Showing posts with label கொஞ்சம் படிங்க பாஸ். Show all posts
Showing posts with label கொஞ்சம் படிங்க பாஸ். Show all posts

Wednesday, August 2, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 8

நூலின் தலைப்பு: தி கிரேட்டெஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth)
ஆசிரியர்: ரிச்சர்டு டாவ்கின்ஸ்
பக்கங்கள்: ~500
வெளியீடு: டிரான்ஸ்வேர்ல்டு வெளியீடு
மொழி: ஆங்கிலம்
விலை: ~ ரூ. 400/-
வயது: 15+
பொருள்: அறிவியல், உயிரியல், பரிணாமம்
"இவ்வுலக மேடையில் நாம் அனைவரும் நடிகர்கள்!" என்ற ஷேக்ஸ்பியர் கூற்றுப்படி, உலகிலேயே பல கோடி ஆண்டுகளாகத் தொடந்து நடந்துவரும் நாடகம் எது? அனைத்து உயிர்களாலும் கூட்டாக நடத்தப் படும் பரிணாமமே அது! அத்தகைய பரிணாமத்தை பாடத்தில் படிக்கும்போது நாம் புரிந்துகொள்வது கொஞ்சமே. அந்தப் புரிதலும் பெரும்பாலான நேரங்களில் தவறாகவே உள்ளது. ஆனால் மத வியாபாரமும் போலி அறிவியலும் மலிந்துள்ள இன்றைய சூழலில் பரிணாமக் கோட்பாடைச் சரியாகப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. இந்நூல் அந்த முக்கியமான பணியைச் செய்கிறது.

சுமார் 500 பக்கங்கள் நீளும் இந்நூல் சற்றுப் பெரியதுதான். மேலும் குறைந்தது 15 வயதாவது ஆனா அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் ஆர்வம் மற்றவர்களும், சிறுவயதினரும், பிறர் உதவியுடன் படிக்கலாம் அல்லது இந்நூலைப் படித்தவர்கள் அவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம். எளிய சோதனை விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் விரித்தல் மூலம் டாவ்கின்ஸ் அவர்கள் பரிணாமக் கோட்ப்பாட்டை முடிந்தவரை எளிமையாக நம் முன் வைக்கிறார். மேலும் இதனால் பரிணாமம் குறித்த சரியான புரிதல் நமக்கு கிடைக்கிறது (இது தான் மிக முக்கியமான சிறப்பம்சம்!).

English Summary:  

Book Title: The Greatest Show on Earth
Author: Richard Dawkins
Pages: ~500
Publisher: Transworld Publishers
Language: English
Price: ~ Rs. 400/-
Age Group: 15+ 
Category: Science, Biology, Evolution

Thursday, February 23, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 7

நூலின் தலைப்பு: தி பெஸ்ட் ஆஃப் தாகூர் (The Best of Tagore)
ஆசிரியர்: ரபீந்த்ரநாத் தாகூர்
ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜர்னா பாசு
பக்கங்கள்: 88
வெளியீடு: ஸ்கொலாஸ்டிக் இந்தியா
மொழி: ஆங்கிலம்
விலை: ~ ரூ. 80/-
வயது: 10+
பொருள்: சிறுகதைகளின் தொகுப்பு
இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஐரோப்பியரல்லாதவர், இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒரு மேதை உங்கள் குழந்தைக்கோ ஏன் உங்களுக்கோ கதை சொன்னால் எப்படி இருக்கும்? அந்த அனுபவத்தை பெற இந்த நூல் உதவும். இது தாகூர் என்ற கடலின் ஓரத்தில் நம் போன்ற எளியவர்களும் விளையாடக் கிடைத்த கடற்கரையே!

எளிய ஆங்கிலத்தில், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த நூலில் பத்துக்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. சிறுவர்களுக்கு ஏற்றார் போல ஓவியங்களும் உள்ளன. சிறுவர்களும் புரிந்துகொள்ளும்படியான எளிய உணர்வுகளின் வெளிப்பாடு, நல்லொழுக்கங்கள் மற்றும் தாகூரின் எழுத்தோட்டம் என்று மேலும் பல சிறப்புகள் இந்நூலுக்குண்டு.

English Summary:  

Book Title: The Best of Tagore
Author: Rabindranath Tagore
English Translation: Jharna Basu
Pages: 88
Publisher: Scholastic India
Language: English
Price: ~ Rs. 80/-
Age Group: 10+ 
Category: Short stories collection

Monday, January 2, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 6

நூலின் தலைப்பு: அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
ஆசிரியர்: பில் பிரைசன் (தமிழில் மொழிபெயர்த்தவர்: ப்ரவாஹன்)
பக்கங்கள்: தமிழில் 640 / ஆங்கிலத்தில் 560
வெளியீடு: பாரதி புத்தகாலயம் / பிராட்வே புக்ஸ்
மொழி: தமிழ் / ஆங்கிலம்
விலை: ~ ரூ. 450/-
வயது: 16+
பொருள்: அறிவியல், வரலாறு
இந்தப் புத்தகம் முழுமையானதோ, துல்லியமானதோ கிடையாது. அறிவியல் குறித்த ஒரு மசாலா வரலாறு. பொதுவாக இதுபோன்ற புத்தகங்களை நான் விரும்புவதில்லை. ஆனால் இந்தப் புத்தகம் ஒரு விதிவிலக்கு. காரணம், பல்வேறு காலங்களில், பல்வேறு அறிவியல் துறைகளில் நடந்த நிகழ்வுகளை ஒரே புத்தகமாக படிக்க முடிவதே! 500 பக்கங்கள் மேல் இருந்தாலும் வாசிக்க வாசிக்க பக்கங்கள் புரள்வது தெரியாத வண்ணம் பில் பிரைசன் எழுதியுள்ளார்.

நூலின் பெரும்பகுதி வளவளவென்று கதைபோல உள்ளது ஒரு குறையே. ஆனால் அது அறிவியல் நாட்டம் இல்லாதவர்களும் வாசிக்க உதவும்வண்ணம் இருப்பதால் பெரிய குறையாகத் தெரியவில்லை. நான் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாதிப்புகளைப் படித்துள்ளேன். ஆங்கிலப் பதிப்பு கருத்திலும் நடையிலும் சிறப்பாக உள்ளது. ஆங்கிலத்தில் வாசிக்கவே முடியாதவர்கள் மட்டும் தமிழ் மொழிபெயர்ப்பை நாடலாம்.

English Summary:  

Book Title: A Short History of Nearly Everything
Author: Bill Bryson (Tamil Translation by: Pravaahan)
Pages: 560 (in English) / 640 (in Tamil)
Publisher: Broadway Books / Bharathi Puththagalayam
Language: English / Tamil
Price: ~ Rs. 450/-
Age Group: 16+ 
Category: Science, History

Tuesday, November 1, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 5

நூலின் தலைப்பு: கிரகணங்களின் நிழல் விளையாட்டு
ஆசிரியர்: த.வி. வெங்கடேஸ்வரன்
பக்கங்கள்: 64
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மொழி: தமிழ்
விலை: ~ ரூ. 40/-
வயது: 12+
பொருள்: அறிவியல், வானியல், வரலாறு

கிரகணங்கள் எப்படித் தோன்றுகின்றன, அவற்றின் வகைகள், மற்றும் தன்மைகளைத் தொகுத்து வழங்குகிறது இந்தச் சிறிய புத்தகம். மேலும் கிரகணங்களைக் குறித்த மூட நம்பிக்கைகளை நீக்கவும் இந்நூல் உதவும். நூலின் இறுதியில் சற்றும் முன் வந்த மற்றும் வரவிருக்கும் கிரகணங்கள் அட்டவணையும் தரப்பட்டுள்ளது. கிரகண ஆராய்ச்சி குறித்த வரலாறும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

வழக்கம் போல் ஆசிரியர் த. வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் தன்னுடைய ரத்தினச்சுருக்க தொனியில் தகவல்களைத் தொகுத்து பல விளக்கப் படங்கள் துணையோடு இந்நூலை வழங்கியுள்ளார். சில பகுதிகளில் வாக்கிய மற்றும் எழுத்துப்பிழைகள் சரிபார்க்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தமிழில் இதுபோன்ற படைப்புகள் வெளிவருவது பாராட்டப்படவேண்டிய ஒன்று!

English Summary:  

Book Title: Kiraganangalin Nilal Vilayaattu (Shadow Games of Eclipses)
Author: T. V. Venkateswaran
Pages: 64
Publisher: Bharathi Puththagalayam
Language: Tamil
Price: ~ Rs. 40/-
Age Group: 12+ 
Category: Science, Astronomy, History

Monday, August 1, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 4

நூலின் தலைப்பு: ஃபிரான்கென்ஸ்டீன் (Frankenstein)
ஆசிரியர்: மேரி ஷெல்லி
பக்கங்கள்: 352
வெளியீடு: பென்குவின் இந்தியா
மொழி: ஆங்கிலம்
விலை: < ரூ. 200/-
வயது: 15+
பொருள்: திகில், மெய்மையியல், கற்பனை

இயந்திர மனிதர்கள் சாத்தியம் என்று யாரும் கனவிலும் எதிர்பார்க்காத காலத்தில் (1818-ஆம் ஆண்டு) எழுதப்பட்ட நூல் இது. உலகறிந்த கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய இந்நூல், வெறும் திகிலூட்டும் கற்பனைக் கதையாக நின்றுவிடாமல், ஆழ்ந்த மெய்மையியல்க் (philosophical) கேளிவிகளையும் முன்வைக்கிறது. அதாவது, 'மனிதனால் தன்னைப்போல சிந்திக்கும் திறன் உள்ள ஒரு உயிரை/எந்திரத்தைப் படைக்க முடியுமா? அப்படிப் படைத்தால் விளைவுகள் என்ன? அந்த சிந்திக்கும் திறன் உள்ள உயிரின் மனநிலை என்ன?' போன்ற கேள்விகளை இந்நூல் நம் மனதில் எழுப்புகிறது.

இன்றைய சூழலில், மேற்கத்திய திரைப்படங்களைத் தழுவி மசாலாப் படங்களை எடுத்து, எதோ பல்லாயிரம் ஆண்டுகள் தானே சிந்தித்துச் செதுக்கிய அற்புதப் படைப்பு என்று விளம்பரம் செய்து, காசு பார்க்கும் கூட்டமும், அந்தக் கூட்டம் எது சொன்னாலும் தலையாட்டும் ஆட்டு மந்தைக்கூட்டமும் பெருகியுள்ளன. ஆனால் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு "கருத்துக்கள் பிறப்பதும் இல்லை; அழிவதும் இல்லை. கருத்துக்கள் தலைமுறைதோறும் மேம்படுத்தவும், காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்கவும் படுகின்றன" எனும் உண்மை புரியும்!

English Summary:  

Book Title: Frankenstein
Author: Mary Shelly
Pages: 352
Publisher: Penguin India
Language: English
Price: < Rs. 200/-
Age Group: 15+
Category: Horror, Philosophy, Fiction

Saturday, June 18, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 3

நூலின் தலைப்பு: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
ஆசிரியர்:  கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
மொழிபெயர்ப்பாளர்: தேவ. பேரின்பன்
பக்கங்கள்: 108
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி: தமிழ்
விலை: ரூ. 25/-
வயது: 18+
பொருள்: அரசியல், சமூகம், பொது உடைமை
"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" 1800களின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் நிலவிய சூழலில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவரும் அறிவிப்பூர்வமாக தங்களின் சுயநலம் மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு படைத்த இந்த அறிக்கை இன்றைய சூழலிலும் மிகவும் பொருத்தமாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தேவ. பேரின்பன் தற்காலத் தமிழில் எழிய நடையில் பொருள் குன்றாமல் இந்தனை நமக்கு வழங்கியுள்ளது மற்றொரு சிறப்பு. ஓட்டுப் போடாதவன் தேச விரோதி என்னும் அளவுக்கு பேசும் இளைய தலைமுறை, அரசியல் அறிவில் பரீட்சை வைத்தால் பாஸ் ஆகுமா? வெவேறு அரசியல் மற்றும் பொருளாதார முறைகள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றி 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தெரியுமா? அப்படித் தெரியாத நிலையில் போடும் ஓட்டு நல்லாட்சி வழங்குமா?

சோவியத் ஒன்றியம் சிதறிப்போன பின்பு முதலாளித்துவம் மட்டுமே முழுமுதல் பொருளாதார முறைமையாக கருதப்பட்டும் சூழலில் பிறந்த இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல். உழைப்புச் சுரண்டலும், லாப வெறியும் "நியாயம்" ஆகிப்போன சூழலில் இது எங்கே போய் முடியும் என்ற கேள்வி நம் அனைவரின் உள்ளும் எழுகிறது. இந்நூல் அதை ஓரளவு விவரிக்கிறது. கம்யூனிசம் பலரால் காலாவதியான ஒரு சித்தாந்தமாகப் பார்க்கப் படுகிறது. மற்றொரு பிரிவினரோ, அதை ஒரு மதம் போல வெகு கடுமையாகப் பின்பற்ற முயல்கின்றனர். ஆனால் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இந்த அறிக்கை காலம் மற்றும் இடம் பொறுத்து மற்றம் அடைய வேண்டும் என்றே கூறுகின்றனர். ஆகவே இந்நூலை திறந்த மனதோடு வாசிப்பது நல்லது.

English Summary:  

Book Title: Communist Katchi Arikkai (Communist Party Manifesto)
Author: Karl Marx, Friedrich Engels
Translator: Deva. Perinban
Pages: 108
Publisher: New Century Book House (NCBH)
Language: Tamil
Price: Rs. 25/-
Age Group: 18+
Category: Politics, Society, Socialism

Sunday, June 12, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 2

நூலின் தலைப்பு: எண்களின் கதை
ஆசிரியர்: த. வி. வெங்கடேஸ்வரன்
பக்கங்கள்: 56
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மொழி: தமிழ்
விலை: < ரூ. 50/-
வயது: 10+
பொருள்: அறிவியல், கணிதம், வரலாறு
த. வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் அறிவியலை எடுத்துச்செல்லும் ஒரு தூதுவர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. நான் அவருடைய பல நூல்களை வாசித்துள்ளேன். இந்த நூல் என் எதிர்பார்ப்புக்குச் சற்று அதிகமாகவே என்னை வியக்கவைத்தது. வெறும் 56 பக்கங்களில் இவ்வளவு தகவல்களை அடக்க முடியுமா என்று இப்பொழுதும் வியப்பாக உள்ளது!

எண்கள் எப்படித் தோன்றின? வரலாற்றுக்கு முந்தய காலங்களில் இருந்த கணித முறைகள், வெவ்வேறு நாகரீகங்களில் தோன்றிய எண்கணித முறைகள், எண்களின் வரிவடிவம் என்று இந்த சிறய புத்தகம் பல அரிய தகவல்களை நமக்குத் தருகிறது. 6-ஆம் வகுப்புக்கு மேல் உள்ள குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகம். குறிப்பாக கணிதம் என்றாலே கசப்பு என்று நினைக்கும் கணித ஆர்வம் குறைந்த மாணவர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம். கணிதம் உங்கள் நண்பனே!

English Summary:  

Book Title: Engalin Kathai (Story of Numbers)
Author: T. V. Venkateswaran
Pages: 56
Publisher: Bharathi Puthakalayam
Language: Tamil
Price: < Rs. 50/-
Age Group: 10+
Category: Science, Mathematics, History

Thursday, June 9, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 1

நூலின் தலைப்பு: Animal Farm (பண்ணை)
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
பக்கங்கள்: 104 
வெளியீடு: பென்குயின் இந்தியா
மொழி: ஆங்கிலம்
விலை: < ரூ. 100/-
வயது: 10+
பொருள்: சிறுவர் கதை, அரசியல், சமூகம்
ஜார்ஜ் ஆர்வெல், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் ரஷ்யாவில் நிகழ்ந்த கம்யூனிச புரட்சியை அடிப்படையாக வைத்து ஒரு சிறுவர்களுக்கான கற்பனைக் கதையாக இந்த நூலை எழுதியுள்ளார். எளிய ஆங்கிலத்தில் இருந்தாலும் ஒரு நல்ல ஆங்கில அகராதியைத் துணைக்கு வைத்துக்கொள்வது நல்லது.

கதைச் சுருக்கம்:

விலங்குகள் மனிதர்களின் அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்து ஒரு பண்ணையைக் கைப்பற்றுகின்றன. ஆரம்பத்தில் ஆர்வத்துடன் ஒன்றுபட்டு உழைத்து முன்னேற்றம் காண்கின்றன. பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பன்றி இனம் மெதுவாக அடக்குமுறையைக் கையாள்கிறது. நாளடைவில், புரட்சியின் பொருள் மறந்து, பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடில்லாத நிலை ஏற்படுகிறது!

கருத்து:


தனியாக வாசித்தால் இது ஒரு நல்ல சிறுவர்களுக்கான கற்பனைக் கதை. அனால், ரஷ்யப் புரட்சியை மனதில்கொண்டு வாசித்தால், எப்படி அரசியல் அதிகாரம் சீரழிவிற்கு வழிவகுக்கிறது என்று சொல்லும் ஒரு சிறந்த அரசியல்/சமூக நூலாகவும் இது உள்ளது. இளைய தலைமுறையினர் அரசியல் அறிவு பெறவும், அவர்களின் சமூக சிந்தனையைத் தூண்டவும் இந்நூல் உதவும்.

English Summary:

Book Title: Animal Farm
Author: George Orwell
Pages: 104
Publisher: Penguin India
Language: English
Price: < Rs. 100/-
Age Group: 10+
Category: Children's Novel, Politics, Society

கொஞ்சம் படிங்க பாஸ்! - புதிய பகுதி ஆரம்பம்

வாசிக்கும் சிறுமி, ஃபிரிட்ச் வோன் யுதே [நன்றி: விக்கிமீடியா]
நூல்கள் வாசிக்கும் பழக்கம் நாளுக்குநாள் குறைவதும், தொலைகாட்சி மற்றும் கைபேசிகள் நம் ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை வீணடிப்பதும் இன்று நாம் அனைவரும் அறிந்த உண்மை. "கொஞ்சம் படிங்க பாஸ்!" என்னும் இந்த புதிய பகுதி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சில எளிய மற்றும் சுவாரசியமான நூல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான, மலிவான, தரமான, சுவையான மற்றும் அறிவை வளர்க்கக்கூடிய புத்தகங்களை அறிமுகப் படுத்துவதே இந்தப் பகுதியின் நோக்கம்.

அனைத்து வயதினருக்கும் பொருந்துமென்றலும், இது குறிப்பாக இளம் வயதினரை மனதில் வைத்து எழுதப்படும் பகுதியாகும். இதில் ஏதாவது மாற்றங்கள், மேம்படுத்துதல்கள், குறை நிறைகள் இருக்குமாயின், எனக்குத் தெரிவிக்கவும். தொடர்ந்து வரும் பதிவுகளில் அவை சரிசெய்யப்படும்.

"கொஞ்சம் படிங்க பாஸ்" என்னும் தேடு சொல் (label) மூலமாக இந்த வரிசையில் வரும் பதிவுகளை நீங்கள் பார்க்கலாம். நூல்களை வாசித்து, அறிவைப் பெருக்கி, வளமான எதிர்காலத்தை வசமாக்குவோம்!