Thursday, August 25, 2016

லினக்ஸுக்கு வயசு 25!

1991-ஆம் ஆண்டு லினஸ் பெனடிக்ட் டோர்வால்ட் (Linus Benedict Torvalds) என்னும் ஃபின்லாந்து நாட்டுக் கணினியியல் மாணவரால் ஒரு பொழுதுபோக்காக ஆரம்பிக்கப் பட்டதே இந்த லினக்ஸ். லினக்ஸ் என்பது முழுமையான இயங்குதளம் (OS) இல்லை. அது இயங்குதளத்தின் கெர்னல் (Kernel) எனப்படும் உட்கருவாகும். லினக்ஸ் கெர்னல் கிணு-வுடன் (GNU) சேர்ந்து கிணு/லினக்ஸ் (GNU/Linux) இயங்குதளத்தை சாத்தியப்படுத்தியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் லினக்ஸின் ஆரம்ப நாட்கள் குறித்து லினஸ் டோர்வால்ட் கூறுகையில், "அது முழுவதும் ஒரு தனிநபர் செயல்பாடாகவே இருந்தது" என்கிறார். மேலும் 1991-ஆம் ஆண்டு அவர் லினக்ஸ் குறித்து எழுதிய முதல் பதிவில், "இது கிணு போன்று திட்டவட்டமானதாக இல்லாமல் ஒரு பொழுதுபோக்குக்கான ஒன்று" என்று குறிப்பிட்டிருந்தார்.
கிணு இயங்குதளத்திற்கான வேலைகள்  அமெரிக்கரான ரிச்சர்டு ஸ்டால்மன் (Richard Stallman) தலைமையில் வழிநடத்தப்பட்டு வந்த நேரம் அது. ஏறத்தாழ முழு இயங்குதளமும் முடியும் தருவாயில் இருந்த நிலையில் அதற்குத்தேவையான ஹர்ட் (Hurd) உட்கரு (கெர்னல்) மட்டும் தேக்கநிலையில் இருந்தது (இன்றும் அப்படியே உள்ளது!). மினிக்ஸ் (Minix) என்னும் மாற்று இருந்த போதிலும் அது கட்டற மென்பொருளாக (Free Software) அப்போது இல்லை.  அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஃபின்லாந்திலிருந்து உதவி வந்தது.
ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி பல்கலையில் கணினியியல் துறையில் பயின்று வந்த லினஸ் இணையத்தின் மூலம் தன்னுடைய கெர்னலை வெளியிட்டார். மேலும் அதை கிணு பொது உரிமத்தின் (GPL - GNU General Public License) கீழ் வெளியிட்டார். அப்போது மினிக்ஸ் கெர்னலை எழுதிக்கொண்டு இருந்த ஆண்ட்ரு டனேன்பௌம் (Andrew Tanenbaum) லினக்ஸின் கட்டமைப்பு மோசமானது என்றும் தன்னுடைய மைக்ரோ-கெர்னல் கட்டமைப்பே சீரியதென்றும் விவாதித்தார். அதற்க்கு லினஸ் தன்னுடைய கெர்னல் ஒரு சிறிய அளவிலான ஆதாயமற்ற மென்பொருள். மேலும் அது இன்டெல் 80386 சிப்பிற்கு மட்டுமே எழுதப்படுவது என்று கூறினார்.
ஆனால் இன்றோ இந்த லினக்ஸ் கெர்னல் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது. உங்கள் கைப்பேசியில் உள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளம் முதல் பங்குச்சந்தைகள், நீர்மூழ்கிக்கப்பல்கள், குளிர்சாதனப்பெட்டிகள், தொலைக்காட்சிகள், விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்கள் வரை பல இடங்களில் லினக்ஸ் ஊடுருவியுள்ளது. உலகில் உள்ள மிக வேகமான 500 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒருசிலவற்றைத் தவிர அனைத்தும் லினக்ஸ் கெர்னல் மூலமே இயங்குகின்றன.
கைப்பேசிச் சந்தையில் ஆண்ட்ரைடுக்குப் போட்டியாக இருக்கும் ஒரே இயங்குதளம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-ஓ.எஸ். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தால் கணினிகளில் (மேசைமேல் மற்றும் மடிமேல்) ஒன்றும் சாதிக்க முடியவில்லை. மேலும் ஃபயர் ஃபாக்ஸ், டைசன் இயங்குதளங்களும் லினக்ஸ் உட்கருவையே பயன்படுத்துகின்றன. இதற்க்கு நேர்மாறாக கணினிகளில் மேலாதிக்கம் செலுத்தும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் கைப்பேசிகளில் சொற்ப அளவிலேயே பயன்படுகிறது. ஆனால் கைபேசி மற்றும் கணினிகள் என்று மொத்தமாகப் பார்த்தல் லினக்ஸ் உட்காருவே அதிகமாக பயன்பாட்டில் இருக்கிறது. இணையத்தை இயக்கும் சர்வர்கள் (server) பெரும்பாலும் கிணு/லினக்ஸிலே இயங்குகின்றன. இந்த அடிப்படையில் இன்று உலகிலேயே அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள இயங்குதள உட்கரு லினக்ஸே!

இதன் வெற்றிக்கு முழுக்காரணமும் யாருக்கும் சேராது. இது ஒரு கூட்டு முயற்சியே! இன்றைய நிலையில் லினக்ஸ் நிரலில் வெறும் 0.2% பங்களிப்பே லினஸ் டோர்வால்டிடம் இருந்து வருகிறது. இணையமும் தொழில்நுட்ப முன்னேற்றமும் பல புதிய வழிகளைத் திறந்துள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த இணையமும் கணினியும் சாதிக்க முடிந்த ஒன்றை இன்றைய நிலையில் 4ஜி-யும் ஸ்மார்ட்போனும் கொண்டு நாம் செய்ய முடியாதா? கூட்டு முயற்சியும், ஒத்துழைப்பும், ஆர்வமும், தேடலும் இருந்தால் லினக்ஸ் போன்ற எண்ணற்ற புதிய படைப்புகள் தோன்றும். அது கணினித்துறையில் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மருத்துவம், வேளாண்மை, வாணியல் என்று எந்தத் துறையிலும் இருக்கலாம்! வாருங்கள் அறிவைப் பகிர்ந்து ஆற்றலைப் பெருக்குவோம்!

No comments: