Tuesday, March 15, 2016

இயற்கை விவசாயம் எவ்வளவு இயற்கையானது?

முதலில் இயற்கை என்றால் என்ன? இயல்பில் அமைவது இயற்கை. மனிதனால் செய்யப்படுவது  செயற்கை. இதில் நாம் முதலில் தெளிவடைய வேண்டும். இன்று "இயற்கை விவசாயம்"  என்று கூவும் பலருக்கும் முதலில் விவசாயம் பற்றி என்ன தெரியும்? அல்லது இயற்க்கை பற்றி என்ன தெரியும் என்று ஆராய்ந்து விட்டு,  அவர்கள் சொல்வதை நாம் நம்பினால் நல்லது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
1. நிலம்

விவசாயம் செய்ய முதலில் தேவை நிலம். இந்த நிலம் எப்படி வந்தது? விவசாய நிலம் என்று இயற்கையாக ஏதாவது இடம் உண்டா? குரங்கில் இருந்து தோன்றிய மனிதன், முதலில் குரங்கைப் போல பழம், கிழங்குகள், சிறு விலங்கு/பறவைகள் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்டு வாழ்ந்தான். அப்போது ஒரு நாளின் பெரும்பாலான நேரம் அவன் உணவு தேடவும், உண்ணவும் செலவானது. பின்பு வேட்டையாட கல் மற்றும் மரத்தினாலான கருவிகளை உருவாக்கினான். வேட்டையாடி உண்டபோது அவனுக்குத் தேவையான ஆற்றல் (caloric energy) குறைந்த நேரத்திலேயே கிடைத்தது. அதன் விளைவாக ஓய்வு நேரத்தில் குகை ஓவியம்  வரைவது, மொழி மற்றும் இசை வளர்ப்பது, இதர ஆராய்சிகளில் ஈடுபடுவது என முன்னேறினான். அப்போது, எதார்த்தமாக ஆற்றங்கரைகளில் மரங்கள் மற்றும் செடிகள் வளர்வதைக் கண்டான். அங்கு நீரும், விலங்குகளும், பழங்களும் அதிகம் கிடைக்க, அங்கேயே தங்கினான். இன்னும் அவன் விவசாயம் செய்யவில்ல. பிறகு, தனக்கு ஒவ்வாத தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் வேறு இன குழுக்களைச் சேர்ந்த மனிதர்களை அழித்துத் தனக்கென்று ஒரு நிலத்தைக் கைப்பற்றி, அதில் தான் விரும்பும் மரம்/செடி/விலங்குகள் மட்டும் வளர்த்தான். இப்படி மனிதன் பிற உயிகளை அழித்துப பறித்த "விவசாய நிலம்" இயற்க்கைக்கு மாறானதே!
2. நீர்

இயல்பாக ஓடும் நீர் மட்டுமா விவசாயத்திற்குப் பயன்படுகிறது? அப்படிப் பார்த்தல், இங்கு விவசாயமே கிடையாது. கால்வாய்கள் வெட்டி, குளம் குட்டிகள் உருவாக்கி, கிணறு, பம்பு செட் என்று நிலத்தடி நீரை உறிஞ்சி, அணைகள் கட்டி, மழை இயற்கையாய் பெய்யாத காலத்திலும் நீரை தேக்கிப் பயன்படுத்துவது இயற்கையா? இப்படி நதிகள் மற்றும் ஓடைகளின் போக்கை மாற்றுவது அந்த பகுதியில் உள்ள இயற்கைச் சமநிலையை எப்படி பாதிக்கும் என்று யோசித்ததுண்டா? அணைக்கட்டுகள் எவ்வளவு காடுகளை ஆக்கரமிக்கும் என்று கணக்கிட்டதுண்டா? இப்படி நீரை மனிதன் தன விருப்பத்திற்கு ஏற்றார்போல திசை திருப்பி, தேக்கி, உரிந்து செய்யும் விவசாயம் எந்த வகையில் இயற்கை?

3. விதை

இன்று நீங்கள் உண்ணும் எந்தப் பழமோ, காயோ, பயிரோ, கீரையோ இயல்பாகத் தோன்றியவை இல்லை. இவை அனைத்தும் தெரிவுமுறை பயிரிடல் (selective breeding ) மூலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, முட்டைக்கோஸ், காலிப்ளவர், நூல்கோல் அகிய அனைத்துக் காய்களும், ஒரே தாவர வகையே! இதை மனிதன் தெரிவு முறைப் பயிரிடல் மூலம் உருவாக்கியுள்ளான். அது மட்டுமா? ஒரு பகுதியில் இயல்பாக விளையாத பயிர்களை மனிதன் அங்கு கொண்டுவந்து விதைக்கிறான். இன்று நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு, மிளகாய், தக்காளி, பப்பாளி எல்லாம் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்தவை. இப்படி ஒரு இடத்தில் இல்லாத தாவரங்களை மனிதனாகக் கொண்டுவந்து திணிப்பது இயற்கையா? எங்காவது நெல்லோ, கோதுமையோ அதுவாக வளர்கிறதா? மனிதனால், மனிதனுக்காக உருவாகப்பட்ட பயிர்கள் மற்றும் அதன் விதைகள் எப்படி இயற்க்கை ஆகும்? ஒரு புலி தனக்கான மானை selective breeding செய்து உருவாக்கவில்லை! ஆனால், நாம் சாப்பிடும் எல்லா உணவுப் பொருட்களும், செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவையே!

4. உரம்


எங்காவது இயற்கையாக ஒரு மரத்தை நீங்கள் உரமிடப்பட்டோ, நீர் பாய்ச்சிய நிலையிலோ கண்டதுண்டா? "இந்த உரம் இந்த செடிக்கு", "இந்த உரம் இவ்வளவு அளவு" என்று மனிதன் வகுத்துத் தொகுத்து போடும் உரம் (அது குப்பை மேட்டில் இருந்து வந்தாலும், ஆலையில் இருந்து வந்தாலும்) செயற்கையே! இப்படி நாம் போடும் உரத்தினால், மண்ணில் இயல்பாக உள்ள நுண்ணுயிர் மற்றும் வேதிச் சமநிலை (microbial  and  chemical  balance) கெட்டு மண் தன் இயல்பு நிலையை இழக்கிறது. இது தவறில்லையா? இப்படி தலைமுறை தலைமுறையாக மனிதன் ஆராய்ந்து அறிந்து செய்யும் செயல் அறிவியல் ரீதியான செயற்கையா? இல்லை பரிணாம ரீதியான இயற்கையா?

5. வேலி/களை/பூச்சி கொல்லி

இயற்கை விவசாயம் ரசாயன பூசிகொல்லி பயன்படுத்துவதில்லை என்று மார்தட்டினாலும், வேலி அடைப்பது, களைகளைப் பிடிங்குவது, பறவைகளை விரட்டுவது, எலிகளைக் கொல்வது என்று எல்லாவகையிலும் இயற்க்கைக்கு மாறாகச் செயல்படுகிறது. இதில், பூசிகொல்லியாக சில பொருட்களும் பயன் படுத்துகின்றனர். கேட்டல், அவை இயற்கை உட்பொருட்கள் கொண்ட பூசிகொல்லி. அகவே, அவை பாதுகாப்பானது என்று சொல்கின்றனர். அரளிவிதை, உமத்தங்காய், புகை இல்லை எல்லாம் இயற்கைப் பொருட்களே! அதனால் அவை பாதுகாப்பானவையா?

6. சமையல்

இவை எல்லாவற்றிலும் தப்பித்து ஒரு உணவுப்பொருள் வந்தாலும், அதை நாம் பச்சையாகவா உண்கிறோம்? அதை வெட்டி, அரைத்து, வேகவைத்து, எண்ணெய், உப்பு போன்ற செயற்கை பொருட்களுடன் சேர்த்து, அடுப்பில் வைத்து சமைத்துதானே சாபிடிகிறோம்? இப்படி நாம் செய்யும்போது, பல இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் (physical  and chemical  reactions) ஏற்பட்டு நம் உணவு தயார் ஆகிறது! இது எப்படி இயற்கை?

7. ஜீவகாருண்யம்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம்மிடம் அவர்கள் வைக்கும்  வாதம், ஜீவகாருண்யம்! இப்படிப் பல உயிர்கள் வாழும் காட்டை அழித்து, இயல்பாய் ஓடும் நீர் வழிகளைச் சிதைத்து, உரம் என்று மண்ணின் சமநிலை கெடுத்து நீங்கள் செய்யும் விவசாயத்தால் சாகும் உயிர்கள் எத்தனை? இவை எல்லாம் பொதுவாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை! நேரடியாகப்  பார்த்தால், ஒவ்வொரு நெல் மணியும் ஒரு கருவே! ஒவ்வொரு காரட் செடியும் ஒரு உயிரே! அப்படி இருக்க இந்த உணவு எப்படி ஜீவகாருண்யம் ஆகும்? செடிகள் வலியை உனாரது என்றால், கோமா-வில் இருக்கும் மனிதனுக்கும் அது பொருந்துமே! அக மனிதன் வாழ இன்றும் என்றும் பல உயிர்களைக் கொன்றே தின்கிறான், தின்பான்! இதில் உன் முறை கொடூரம், என் முறை சாத்வீகம் என்பதெல்லாம் சுத்தப் பிதற்றல்.

