும் சில நூற்றாண்டுகளாக இங்கு வந்தேறிய பயிர்!

பப்பாளி - மெக்சிக்கோ நாட்டைத் தாயமாகக் கொண்ட மரம். இந்த மரத்தின் இலைச்சாறு டெங்குவைக் குணப்படுத்தும் என்று அரசாங்கமே விளம்பரம் போடுகிறது. ஆனால் இதன் தாயகமான மெக்சிக்கோவிலோ டெங்குவிற்கு தடுப்பூசி போடுகிறார்கள்!  இதைச் சிலர் சித்த மருத்துவம் என்றுகூடச் சொல்கிறார்கள். எந்தச் சித்தர் எந்த நூலில் பப்பாளி பற்றிக் குறிப்பெழுதியுள்ளார்? சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.

நிலக் கடலை - கடலை போடுவது முதல் "பாரம்பரிய மரச்செக்கு கடலெண்ணெய்" வரை கடலை நம் உணவிலும் வாழ்விலும் கலந்த ஒன்று. ஆனால் ஒரு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இதைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை! கடலை மிட்டாய், கடலை எண்ணெய் பலகாரம் இதெல்லாம் நம் பாரம்பரியம் என்று நம்புபவர்கள் பலர். உண்மையில் இது சில நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட பயிரே!

அன்னாசிப் பழம் - எனக்கு மிகவும் பிடித்த பழம். தனியாக ஒரு முழு பழத்தைக் கூட சாப்பிட்ட நாட்கள் உண்டு! பிரேசில் நாட்டைத் தாயகமாக் கொண்டது இப்பழம்.

உருளைக்கிழங்கு - மற்றுமொரு "பாரம்பரியம்". பூரி கிழங்கு முதல் ஆலு பரோட்டா வரை! வட நாட்டின் உயிர் மூச்சான இந்த "ஆலு" அமெரிக்காவில் இருந்து வந்த "விதேசி" பயிர். அமெரிக்க விதேசி பயிரான உருளைக்கிழங்கைத் தடை செய்துவிட்டால் வடாஇந்தியர்கள் பாடு திண்டாட்டம்தான்!

பூசணி - பரங்கிக்காய் (வெள்ளைப் பூசணி ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது!)

சப்போட்டா - "சிக்கு" என்று வடஇந்தியர்களால் (வடஇந்தியத் தாக்கம் உள்ள தமிழர்களினாலும்) அறியப்படும் இப்பழம் மெக்சிகோ இறக்குமதி.

சூரியகாந்தி - எண்ணெய் வித்தாகப் பயன்படும் இப்பயிர் வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து வந்தது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பெயரைக்கேட்டால் தூய தமிழாகத்தான் உள்ளது... ஆனால் சொந்த ஊர் தென்-அமெரிக்கா.

புகையிலை - புகையிலைப் பாக்குகளைக் குதப்பி, அங்கங்கு துப்பி வைப்பது வடஇந்தியர்கள் நடமாடும் பகுதி என்பதன் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு நம் "கலாச்சாரத்தில்" கலந்தது இந்தப் புகையிலை. வெற்றிலையோடு புகையிலை போடும் பழக்கம் தமிழகத்திலும் இருந்தது (இன்னும் சிலரிடம் இருக்கிறது). எல்லாவற்றிற்கும் மேல், சில தெய்வங்களுக்கு சுருட்டு படைத்து வழிபாடும் வழக்கம் உள்ளது. இந்த எல்லா "பாரம்பரியங்களும்" வெள்ளைக்காரன் கொண்டுவந்த உயிர்கொல்லிப் புகையிலைமீது கட்டப்பட்டுள்ளது!

தக்காளி - கிலோ 120 ரூபாய் விற்றாலும் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் வங்கியில் கடன் வாங்கியாவது தக்காளி வாங்குகிறோம் அல்லவா? அந்தத் தக்காளியும் வெள்ளைக்காரன் கொண்டுவந்ததுதான். ரசம், சாம்பார், குழம்பு என்று நீக்கமற நம் உணவில் நிறைந்துள்ள தக்காளி நம் முன்னோர்களுக்கு ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தியபோது புதுமையாகவே இருந்திருக்கும்.

முன்பே கூறியது போல நாம் இயல்பாக நம் மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நம்பும் பலவும் நம் முன்னோர்களுக்கு புதியவையாகவும் அந்நியமாகவும் இருந்தவையே! அவர்கள் நம்மைப்போல முன்னோர் பெருமை பேசி இந்தப் புதுமைகளை ஏற்காமல் விட்டிருந்தால் வத்தல் குழம்பும் வஞ்சிர மீன் வறுவலும் நம் உணவுகளாக இருந்திருக்காது! புதுமைகள் எல்லாமே தீமை என்று எண்ணி அஞ்சாமல் அவற்றில் நல்லவற்றை எடுத்து தீயவற்றைத் தவிர்ப்போம்!

Friday, June 2, 2017

ஈசல் வறுவல்!

கேட்டாலே சிலருக்கு பிரட்டிக்கொண்டு வரலாம்... எப்படி சிலருக்குப் பன்றிக்கறி பற்றிய சிந்தனையே ஒவ்வாத ஒன்றோ, எப்படி சிலருக்குக் கருவாட்டு வாடையே ஆகாத ஒன்றோ, எப்படி சிலருக்கு வெண்டைக்காயே வேண்டாத ஒன்றோ, அப்படி பழக்கம் இல்லாதவருக்கு, இதுவும் அறுவோறுப்பாகவே இருக்கும். ஆனால், பிறந்ததில் இருந்து வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் ஈசலை உணவாகப் பார்த்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது எதார்த்தமான உணவே! இந்தப் பதிவின் நோக்கம் எல்லோரும் ஈசல் சாப்பிடவேண்டும் என்பதல்ல. உணவுப் பழக்கங்கள், இடம்தோறும், காலம்தோறும், கலாச்சாரந்தோறும் மாறும் ஒன்று. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது மற்றவருக்கு முற்றிலும் ஒவ்வாத ஒன்றாகவும், உங்களுக்கு கேட்கவே சகிக்காத ஒன்று மற்றவர் நாக்குக்கு சுவையானதாகவும் இருக்கலாம். உங்கள் உணவை அவர் வாயிலும், அவர் உணவை உங்கள் வாயிலும் திணிக்காத வரையில், யாரும் வாந்தி எடுக்கத் தேவை இல்லை. உங்கள் உணவை உங்கள் வாயிலிருந்தும், அவர் உணவை அவர் வாயிலிருந்தும், பிடுங்காத வரை, யாரும் ஆத்திரப்படவும் தேவையில்லை.

எப்படிப் பிடிப்பது?

மழை நாட்களில், மின்விளக்குகள் முன் படபடக்கும் சிறகுகளுடன் நடனமாடும் ஈசல்களை பார்க்காதவர்கள் வெகு சிலரே! இன்று நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக கீழே அதன் படத்தை இணைத்துள்ளேன். முதலில் நீங்கள் பிடிக்கும் ஈசல் உண்ணத்தகுந்ததா என்று சரிபார்த்துக் கொள்வது அவசியம். விவரம் தெரிந்த நண்பர்களிடம் கேட்பது நல்லது. ஈசல் என்று பறக்கும் எறும்புகளை பிடித்த சிறுவர்களையும் என் இளம் வயதில் கண்டதுண்டு. பெரும்பாலும் மாலை நேரமே ஈசல் வேட்டைக்கு உகந்தது (அப்போதுதான் அவை வீடுகள் நோக்கிப் படை எடுக்கும்). அதிகாலையிலும் சில சமயங்களில் வயல்வெளிகள், புல்வெளிகள் போன்ற இடங்களில் ஈசல் கூட்டம் சுற்றுவதுண்டு.
நன்றி: விக்கிமீடியா
ஒரு சொம்பு அல்லது தம்பளரில் கால்பங்கு நீர் நிரப்பிக்கொள்ளவும். ஈசல்கள் அதிகம் சுற்றும் இடத்தில் அமர்ந்து அவற்றைக் கையால் பிடிக்கவும். பயம் வேண்டாம்... அவை உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை! பிடித்த ஈசலை நீரில் போடவும். அதன் சிறகுகள் நீரில் பட்டவுடன் பெரும்பாலும் உதிர்ந்துவிடும். இல்லையென்றாலும் அவை பறக்கும் தன்மை போய்விடும். சிறிது நேரத்தில் பாத்திரம் நிரம்பி விடும். பின்பு ஒரு முறத்திலோ, அகலமான தட்டிலோ அல்லது சொளவிலோ ஈசல்களைப் பரப்பி காய வைக்கவும். ஒன்றிரண்டு ஈசல்கள் நடந்து தப்ப முயலலாம்! மறுநாள் வெயில் வந்தால் ஈசல்களை வெயிலில் காயவிடவும். காய்ந்தபின் லேசாகப் பரசி சிறகுகளை நீக்கவும். நன்று காய்ந்த ஈசல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அரிசிப்பொரி போல இருக்கும்.

எப்படிச் சமைப்பது?

அரிசிப்பொறி, பொட்டுக்கடலை (வறுகடலை/உடைத்தகடலை), உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணை விட்டு வாணலியில் மிதமான சூட்டில் வறுக்கவும். கலகலவென நன்கு வறுபட்டவுடன், தட்டில் வைத்துப் பரிமாறவும்! குளிர்கால மாலைகளில் எளிதாகக் கிடைக்கும் இந்த புரதம் நிறைந்த ஈசல் வறுவலின் சுவையும் அருமையாக இருக்கும்.

சிலர் (நானும்கூட) ஈசல்களைப் பிடித்தவுடன் பச்சையாக உண்பர். சமைக்காத நிலையில் அதன் சுவை, பால்க்  கருது (சோளம்) போல இருக்கும். பச்சை(சமைக்காத) ஈசல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றாலும், அதற்குமுன் அது ஏதாவது அசுத்தமான இடங்களில் அமர்ந்திருந்தால் நோய்த்தொற்று ஏற்படலாம். ஆகவே சமைத்து உண்பது சாலச்சிறந்தது!

புறநானூற்றில் ஈசல் உணவு!

சில வருடங்கள் முன்பு, தமிழாசிரியரான என் தந்தை புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் 119-வது பாடலில் ஈசல்களை மோருடன் சேர்த்துப் புளிச்சாறு (புளிச்சோறு கிண்டப் பயன்படுவது) தயாரித்ததாகக் குறிப்புள்ளதை எனக்குச் சொன்னார். இப்படியும் ஈசலை சமைக்க முடியுமா?!? ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்! தற்போது நகரத்தில் வாழும் எனக்கு வாய்ப்பிருக்கும் போது இதை முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

குறிப்பு: இந்த இடுகை 2010ஆம் ஆண்டு வேறு ஒரு வலைப்பூவில் நான் ஆங்கிலத்தில் எழுதிய இடுகையின் சில மாறுபாடுகள் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

Monday, April 17, 2017

தடுப்பூசி குறித்த சீமானின் அபாயகரமான நிலைப்பாட்டுக்கு ஒரு சவால்....

தடுப்பூசிகள் தேவையே இல்லை, மரபுவழி மருத்துவமும், சுத்தமான காற்று/நீர்/உணவும் நோய்களில்லாத வாழ்வைத்தரும் என்று திரைப்பட நடிகர் சீமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார். யாரும்  சுத்தமான காற்றும், நீரும், உணவும் வேண்டாம் என்றோ, இவற்றால் பயன் இல்லை என்றோ சொல்ல முடியாது. நம்முடைய பிரச்சனை அதுவல்ல. தடுப்பூசிகள் தேவையில்லை என்று முரண்டு பிடிக்கும் முட்டாள்தனமே நம் பிரச்சனை.

நோய்கள் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர நுண்ணுயிரிகளால் வருவதை அவர் மறுக்கிறாரா? நோய்கள் பலவகைப்படும். பிறவிக்கு குறைபாடுகள், சத்துப் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் மாற்றங்கள், பரம்பரை வியாதிகள், உணவு/வாழ்க்கை முறையினால் வரும் நோய்கள், தொற்று வியாதிகள் என்று பல உள்ளன. இதில், தடுப்பூசிகள் தொற்று நோய்களையே பெரும்பாலும் தடுக்கின்றன. இப்படி இருக்க, சீமானின் பேச்சு, வாழ்க்கைமுறையினால் வரும் நோய்களைப்போல தோற்று நோய்களையும் உணவு, உடற்பயிற்சி போன்ற வழிகளில் சரி செய்துவிடலாம் என்பது போல உள்ளது.

நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தால், நம் நாட்டு மரபுவழி மருத்துவங்களில்கூட பல தோற்று நோய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த நோய்கள் நவீன அறிவியல் மற்றும் செயற்கை உரம்/பூச்சிக்கொல்லி/மாசு ஆகியவை தோன்றும் முன்பே இருந்துள்ளன என்பதற்கு நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்த/ஆயுர்வேத நூல்களே சான்று. மேலும், வாழ்க்கைமுறை மாற்றங்களால் இன்று நம்மை அதிகம் தாக்கும் நோய்கள்கூட அன்றே இருந்துள்ளன. அவற்றின் அளவு குறைவாக இருந்தது என்பதே சரி. ஆகா, சீமான் சொல்வது சரி என்றால், எதனால் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் தொற்று நோய்களுக்கு கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்?

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்... தலைப்பில் உள்ளபடி, சீமானோ, அவரது தம்பிகளோ தடுப்பூசி இல்லாமல் வெறிநாயிடம் கடிவாங்கி தங்கள் வீரத்தை நிரூபிக்க முடியுமா? வெறிநாய் கடிக்கு எந்த உணவு மருந்தாகும் சீமான் அவர்களே? உங்கள் பாரம்பரியம் பண்பாடு என்ற போலி இனஉணரவுக்கு மயங்கி, தமிழர்களின் பிள்ளைகள் நோய்கள் வந்து உயிரையே, நல்ல உடல் நலத்தையோ இழந்தால் அதற்க்கு நீங்கள் பொறுபேர்ப்பீர்களா? ஒரு சமுதாயத்தையே அறிவுக்குருடராக்குவதே உங்கள் வேலையா?

சீமான் மற்றும் அவர் தமபிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒருவன் தன்  நம்பிக்கையினால் தான் பெற்ற பிள்ளையை நரபலி கொடுப்பது சரியா? அதுபோலவே உங்கள் போலி இணைப் பெருமிதத்தால் குழந்தைகளின் உயிரோடும் உடல்நலத்தோடும் விளையாடுவதும் தவறே! உங்கள் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே!

Friday, August 12, 2016

மனிதனின் பரிணமிப்பு

லெமூர்

ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) என்னும் நம் இனம் (species எனும் உயிரியல் வகைப்பாடு) முதனி (Primates) எனப்படும் வரிசையைச் (order எனும் உயிரியல் வகைப்பாடு) சேர்ந்தது. அப்படிப் பார்த்தால் உயிரியல் படி, லெமூர், தேவாங்கு, குரங்கு போன்ற உயிரினங்கள் நம் நெருங்கிய சொந்தங்கள்.

முதனி வரிசையில் நாம் ஹோமினிடே (Hominidae) எனப்படும் குடும்பத்தைச் (family எனும் உயிரியல் வகைப்பாடு) சேர்ந்தவர்கள். இதில் சிம்பான்ஸீ மற்றும் போனோபோ குரங்குகள் அடங்கும். அதாவது இவை நம் மிக நெருங்கிய சொந்தங்கள்.

நாம் வாலில்லாக் குரங்குகள் போன்ற மூதாதையர்களிடம் இருந்து தற்போதுள்ள நிலையை பரிணாம வளர்ச்சி மூலம் அடைய ஏறத்தாழ 60 லட்சம் ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

நம் (மனிதர்களுக்கும் முந்தைய) மூதாதையர்கள் இரு கால்களில் நடக்கக் கற்றுக்கொண்டு ஏறத்தாழ 40 லட்சம் ஆண்டுகள் ஆகிறது.

ஏறத்தாழ 10 முதல் 20 வகை மனித இனங்கள் இருந்திருக்கலாம் என இன்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் எஞ்சி இருப்பவர்கள் நாம் மட்டுமே!

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் பெரும் பகுதி ஆபிரிக்கக் கண்டத்தில் நடந்தது.
கல்லாலான கருவிகள்
ஏறத்தாழ 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கல்லாலான கருவிகளை பயன் படுத்தியுள்ளனர். நினைவிருக்கட்டும், இவர்கள் நம்மைப்போன்ற சேபியன்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சேபியன்ஸ் இனம் இன்னும் தோன்றவே இல்லை!

23 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சமைத்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்களில் சிலர்/சில இனங்கள் (இவர்களும் நம் போன்ற ஹோமோ சேபியன்ஸ் இல்லை) ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி வேறு பகுதிகளில் குடியேறி உள்ளனர்.

குறைந்தது 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நெருப்பை உருவாக்கவும் கையாளவும் மனிதர்கள் கற்றுக்கொண்டனர்.

ஹோமோ எரெக்ட்ஸ் என்னும் (தற்போது அழிந்துவிட்ட) மனித இனம் 4 முதல் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சிப்பிகளில் செதுக்கு வேலைப்பாடுகள் செய்த தடையங்கள் கிடைத்துள்ளன.

சேபியன்ஸ் என்னும் நம்முடைய இனம் சற்றுமுன்னமே(!) தோன்றிய இனம். ஆம். நம் இனம் தோன்றி ஏறத்தாழ 2 லட்சம் வருடங்களே ஆகிறது.

சேபியன்ஸ் இனமும் ஆப்பிரிக்காவில் தோன்றியதே. அதன் பின்னரே நம் முன்னோர்கள் வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

1 லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆடை அணியும் பழக்கம் வந்திருக்கலாம் என்று பேன்களின் மரபணு ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது. தலையில் இருக்கும் பேன் ஆடைகளில் வாழும் விதத்தில் பரிணமித்துள்ளதிலிருந்து இதை அறிய முடிகிறது.

1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களுக்கு சேபியன்ஸ் இனம் இடம்பெயர்ந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

முறையான பேச்சு மொழி 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கலாம். மனிதர்கள் இதே சமயம் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளன. புராதன மொழி (மொழி போன்ற அமைப்புள்ள சத்தங்கள், சைகைகள்) ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளாக மெதுவாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.

60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்த்திரேலியாவிலும் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கண்டத்திலும் தற்கால மனிதர்கள் குடியேறியுள்ளனர்.
எலும்பினாலான புல்லாங்குழல்
ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்பினாலான புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன.

ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட எலும்பாலான ஊசிகள் கிடைத்துள்ளன.

விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு 15 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளே ஆகிறது.

பின்குறிப்பு:

இவை அனைத்தும் நான் வாசித்த/கேட்ட தகவல்களின் தொகுப்பாகும். இவற்றில் தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது. அறிவியல் கருத்துகளும் கோட்பாடுகளும் புதிய தடயங்கள், ஆராய்ச்சிகள் வருகையால் மற்றம் அடைவது இயல்பே. ஆகவே இந்தத் தொகுப்பில் உள்ள சில தகவல்கள் மற்றம் பெறலாம். அப்படி மாறும் போது ஏற்படும் தவறுகள், காலகட்டங்கள் அல்லது உயிரியல் வகைப்பாடு குறித்ததாக இருக்குமே அன்றி முற்றிலும் பிழையாக இருக்காது. ஒருநாள் அறிவியல் உலகம் பரிணாமம் பொய் என்று சொல்லும் என்று பகல்க் கனவு காண வேண்டாம்!

நன்றி: விக்கிமீடியா (Wikimedia)

Saturday, July 2, 2016

மீன்களில் பாதரசம்

மீன் ஒரு நல்ல உணவு. உடலுக்குத் தேவையான புரதம், இதயத்துக்கு இதமான ஒமேகா-3 (ஒமேகா-3) என்னும் நல்ல கொழுப்பு, வைட்டமின் பி  வரிசைச் சத்துக்கள் என்று மீன் உணவு உள்ளடக்கியுள்ள சத்துக்கள் ஏராளம். ஆனால் ஒன்றில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மீன்களில் சிலவற்றில் பாதரசம் அளவு அதிகம் இருக்கும். அவ்வகை மீன்களை கர்ப்பிணி/பாலூட்டும் பெண்களும் 15 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களும் அரைவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களும் அளவுடன் சாப்பிடுவது நல்லது. இதைப் பற்றி விரவாகப் பார்ப்போம்.

பாதரசம் - ஒரு பார்வை:


பாதரசம், இதளியம் அல்லது இதள் (mercury) ஒரு உலோகம். அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கக்கூடிய உலோகம். தூய பாதரசமும் அதன் பெரும்பாலான வேதிச் சேர்மங்களும் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் இதை மருந்தாகப் பார்த்தாலும் அறிவியல் இதை நஞ்சு என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிறுவியுள்ளது. குறிப்பாக மீனில் உள்ள மெத்தில் மெர்குரி (methyl mercury) என்னும் சேர்மம் நம் உடலிலேயே தேங்கி இருக்கக்கூடியது. நம் அனைவரின் உடலிலும் வெகு வெகு சிறிய அளவு பாதரசம் உண்டு. ஆங்கிலத்தில் இதை trace amount  என்று கூறுவர். அதே போல நாம் உண்ணும் அனைத்து மீன்களிலும் பாதரசம் உண்டு. ஆனால் பெரும்பாலான மீன்களில் அது பாதுகாப்பான அளவிலே இருக்கும். சில மீன்களில் அது தீங்கு விளைவிக்கக்கூடிய அளவில் இருக்கும். இதனால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப் படலாம். ஆகவே மூளை மற்றும் நரம்பு மண்டலம் வளரும் நிலையில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகள் பாதரசத்தால் அதிகம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.


எவை எல்லாம் ஆபத்தானவை?

பொதுவாக நன்னீர் மீன்களைவிட கடல் மீன்களே பாதரசம் அதிகம் உள்ளவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக கடலிலும் தாவர பட்சி மீன்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த பாதரச அளவு கொண்டவையாக உள்ளன. அதேபோல பெரிய மீன்களில் சிறிய மீன்களைக் காட்டிலும் பாதரசம் அளவு அதிகமாக இருக்கும். அதற்கான காரணம் பின்வருமாறு.
நன்றி: விக்கிமீடியா
1. எல்லா மீன்களிலும் பாதரசம் உண்டு. அது மெத்தில் மெர்குரி வடிவில் இருக்கும்
2. ஒரு மீன் மற்றொரு மீனைத் உண்ணும்போது உண்ணப்படும் மீனில் உள்ள மெத்தில் மெர்குரி உண்ணும் மீனின் உடலில் சேருகிறது.
3. ஏற்கனவே சொன்னதுபோல ஒருமுறை உடலில் சேரும் மெத்தில் மெர்குரி உடலிலேயே தங்கிவிடுகிறது.
4. அதிகமான மீன்களை உண்ண உண்ண, நாட்கள் செல்லச் செல்ல, அளவு வளர வளர அதிக அளவு மெத்தில் மெர்குரி சேர்ந்து விடுகிறது.

நெய்மீன்(கடல் மீன், நெய் கெளுத்தி மீன் நன்னீர் மீன்), வஞ்சரம், சுறா, ஊளி, சீலா, முரல் போன்ற மீன்களில் அதிக பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் பெண்கள், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் உண்ணக்கூடாது. மற்றவர்கள் அளவாகவும் இடைவெளி விட்டு உண்ண வேண்டும் (மாதம் 2-4 முறை, 100-200 கிராம், அளவுகள் மீனின் வகை மற்றும் பருமன் பொறுத்து மாறலாம்!).

இறால், நண்டு, விலை, பாறை, மத்தி, வாவல் போன்ற தாவரம் உண்ணும்/சிறிய மீன்கள் மிகவும் குறைந்த அளவே பாதரசம் கொண்டவை. இவை பாதுகாப்பானவை.

கட்லா, மிருகால், ரோகு, சிலேபி, கெளுத்தி, அயிரை போன்ற நன்னீர் மீன்கள் அனைத்தும் பாதுகாப்பானவை.

**பால் கொடுக்கும் தாய்க்கு சுறா மீன் கொடுப்பது மரபுவழி வழக்கமாக இருக்கலாம். ஆனால் அறிவியலின் பார்வையில் அது ஆபத்தானது. ஆகவே உங்கள் வீட்டில் அதுபோல யாரேனும் சொன்னால் அவர்களுக்கு நீங்கள் விளக்கிக் கூறுங்கள். மரபை விட மனிதனின் நலமே முக்கியம்!

முடிவாக

மீன்கள் நல்ல உணவாக இருந்தாலும், அவை சில சமயங்களில் உடலுக்குத் தீமை செய்யும் நச்சுப் பொருட்களையும் கொண்டிருக்கலாம்! ஆனால் அறிவியலின் துணையோடு ஆராய்ந்து சரியான மீன்களைத் தேர்ந்தெடுத்து உண்டால் நலமும் வளமும் நமதே!