Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Wednesday, August 30, 2017

விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள்

1957: முதல் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - ஆர் 7 செம்யோர்க்கா
1957: முதல் புவியை சுற்றும் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக் 1
1957: விண்வெளியில் முதல் உயிரினம் - லைக்கா (நாய்) - ஸ்புட்னிக் 2
1959: புவியின் ஈர்ப்பைத் தாண்டிய முதல் ஏவுகணை - லூனா 1
1959: புவியிலிருந்து விண்வெளிக்கு நடந்த முதல் தொலைத்தொடர்பு - லூனா 1
1959: நிலவின் அருகில் சென்ற முதல் செயற்கைக்கோள் - லூனா 1
1959: நிலவில் இறங்கிய முதல் விண்கலம் - லூனா 2
1959: நிலவின் பின்புறத்தை ஆராய்ந்த முதல் செயற்கைக்கோள் - லூனா 3
1960: செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - மார்ஸ்னிக் 1
1961: வெள்ளியை நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - வெனீரா 1
1961: விண்வெளியில் முதல் மனிதன் - யூரி ககாரின்- வோஸ்டோக் 1
1961: ஒருநாள் முழுவதும் விண்வெளியில் சுற்றிய முதல் மனிதன் - கெர்மன் டிடோவ் - வோஸ்டோக் 2
1962: ஒரே சமயத்தில் இரு விண்வெளி வீரர்கள் - வோஸ்டோக் 3 மற்றும் வோஸ்டோக் 4
1963: விண்வெளியில் முதல் பெண் - வாலெண்டின டெரெஷ்கோவ் - வோஸ்டோக் 6
1964: மூன்று விண்வெளி வீரர்கள் ஒரே கலத்தில் - வோஸ்கோத் 1
1965: முதல் விண்வெளி நடை - அலெக்சி லியோனோவ் - வோஸ்கோத் 2
1965: வேறு கோளை அடைந்த முதல் விண்கலம் - வெனீரா 3
1966: நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் - லூனா 9
1966: நிலவன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் கலம் - லூனா 10
1967: ஆளில்லா விண்கலங்கள் சந்திப்பு - காஸ்மோஸ் 186 & காஸ்மோஸ் 188
1969: இரு விண்கலங்கள் சந்தித்து அதில் இருந்த மனிதர்கள் இடம் மாறியது - சோயூஸ் 4 & சோயூஸ் 5
1970: புவியில் இருந்து நிலவுக்கு முதல் தகவல் அனுப்பப்பட்டது - லூனா 16
1970: நிலவில் முதல் நகரும் கலம் - லூனாகோத் 1
1970: வேறு கோளில் இருந்து வந்த முதல் தகவல் - வெனீரா 7
1971: முதல் விண்வெளி நிலையம் - சல்யூட் 1
1971: செவ்வாயைச் சுற்றிய மற்றும் தரை இறங்கிய முதல்  விண்கலம் - மார்ஸ் 2
1984: விண்வெளியில் நடந்த முதல் பெண் - ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா - சல்யூட் 7
1986: இரு விண்வெளி நிலையங்களுக்குச் சென்ற முதல் குழு - சல்யூட் & மிர் (7 நபர்கள்)
1986: முதல் நிரந்தர விண்வெளி ஆய்வு நிலையம் - மிர் 1986 - 2001
1987: ஒருவருடத்திற்கு மேல் விண்வவெளியில் கழித்த முதல் குழு - விளாடிமிர் டிடோவ் & மூஸா மனரோவ் - மிர்

நன்றி: விக்கிபீடியா, http://www.northstarcompass.org

Wednesday, July 5, 2017

தமிழை வளர்க்க என்ன செய்யலாம்? - 5 எளிய செயல்கள்

1. தமிழில் பேசுங்கள்/எழுதுங்கள்!

ஒரு மொழியின் உயிர்ப்பே அதை எவ்வளவு பேர் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறாரகள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தது. நீங்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தமிழிலேயே பேசுங்கள். நாளுக்கு நாள் உங்கள் பேச்சில் உள்ள பிறமொழிச் சொற்களைக் குறைக்க முயலுங்கள். "உதாரணமாக" --> "எடுத்துக்காட்டாக", "சேஞ்ச் இருக்கா?" --> "சில்லறை இருக்கா?", "மொசாம்பி ஜூஸ்" --> "சாத்துக்குடிச் சாறு". இப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை பழக்கப்படுத்துங்கள். சில ஆண்டுகளுக்கு முன், கணினி, இணையம் போன்ற சொற்கள் சிலர் மட்டுமே அறிந்ததாக இருந்தன. இன்றோ பெரும்பான்மை தமிழர்களுக்கு இச்சொற்கள் பரிட்சயமானவை நன்கு தெரிந்தவை.

வங்கி சென்றால் தமிழில் படிவங்களைக் கேளுங்கள். வங்கி, அலைப்பேசி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குத் தமிழிலேயே பதிலளியுங்கள். அவர்கள் வேறு மொழி பேசினால், தமிழ் தெரிந்த ஒருவரைப் பேசச் சொல்லுமாறு கூறும் உரிமை நமக்குண்டு! இப்படி அதிக எண்ணிக்கையில் தமிழில் சேவைகள் பெறப்படும்போது, அவற்றின் அவசியம் அந்நிறுவனங்களுக்கும் புரியும். தமிழ் நூல்கள், செய்தித் தாள்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை அதிகம் படியுங்கள். தமிழுக்குச் சந்தை மதிப்பு அதிகரித்தால், தானாகப் பல நிறுவனங்கள் தமிழில் தங்கள் நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்களை மொழிபெயர்த்து வெளியிடுவர்.

2. தமிழ்வழிக் கல்வி 

இது இன்றைய சூழலில் சற்று சிக்கலான செயலே! தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் இன்னும் சற்று பின்தங்கி உள்ளது மறுக்கமுடியாதது. ஆகவே ஆங்கிலம் நமக்கு இந்த இடைவெளியை நிரப்ப அவசியமாகிறது. அதனால் நாம் கல்வியில் ஆங்கிலத்தை சேர்த்துக்கொள்வது தவறில்லை. தமிழ் என்று எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைகிறதோ, அன்று ஆங்கிலத்தை நாம் அடியோடு நிறுத்திவிடலாம். எப்படி நீச்சல் கற்கச் சுரைக்குடுக்கை உதவுகிறதோ, அதுபோல! அதுவரை ஆங்கிலத்தை அளவோடு கற்போம். ஆங்கிலத்தை இப்படித் தேவைக்குக் கற்றாலும், அதை ஒரு பெருமையாக எண்ணாமல் இருப்பது அவசியம்.


குழந்தைகளுக்கு நாம் ஏன் ஆங்கிலம் கற்கிறோம் என்று சொல்லுங்கள். ஆங்கிலம், அறிவின் அடையாளமோ, நாகரீகத்தின் குறியீடோ இல்லை. மாறாக அது நாம் இழந்த அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைய உதவும் பாலம் மட்டுமே என்று விளங்க வையுங்கள். இவ்வாறு நாம் தமிழில் மட்டும் எல்லாப் பாடங்களையும் கற்கும் நாளுக்கு அவர்களை ஆயத்தப் படுத்துங்கள். இன்னும் சில தலைமுறைகளில் அது நடக்கும். ஆங்கிலேயர் நம்மை சில காலம் ஆண்டதாலும், ஆங்கிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மொழி என்பதாலும் மட்டுமே ஆங்கிலம் தேவையாகிறது. இந்தி, ப்ரெஞ்சு, ஜெர்மன், சமஸ்க்ருதம் போன்ற மொழிகள் மேற்கூறிய வகையில் நமக்கு உதவாதவைகள்.

3. சமூக வலைத்தளங்களில் தமிழ்

இன்று சமூக வலைத்தங்கள் அனைவரையும் தங்களின் வலையில் சிக்கவைத்துள்ளன. இதையே ஒரு வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கைப்பேசி வாங்கும்போதே அதில் தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அல்லது செயலிகள் மூலம் உங்கள் கைப்பேசியில் தமிழ் உள்ளீடு செய்ய முடியுமா என்று பாருங்கள். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களிலும் தமிழிலேயே உள்ளீடு செய்யுங்கள். வலைப்பூக்கள், யூட்யூப் போன்ற காணொளித் தளங்கள், மற்றும் இதர வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பகிரும்போது தமிழில் பகிருங்கள்.

தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பாருங்கள்

இதன் மூலம் தமிழின் இணைய ஊடுருவல் அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களும் சந்தையைப் பிடிக்க தமிழ் மொழியில் சேவைகளை மேம்படுத்த முற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைய்ப்பேசி நிறுவனங்களும் தமிழ் மொழி உள்ளீடு உள்ள கருவிகளை அதிகம் தயாரிக்க இது ஒரு உந்துதலாக இருக்கும். கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது சற்று கடினமே. ஆனால், கைப்பேசிகள் இன்று இதை எளிதாக்கியுள்ளன. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இணையத்தில் தமிழை அரியணை ஏற்றுவோம்!

4. மொழிபெயருங்கள்

விக்கிபீடியா, ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் போன்ற கட்டற்ற கலைக்களஞ்சியங்கள் மற்றும் மின்-நூலகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். மேலும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் உதவிக் கோப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். இதன் மூலம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணினி மற்றும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் உதவலாம்.


கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைக் காலச் செயல்பாடாக இதுபோன்ற மொழிபெயப்புப் பணிகளை கல்லூரிகள் வழங்கலாம். மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு விடுமுறையில் விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் ஒன்றையோ இரண்டையோ மொழிபெயர்த்தால் சில ஆண்டுகளில், எந்த அளவுக்கு நாம் மருத்துவ அறிவைத் தமிழுக்கு இறக்குமதி செய்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். இப்படியே  வரலாறு, தொல்லியல், உயிரியல், வேதியல், கணிதம், பொறியியல் என்று பலவேறு துறை மாணவர்களும் ஆளுக்கு ஒன்றாகத் தங்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்!

5. புதிய கலைச்சொற்களை கற்றல்/உருவாக்குதல் 

எல்லாவற்றிற்கும் காரணப்பெயர்களா?
(நகைப்புக்காக மாற்றப்பட்ட படம்!)
இது இன்றியமையாத ஒன்று. ஒரு உயிருள்ள மொழி, வளர்ந்துகொண்டே இருக்கும். அகவே, தமிழ் மொழி வளர்வதற்கு அதற்க்குப் புதிய சொற்கள் தேவை. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் ஏராளம். அவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் உருவாக வேண்டும். எல்லாவற்றையும் காரணப்பெயர்களாக மட்டும் வைப்பது சற்றே கடினமான ஒன்று. மிக நீண்ட மற்றும் நகைப்புக்குரிய வகையில் காரணப்பெயர்களை வைப்பதைவிட, சற்று சிறிய, மனதில் நிற்கக்கூடிய எளிய சொற்களை உருவாக்குவதும் இன்றைய தேவை! இச்சொற்களை உருவாக்குவது மொழியியல் வல்லுனர்களின் வேலை! இவ்வாறு உருவான சொற்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, அனைவரது கடமை! ஆகவே உங்கள் ஆர்வத்திற்கேற்ப இவ்வகையிலும் நீங்கள் உதவலாம்!

Thursday, June 29, 2017

தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம்

அறிமுகம்:

NPTEL முத்திரை
தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் (The National Programme on Technology Enhanced Learning - NPTEL) இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் இணையத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை மற்றும் வாழ்வியல் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பாடங்களை காணொளி மற்றும் மின்-கல்வி வழியாக வழங்கிவருகிறது. இது ஏழு இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய அறிவியல்க் கழகங்களால் (IIScs) முன்னெடுக்கப்படுகிறது. மேலும் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்குபெறுகின்றன. இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) கல்வித்திட்டம் மற்றும் பல முன்னணி பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள்  பின்பற்றப்படுகின்றன.

நோக்கம்:

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், பொறியியல் கற்கும் மாணாக்கர்களுக்கு எளிய பாடங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உதவுவதே ஆகும். பொதுவில், இந்திய இளைஞர்களிடம் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த அறிவுத்திறனைப் பெருக்குவதன் மூலம் உலக அளவில் அவர்களின் தரத்தை உயர்த்தவும் இத்திட்டம் முனைகிறது.

வரலாறு:

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 1999ஆம் ஆண்டு "தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வி" குறித்த பட்டறை (Workshop) ஒன்று அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தோடு (Carnegie Mellon University) இணைந்து நடத்தப்பட்டது. அதன் முடிவில், இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்விக்கான திட்டத்தின் அவசியம் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டன. ஜூன், 2017 நிலவரப்படி, இதில் 1200க்கும் மேற்பட்ட காணொளிகள் மின்-கல்விப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடங்கள் பற்றி:

ஒவ்வொரு பாடத்திட்டத்தில் தோராயமாக 40 ஒரு மணி நேரக் காணொளிகள் உள்ளன. இரு மற்றும் முப்பரிமாண அனிமேஷன்கள், பவர் பாய்ண்டு ஸ்லைடுகள், கரும்பலகை மற்றும் இதர கற்பிக்கும் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

துறைகள்:

வான்வெளிப் பொறியியல், விவசாயம், கட்டடக்கலை, வளிமண்டல அறிவியல், அடிப்படைப் பாடங்கள், கட்டுமானப் பொறியியல், கணினி, மின்னியல், மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பவியல், பொறியியல் வடிவமைத்தல், சுற்றுச்சூழல், பொது, வாழ்வியல் மற்றும் சமூகம், உயிர்த்தொழில்நுட்பம், மேலாண்மை, வேதிப் பொறியியல், வேதியியல் மற்றும் உயிர்-வேதியல், கணிதம், இயந்திரப் பொறியியல், உலோகவியல், சுரங்கப் பொறியியல், கடல் பொறியியல், இயற்பியல் மற்றும் துணிப் பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.

எழுத்து வடிவில்:

இத்திட்டத்தில் உள்ள எல்லாக் காணொளிகளின் பேச்சுக்களும் எழுத்துவடிவிலும் கிடைக்கிறது. பி.டி.எப்., காணொளி அடியெழுத்துக்கள் மற்றும் காணொளியாற்ற வெறும் பேச்சுக்களாக எம்.பி.3 கோப்புகளாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இவை அனைத்தும் NPTEL இணையத்தளத்திலேயே உள்ளன. வரும் நாட்களில், காணொளிகளுக்குள் தேடுவது மற்றும் வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பு போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறிப்பிடத்தக்க வலைத்தளங்கள்:

1. http://nptel.ac.in  - அதிகாரப்பூர்வ இணையதளம்
2. http://www.youtube.com/iit
3. இணைய இணைப்பு இல்லாதவர்கள் NPTEL.BODHBRIDGE@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு இப்படங்களை குறுந்தகடுகளாகவும் குறைந்த கட்டணத்தில் பெறலாம்.

Tuesday, June 27, 2017

குறுக்கும் நெடுக்கும்

மின்தூக்கிகள் (lift) நம் வாழ்வில் ஆடம்பரங்களில் ஒன்றாக இருந்து தற்போது அத்தியாவசியமாக மாறிக்கொண்டுள்ளன. நகரங்களின் நெரிசல்களைச் சமாளிக்க அடுக்கடுக்காக மாடிகளைக் கட்டிக் கொண்டே போகிறோம். வானளாவிகளின் (skyscrapers) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. ஓரிரண்டு மாடிகள் என்றல் படிகளில் ஏறலாம். பத்துப் பதினைந்து மாடிகள் என்றல்? மேலும் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண்கள் என்று படிகளில் எற முடியாதவர்களும் உண்டல்லவா? ஆகவே மின்தூக்கிகள் நமக்கு இன்றியமையாத ஒன்றாகின்றன.


நான் சிலகாலம் முன் ஒரு பெரிய தொழில்நுட்பப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கு மின்தூக்கிகள் இருந்தன. ஆனால் மின்தூக்கி நம்மை இறங்கிவிடும் இடத்தில் இருந்து நாம் வேண்டிய இடத்திற்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. காரணம், உயரத்தில் மட்டுமல்ல, அகலத்திலும் அந்தக் கட்டடம் பெரிது. இதுபோன்ற சூழல்களில் மின்தூக்கி மட்டும் போதாதாதல்லவா? மேல்/கீழ் நோக்கி மட்டும் செல்லும் மின்தூக்கியாக இல்லாமல் பக்கவாட்டிலும் செல்லும் "மின்நகர்த்தி"யாக இருந்தால் எப்படி இருக்கும்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தைசன்க்ரப் (ThyssenKrupp) என்ற நிறுவனம் அப்படி ஒரு மின்நகர்த்தியை வடிவமைத்துள்ளது. அதற்க்கு "மல்டி" (The Multi) என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.


பொதுவாக மின்தூக்கிகள் கம்பியின் (cable) மூலமே மேலும் கீழும் இழுக்கப் படும். ஆனால் "மல்டி"யில் எந்தக் கம்பியும் கிடையாது! பின்பு எப்படி அது நகரும் என்று யோசிக்கிறீர்களா? ஜப்பானில் ஓடும் காந்தமிதவுந்தில் (Maglev Train) பயன்படுத்தப்படும் காந்தமிதவுத் (Magnetic Levitation) தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. காந்தப்புலத்தின் உந்தலால் மின்நகர்த்தி அந்தரத்தில் மிதக்கிறது. பின்பு மின்-காந்தப்புலத்தில் செய்யப்படும் மாற்றத்தால் அது குறிப்பிட்ட திசை நோக்கி நகர்கிறது. இதனால் கம்பிகள் பளு தாங்காமல் அறுந்து போவது, உராய்வு மற்றும் தேய்மானம் போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் மின்தூக்கிகள் போல் மேலும்/கீழுமாக மட்டும் அல்லாமல் இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் பக்கவாட்டிலும், குறுக்குவாட்டிலும்கூடப் பயணிக்கக்கூடியவை. இதனால் நேரம் மிச்சமாவதோடு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களும் பெருமளவு குறையும்.

இதுகுறித்து தைசன்க்ரப்பின் முதன்மை செயல் அலுவலர் (CEO) ஆன்ட்ரியாஸ் ஸ்கைரென்பெக் (Andreas Schierenbeck) கூறுகையில் "500 டன் எடைகொண்ட தொடர்வண்டியை 500 மணிக்கு கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றால், 500 அல்லது 1000 கி.கி. எடைகொண்ட பெட்டியை நொடிக்கு 5 மீட்டர் நகர்த்த முடியாத என்ன!" என்றார். இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்தூக்கிகள் போல 3 முதல் 5 மடங்கு வரை விலை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தற்போதுள்ள மின்தூக்கிகள் கம்பிகளின் பளுதாங்கும் திறன் காரணமாக குறிப்பிட்ட உயரத்திற்குமேல் பயன்படுத்த முடியாது. ஆனால், காந்தமிதவு மின்நகர்த்திகள் அதிஉயரக் கட்டடங்களில்கூடப் பயன்படுத்தலாம்.

Thursday, June 22, 2017

என் கோள்! என் முடிவு!

எதோ சீயக்காய் விளம்பரம் என்று உங்கள் உலாவியை மூடிவிடாதீர்கள்! சில நாட்களுக்கு முன், "நானே கப்பல்! நானே மாலுமி!" என்ற பதிவில் தானியங்கிக் கப்பல்கள் குறித்து நடந்துவரும் முன்னேற்றங்கள் பற்றிப் பார்த்தோம். தற்போது வந்துள்ள செய்திகளின் படி, நாசா (NASA) அனுப்பிய க்யூரியாசிட்டி ஆளில்லா ஆய்வுக்கலம் (Curiosity Rover) தனாகவே முடுவுகள் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி ஆய்வுக்கலம் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா, வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா அல்லது வாழும் வாய்ப்பு உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாயில் க்யூரியாசிட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபீ !
நன்றி: NASA/JPL-Caltech/MSSS

இதுவரை புவியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்த அக்கலம், தற்போது தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு இயந்திரக்கலத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் வேறு ஒரு கோளில் இருந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இங்கிருந்து அனுப்பப்படும் ஆணைகள் செவ்வாயில் உள்ள கலத்தை அடைய பல மணிநேரங்கள் ஆகலாம்! தூரம், இடையில் உள்ள தகவல்த்தொடர்பு செயற்கைக்கோள்களின் நிலை (position) போன்றவற்றால் இந்த வகையில் கலத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் நேரம் மற்றும் உழைப்பை வீணாக்கும் ஒன்றாக இருந்துவந்தது.

அதனால் ஏற்கனவே திட்டமிட்ட படி செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) மூலம் இந்தக்காலம் இயங்கத்தொடங்கியுள்ளது. எதேச்சையாக வெவ்வேறு இடங்களை லேசர் ஒளி கொண்டு உணர்ந்து அதில் செயற்கை அறிவுத்திறன் மூலம் ஆய்வுக்குச் சிறந்த இடம் எது என்று அடையாளம் கண்டு அந்த இடத்தை ஆராய்கிறது. இந்த செயற்கை அறிவுத்திறனுக்கு "அதிக அறிவியல் சேகரிப்புக்கான தன்னிச்சையான தேடல்" (Autonomous Exploration for Gathering Increased Science -AEGIS) என்று பெயரிட்டுள்ளனர். இந்த "ஏஜிஸ்" கருவி, 94% நேரங்களில் சரியான இலக்குகளை ஆராய்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது!

Wednesday, June 21, 2017

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் - இணையத்தில் உலாவ ஒரு நம்பகமான தோழன்

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் (Fire Fox Focus) ஒரு புதிய ஆண்டிராய்டு / ஐ-ஓ.எஸ் (Android / iOS) செயலி (App) ஆகும். மிகவும் அறியப்பட்ட உலாவிகளில் (Browsers) ஒன்றான ஃபயர் ஃபாக்ஸின் மற்றுமொரு பரிமாணமே இந்தப் புதிய உலாவி செயலி. இந்த உலாவி விளம்பரங்கள் மற்றும் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கும் டிராக்கர்கள் (Trackers) ஆகியவற்றை தானாகவே தடைசெய்துவிடுகிறது. இந்தப் புதிய செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலி வெறும் 4 எம்.பி அளவு மட்டுமே கொண்டது. எனவே உங்கள் கைப்பேசியின் வேகத்தை இது குறைக்காது.


சில வலைத்தளங்கள் உங்கள் கைப்பேசியில் உள்ள ஜீ.பீ.எஸ். மூலம் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்றார் போல விளம்பரங்களை காட்டுகின்றன. சில தளங்கள், நீங்கள் படிக்கும் பக்கங்கள், மற்றும் தேடும் சொற்களைக் கொண்டு உங்களை பற்றிய ஒரு ப்ரோபைலை உருவாக்கி வைத்துக்கொண்டு நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், எங்கு உள்ளீர்கள், என்ன விருப்பு/வெறுப்பு உள்ளவர் என்று ஒரு அனுமானத்திற்கு வருகின்றன. இதனால் என்ன தப்பு என்கிறீர்களா? அவர்கள் இத்தனை மெனக்கெட்டு இதைச் செய்ய என்ன காரணம்? இந்தத் தகவல்களைக்கொண்டு குறிவைத்து விளம்பரத்தாக்குதல் நடத்தி (Targeted Ad Campaigns), உங்களைப் பொருட்களை வாங்க வைப்பதே நோக்கம்.

ஆன்லைன் வர்த்தகம், நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற முன்யோசனையின்றி, நம்மைப் பல பொருள்களை வாங்க வைக்கும் ஒரு சிலந்திவலை. கடன் அட்டைகளும், ஆன்லைன் வர்த்தகமும் நம்மை தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் அடிமைகளாக்கியுள்ளன. முதலாளித்துவத்தின் இன்றியமையாத அம்சங்களான அதீத உற்பத்தி (over production), நுகர்வுக்கலாச்சாரம் (consumerism) மற்றும் கடன் மூலம் அடிமைப்படுத்துவது (debt slavery) எல்லாம் உங்கள் கைப்பேசிக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன. இந்நிலையில், ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் உங்களுக்கு ஓரளவேனும் இந்த துல்லியத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

மேலும் கூடுதல் பயன்களாக, இந்தச் செயலி மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது, உங்கள் கைபேசியில் உள்ள டேட்டா குறைவாகப் பயன்படுகிறது. இதனால் பக்கங்கள் சீக்கிரத்தில் தெரிகின்றன. மேலும் குறைவான மெமரி, டேட்டா மற்றும் ப்ராசசர் பயன்பாட்டால் உங்கள் மின்கலன்(பேட்டரி) பயன்பாடும் வெகுவாகக் குறைகிறது. கூகிளின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் ஆண்டிராய்டு இயங்குதளமும், அதனோடு வரும் உலாவியும் (ஆப்பிள்/ஐ-ஓ.எஸ் குறித்து சொல்லவே வேண்டாம்!) ஏற்படுத்திடும் அச்சுறுத்தல்களில் இருந்து நாம் சற்றேனும் தப்ப இந்த புதிய உலாவி நமக்கு உதவும் என்று நம்புவோமாக!

Monday, June 12, 2017

நானே கப்பல்! நானே மாலுமி!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சில கப்பல் நிறுவனங்கள் தானியங்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ஆம் ஆண்டையொட்டி இவ்வகைக் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. மிட்ஸு ஓ.எஸ்.கே. லைன்ஸ் (Mitsu OSK Lines) மற்றும் நிப்பான் யூஸென் (Nippon Yusen) ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence - AI) மூலம் கப்பல் செல்ல மிகவும் பாதுகாப்பான, குறைந்த தூரம், நேரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகும் வழித்தடத்தை தானே கண்டறிந்து பயணிக்கும் வகையில் இக்கப்பல்கள் வடிவமைக்கப் படவுள்ளன. முதல் கட்டமாக ஒரு சிறு ஊழியர்குழு கப்பலுடன் பயணிக்கும். பின்பு நாளாடைவில் முற்றிலும் தன்னிச்சையாக இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டுக்குள்ளாகவே தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் (remote controlled) கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கப்பல்த் துறை ஆய்வாளர் ஆஸ்கர் லெவாண்டர் தெரிவித்துள்ளார். என்னதான் தானாகவே இயங்கும் திறன் இருந்தாலும் சில இன்றியமையாத சூழ்நிலைகளில் மனித மாலுமி ஒருவரின் முடிவுகள் தேவைப்படும். அந்நேரங்களில், கரையில் இருந்தே கண்கணிக்கும் ஒரு மாலுமி, வேண்டிய கட்டளைகளை கப்பலுக்கு அனுப்ப முடியும்.

இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன விந்தைகள் நமக்காகக் காத்திருக்கின்றனவோ!