முடிவாக...

இந்தக் கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், நாம் அனைவரும் விவசாயத்தை விட்டுவிட்டு மீண்டும் ஆதி மனிதனாக காட்டில் வேட்டையாடித் திரியவேண்டும் என்பதல்ல. விவசாயம், மனிதனால் காலம் காலமாக அனுபவம் மற்றும் சோதனை அறிவின் விளைவாய் வந்த ஒரு அறிவியல் கருவி. இந்த விவசாயம் என்னும் செயற்கைக் கருவி, உணவு உற்பத்திக்குப் பயன்படுகிறது. இந்த விவசாயம், காலம்தோறும் மாறிக்கொண்டே இருந்தது, மாறிகொண்டே இருக்கிறது. இப்படி உள்ள ஒரு விஷயத்தில், 100 வருடம் முன்பு செய்தது சரி என்றும், இப்போது செய்வது தவறு என்றும் சொன்னால், அது தேக்கநிலைக்கே வழிவகுக்கும்.

மனிதனால் தெரிவுமுறைப் பயிரிடல் மூலம் செடிகளின் மரபணு மாற்றப்படுகிறது. இப்படி மருபணு மாற்றம் அடைந்த அரிசி, பருப்பு, பழங்களையே நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உண்டு வந்துள்ளனர். இன்று வேறு முறைகள் உள்ளதால் நாம் எளிதாக, ஒரு சோதனைக்கூடத்திலேயே இந்த மரபணு மாற்றத்தைச் செய்துவிடலாம். அனால், பழையமுறை மரபணு மாற்றத்தை ஏற்கும் "இயற்கை விவசாயிகள்", இந்தப் புது முறையை ஏற்க்க மறுக்கின்றனர். போர்-வெல் போட்டு தண்ணீர் எடுக்க வெட்கப்பாத இவர்கள், யுரியாவையும், நைட்ரோஜென் உரத்தையும் கண்டு அஞ்சுகின்றனர்.

இன்று உலகில் உணவுப் பற்றாகுறையும் நீர்த் தட்டுப்பாடும் தலைவிரித்து ஆடும் நிலையில், அறிவியலின் துணையை அன்றி நாம் யாரின் துணியை நாட முடியும்? ஆர்கானிக் பார்மிங் என்ற பெயரில் இன்று விவசாயத்தை பெரு முதலாளிகள் கைப்பற்ற நடக்கும் முயற்சி ஒருபுறம். விதைகளுக்கும், உரங்களுக்கும் காப்புரிமை என்று பன்னாட்டுத் தரகு முதலாளிகளின் லாபவெறி மறுபுறம்! இதில் இந்த இயற்கை விவசாயக் கும்பல் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, பிரச்சனை இல்லாதவற்றை பிரச்சனையாக்கி, பிழைப்பு நடத்துகின்றனர். "Organic" என்று ஸ்டிக்கர் ஒட்டி பல மடங்கு விலை வைத்து விற்றாலும் கேள்வி கேட்காமல் வாங்கும் மூடக்கூட்ட்தை உருவாக்குவதே இவர்கள் நோக்கம்.

இந்த ஆர்கானிக் முறை விவசாயம் சிறு விவசாயிகளினால் கொண்டுசெலுத்த முடியாத ஒன்று. இதைச் சாக்காக வைத்து, பெரு முதலாளிகள் நிலங்களைப் பறித்து, ஆர்கானிக் ஸ்டிக்கர் ஒட்டி, சூப்பர் மார்கெட்டுகளில் உணவை விற்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலை தொடரந்தால், உணவுத்தட்டுப்பாடு ஏற்படுவது உறுதி! மாறாக, சரியான முறையில் ஆராய்ந்து, தனியார்களின் லாப வெறிக்காக இல்லாமல், மக்களின் ஒட்டுமொத்த தேவைக்காக இந்த அறிவியல் செயல்பட வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும். ISRO போல நம் நாட்டு அறிவியலாளர்களைக் கொண்டு ஆராய்சிகள் செய்து விவசாயம் முன்னேற வேண்டும். விதை மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களில் காப்புரிமை முறை (patent system) ஒழிக்கப்பட வேண்டும்! பஞ்சமில்லாத வளமான இந்திய எங்கள் எதிகாலமாக வேண்டும்!

No comments: