Tuesday, March 22, 2016

அறிவுசார் சொத்துரிமையின் அறிவிலித்தனம்

பதிப்புரிமை, வர்த்தகக்குறியுரிமை மற்றும் காப்புரிமை எனும் மூன்று வெவ்வேறு பொருள்படும் சொற்களை "அறிவுசார் சொத்துரிமை" (Intellectual Property) என்று பொதுமைப்படுத்தி இன்று பலர் தாங்களும் குழம்பி, பிறரையும் குழப்பிக்கொண்டுள்ளனர். இந்த குழப்பம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இதனால் ஆதாயம் அடையும் பெருநிறுவனங்கள் இதைப் பரப்புவதில் குறியாக உள்ளன. முதலில் இவை மூன்றும் என்ன என்று பார்ப்போம். அதோடு, இவை எந்த நோக்கத்தில் எப்படிப் பயன்படுகின்றன என்றும், எப்படி இருந்தால் இது பெரிதும் நன்மை பயக்கும் என்றும் சேர்த்தே பார்ப்போம்.

பதிப்புரிமை (Copyrights)

ஒரு கதையோ, கவிதையோ, ஓவியமோ, பாடலோ மற்றும் இதுபோன்ற கலைவடிவங்கள் அனைத்தும் பதிபுரிமைக்கு உட்பட்டவையே. ஒருவர் எழுதிய அதே வரிகளை நீங்களும் எழுதிவிட்டு, "இது என் பாடல்!" என்று சொந்தம் கொண்டாடினால் நீங்கள் பதிப்புரிமையை மீறுகிறீர்கள். ஆனால், அதில் வரும் இரண்டு மூன்று வரிகளை நீங்கள் மேற்கோள் காட்டினாலோ, அல்லது அந்தப் பாடலை தழுவி வேறு வார்த்தைகளோடு ஒரு பாடலை எழுதினாலோ, அது பதிப்புரிமை மீறல் ஆகாது. அதே போல ஒரு புத்தகத்தை இரவல் கொடுப்பதும், மறு விற்பனை செய்வதும் பதிப்புரிமை மீறல் ஆகாது. ஆனால், நீங்களே அந்தப்  புத்தகத்தை அச்சிட்டு விற்றால் அது பதிப்புரிமை மீறல் ஆகும். இது நாடுளுக்கு ஏற்ப வெவ்வேறு கால அளவுகளுக்கு செல்லுபடியாகும்.

இது தோன்றியபோது உண்மையான படைப்பாளிக்கு உரிய அங்கீகாரமும், புகழும், ஊதியமும் கிடக்கவே உருவாக்கப்பட்டது எனக் கொள்ளலாம். ஆனால் இன்றோ இது படைப்பாளிகளையும் மக்களையும் பெருமுதலாளிகள் சுரண்டவே பயன்படுகின்றன. ஒரு புத்தகமோ, பாடலோ, ஓவியமோ ஒரே ஒரு தனிமனிதனின் உழைப்பால் உருவாவதில்லை. மாறாக பலரின் கூட்டு முயற்சியே அது. ஒரு பாடலை எடுத்துக்கொள்வோம். ஒருவர் வரிகளை எழுதுகிறார். ஒருவர் இசை அமைக்கிறார். பலர் வாத்தியங்களை வாசிக்கின்றனர். வேறு பலர் அதை ஒளிப்பதிவு செய்கின்றனர். வேறு ஒருவர் பாடுகிறார். அனால் இந்த பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நிறுவனம் இதற்குப் பதிப்புரிமையைப் பெறுகிறது. இனி இதை ஒவ்வொரு முறை நீங்கள் வாங்கும்  போதும், ரேடியோவில் கேட்கும்போதும், அந்த நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கும். ஆனால் அந்தப் பாட்டை உருவாக்க உழைத்த இதர அனைவருக்கும் கொடுக்கப்பட்ட சம்பளத்தோடு சரி. இந்த கொள்ளை லாபத்தில் 10 பைசாகூடப் பங்கு கிடையாது! இது நியாயமா?

பார்பதற்கு நன்மை செய்யும் சட்டம் போலத் தெரிந்தாலும், இது உண்மையில் இன்று பெருமுதலாளிகளால் வளைக்கப்பட்டு படைப்பாளிகளுக்கு விரோதமாகவே திருப்பப்படுகின்றன. நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால், அதை அச்சிடும் நிறுவனம் அதன் பதிப்புரிமையை உங்களிடம் இருந்து பெற்றபின் தான் விரும்பும் மாற்றங்களைச் செய்யலாம், நினைத்த விலைக்கு விற்கலாம். மொழிபெயர்க்கலாம். அனால், உங்கள் மகனால் கூட அந்த புத்தகத்தைத் தழுவி ஒரு நாடகமோ, பாடலோ எழுத முடியாது. இதுவே இன்றைய பதிப்புரிமைச் சட்டத்தின் நிலை!

அமெரிக்காவில் இந்தச் சட்டத்தின் கால அளவு அதிகரிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. இதற்கு மிக்கி மௌஸும் ஒரு காரணம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? மிக்கி மௌஸின் பதிப்புரிமையைத் தக்கவைத்துக்கொள்ள டிஸ்னீ குழுமம் அரசியல்வாதிகளிடம் பேரம் பேசி, பதிப்புரிமைச் சட்டத்தை தனக்கேற்றார்போல மாற்றிகொண்டிருக்கிறது. இதனால் இன்று பல லட்சக்கணக்கான புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் என்று பல்வேறு படைப்பாளிகளின் உழைப்பு பொதுமக்களுக்குப் பயன்படாமல், மூலையில் முடங்கியுள்ளன!

இதுபோல படைப்புகளும், படைப்பாளிகளும் வீணாவதைத் தடுக்க என்ன செய்யலாம்? நேரடியாகப் படைப்பில் தொடர்பில்லாத நபர்களோ, நிறுவனங்களோ எந்த ஒரு படைப்பு வடிவத்திற்கும் பதிப்புரிமை கோர முடியாதவாறு சட்டங்கள் மாற்றப்படவேண்டும். படைப்பாளியின் உழைப்புக்கு உரிய கூலியும், அதே சமயம் அந்த படைப்பை ஆக்கப்பூர்வமாக (ஆதயமற்ற வகையில்) பயன்படுத்தவோ, தழுவி புதிய படைப்புகளை உருவாக்கவோ எந்தத் தடையும் இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் க்ரியேடிவ் காமன்ஸ் (Creative Commons) பல நல்ல முயற்சிகளை முன்னெடுக்கிறது. நாமும் அவர்களுக்கு உதவலாம்.

வர்த்தகக்குறியுரிமை (Trademark)

கடைக்குப் போகும் நாம், அங்கு எந்த சோப்பு அல்லது எண்ணெய் வேண்டும் என்று எப்படிக் கேட்கிறோம்? அந்தப பொருளின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைச்சொல்லித்தானே? போலிகளைத் தடுக்கவும், மக்கள் மத்தியில் தங்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவும், பெயர்கள், லோகோக்கள் மற்றும் சில அடையாளக்குறிகளையும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதுவே வர்த்தகக்குறியுரிமையாகும்.

இன்றும்கூட இது முக்கியமான ஒரு உரிமை என்றே கருதிகிறேன். சந்தையில் விற்பனை செய்யப்படும் தனியார் தயாரிப்புகள் உள்ள வரை இந்த உரிமை தேவையான ஒன்றே. போலிகளையும், தரமற்ற மாற்றுகளையும் அடையாளம் காணவும், தரமான பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இவை அவசியமே.

அனால், இது இங்கேயே நின்றுவிடுவதில்லை. "பிராண்ட் வேல்யூ" (Brand Value) என்று மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட மாயை இந்த வர்த்தகக்குறியுரிமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. ஒரே பொருளை வேறு வேறு நிறுவனங்கள் வேறு வேறு விலைக்கு விற்பது நாம் அறிந்த ஒன்றே. வெவேறு உற்பத்தி முறை அல்லது தரம் என்று மட்டும் இல்லாமல், அந்த நிறுவனத்தின் மீது இருக்கும் ஒரு மூடத்தனமான மரியாதைக்காகவே மக்கள் கூடிய விலை கொடுக்கத் தயங்குவதில்லை. ஒரே தொழிற்சாலையில் தயாராகும்  ரொட்டி,சர்க்கரை, கைபேசி என்று பல விதமான பொருட்களும், சந்தைப்படுத்தும் நிறுவங்களின் பிராண்ட் வேல்யூ காரணமாக வெவ்வேறு விலைக்கு விற்பது அவலம்.

அரசாங்கம் ஒரே மாதிரிப் பொருட்களுக்கு விலை உச்ச வரம்பினை விதிக்க வேண்டும். லாபத்திற்கும் சதவிகித உச்ச வரம்பினை நிர்ணயிக்க வேண்டும். இதை அரசாங்கம் சட்டம் போட்டு மட்டும் தடுக்க முடியாது. மக்களும் குருட்டுத்தனமாக ஒரு நிறுவனத்தின் பொருளே உயர்ந்தது என்று மொய்க்காமல் அறிவைக்கொண்டு ஆராய்ந்து வாங்க வேண்டும். ஆப்பிள் நிறுவனத்தின் ஆட்டுமந்தை வாடிக்கையாளர்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு கைபேசியை 40,000 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு முக்கியக் காரணம் அது "ஆப்பிள்" நிறுவனத் தயாரிப்பு என்பதே! இந்த வகைக் குருட்டுத்தனமான போக்கை மக்கள் கைவிடுவது நல்லது.

காப்புரிமை (Patents)

இது இருப்பதிலேயே அபாயமான, அபத்தமான ஒரு சட்டம். ஒருவர் ஒரு கருத்தை(idea) சிந்தித்து, அதை மேலோட்டமாக விவரித்து எழுதி, அதற்க்கு காப்புரிமை வாங்கிவிட்டால்,வேறு யாரும் அந்த ஐடியாவையோ அதை ஒத்த ஐடியாவையோ பயன்படுத்த முடியாது. ஒருவர் தூண்டில் முள்ளையோ, தைக்கும் ஊசியையோ காப்புரிமை பெற்றுவிட்டால், வேறு யாரும் அதே போல ஒரு தூண்டில் முள்ளையோ, ஊசியையோ தயாரித்தால் அவருக்கு நஷ்டஈடு கொடுக்கவேண்டும் அல்லது கம்பி எண்ண வேண்டும்! இது இங்கேயே நின்றுவிடாமல், மருந்து, கல்வித்திட்டம், அறுவை சிகிச்சை முறை, தயாரிப்பு உக்தி, மனித மரபணு என்று எதில் வேண்டுமானாலும் காப்புரிமை பெற வழிசெய்கிறது.

கல கலமாக நாம் தாழ்பாளை பக்கவாட்டில் தள்ளித்தானே திறக்கிறோம்? இதை "Slide to  unlock " என்ற பெயரில் ஆப்பிள் காப்புரிமை பெற்றுள்ளது. இதேபோல விதைகளுக்கும் மொசாண்டோ நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இங்கே சொல்லவேண்டும் என்றால், இந்த வலைப்பூ போதாது! அவ்வளவு முட்டாள்த்தனமான காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தவனுக்கு அதன் பலனாக வருமானம் ஈட்டித்தரும் திட்டம் போலச் சொல்லப்பட்டாலும், இது உண்மையில் அப்படி வேலை  செய்வதில்லை.

பல பெருநிறுவனங்கள் பணியில் அமர்த்தும் முன் போடும் ஒப்பந்தங்களில் அந்தப் பணியாளர் என்ன கண்டுபிடித்தாலும் அந்த நிறுவனத்துக்கே சொந்தம் என்று கையொப்பம் இட வைக்கின்றன. மேலும் பணிஉயர்வு வேண்டும் என்றால் இத்தனை காப்புரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் நிர்பந்திக்கின்றன. அதனால்த்தான் இன்று பல கண்டுபிடிப்புகள் யாருடையது என்று தெரியாமல் ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பாக அறியப்படுகின்றன. மாத ஊதியம் தவிர அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய நபருக்கு எந்தப் பயனும் இல்லை. அதே நேரம், இந்த காப்புரிமையை வைத்துக்கொண்டு எதிர் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் மீதும்கூட வழக்குகள் தொடுத்து பணம் சம்பாரிக்க முடியும்.

இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா, உலக வங்கி, இந்தியப் பெருமுதலாளிகள் என்று பலதரப்பிலும் அழுத்தம் கொடுத்து இதுபோன்ற லாபவெறிக்கென்றே உருவாக்கப்பட்ட சட்டங்களையும் ஒப்பந்தங்களையும் ஏற்க வைக்கின்றனர். இதனால் தொழிலில் தரம் மற்றும் விலை ரீதியிலான போட்டி இல்லாமல் சட்ட ரீதியான சிக்கல்களும், மிரட்டல்கலுமே அதிகரிகின்றன. இதில் குறிப்பிட்ட தொழில்நுட்பம் தொடர்பான பல காப்புரிமைகளை வாங்கி வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தும் இதர நிறுவனங்களையும் அரசுகளையும் மிரட்டியே சம்பாரிக்கும் காப்புரிமை ஒட்டுண்ணிகளும் (patent  trolls) உண்டு.

ஒரு சிறு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒரு தோல் புற்றுநோய் செல்லை எடுத்து அதில் சில மாறுதல்கள் செய்து அந்நோயைக் குணப்படுத்த ஒரு முறையை ஒருவர் சுய முயற்சியில் உருவாகுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அனால் அவர் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்திடம் அவர் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி, அந்தக் கண்டுபிடிப்புக்கு அந்த நிறுவனமே காப்புரிமையாளர்! அந்த நிறுவனமோ மென்பொருள் நிறுவனம். அகவே அது இந்தக் காப்புரிமையை வேறு ஒரு மருத்துவ நிறுவனத்திற்கு விற்றுக் காசு பார்த்துவிடும். வாங்கிய நிறுவனமோ, இதே முறையில் வேறு பல புற்றுநோய்களுக்கும் மருந்து தயாரிக்க முடியும் என்று அறிந்துகொள்ளும். பிறகு ஒரு மருந்தை தயாரித்து அதை நினைத்த விலைக்குச் சந்தைப் படுத்தும். காப்புரிமை உள்ளதால், வேறு யாரும் அந்த மருந்தைத் தயாரிக்க முடியாது. இப்போதே கண்ணைக்கட்டுகிறதா? கவனியுங்கள்.இப்போது வேறு ஒரு மருத்துவ நிறுவனம், தைராய்டு புற்றுநோய்க்கு ஒரு மருந்தை உருவாகுகிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் நிறுவனம் இரண்டாம் நிறுவனம் பயன்படுத்திய முறையையே கேள்விக்குள்ளாக்கலாம். அவர்கள் ஒரு புற்றுநோய் செல்லை எடுத்து அதில் மாறுதல் செய்தது அந்த மருந்தை உருவாக்கொயிருந்தால் (இப்படிப் பொத்தம்பொதுவாகவே காப்புரிமை வழங்கப்படுகிறது) அதுவே போதும்! முதல் மருந்து நிறுவனம் இரண்டாம் மருந்து நிறுவனம் மேல் வழக்குப் போடும். அந்த வழக்கில் எவன் கை ஓங்குகிறதோ அவனுக்கு மற்றவன் கப்பம் கட்ட வேண்டும்! மீண்டும் இந்த வழக்குக்கு ஆனா செலவு முதல் இவர்கள் லாப வெறிவரை அனைத்தும் நோயாளிகளின் மேல் சுமத்தப்படும்! முடிவாக, அந்த தோல் புற்றுநோய் மருந்தை முதலில் கண்டுபிடித்தவருக்கே அந்த நோய் வந்தாலும் அவரும் அதை அவர்கள் விற்கும் விலைக்கே வாங்க வேண்டும்! இது சரியா?

முடிவாக...

இனி யாராவது உங்களிடம் வந்து "அறிவுசார் சொத்துரிமை" என்று சொன்னால் அவர்களிடம் "பதிப்புரிமை, வர்த்தகக்குறியுரிமை மற்றும் காப்புரிமை. இதில் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேளுங்கள். இப்படி முட்டாள்தனமான வார்த்தைகளை வைத்துக்கொண்டு மக்களைச் சுரண்ட ஒரு கூட்டமே அலைகிறது. ஒவ்வொரு படைப்பும் அதற்க்கு முன்னால் இருந்த படைப்புகளை உள்வாங்கியே உருவாகிறது. ஒவ்வொரு மனிதனும் தனியாக எதையும் படைப்பதில்லை. அதுபோலவே கண்டுபிடிப்புகளும். யாரும் பிறந்ததுமுதல் தானாகவே எல்லாம் கற்றுத் தேர்ந்து பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்லை. நம் முன்னோர்கள் நெருப்புக்கும் கிணறுக்கும் துணிக்கும் மொழிக்கும் காப்புரிமை பெற்றிருந்தால் இன்றும் நாம் அம்மணமாக குரங்குகளோடு குரங்காகவே வாழவேண்டும். பிறர் அறிவை கூசாமல் "திருடும்" நாம், நம் அறிவை பிறருடன் பகிர்வதே மனிதம்! ஆம். விலங்குகள் தலைமுறைதோறும் அறிவை சேர்த்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவதில்லை. அவற்றிடம் அறிவைப் பரிமார மொழியும் இல்லை. இந்த ஒரு வேறுபாடே மனிதனை மனிதனாக மாற்றியது. அறிவைப் பகிர்ந்தும், பரப்பியும், இருக்கும் கருத்துகளை சேர்த்தும், மேன்படுத்தியும் நாம் முன்னேறியுள்ளோம். இப்படி வந்த அறிவும், கலையும் இன்று ஒருசிலரின் லாபவெறிக்காக பூட்டிவைக்கப்படுகிறது. இருக்கும் அறிவை மேம்படுத்தவும் வேறு அறிவுடன் சேர்த்து புதிய ஒன்றை உருவாக்கவும் முடியாமல் தேக்கநிலை ஏற்படுகிறது. இவை எல்லாம் பல்லாயிரம் கொடிகளை சிலர் மட்டும் சேர்த்துக்கொள்ள செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றால் மிகை ஆகாது.

இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்களை எதிர்ப்போம். பொதுவில் இருந்து எடுக்கப்பட்ட அறிவும் கலையும் பொதுவிலேயே வைக்கப் பாடுபடுவோம்!

No comments: