Friday, June 9, 2017

வீட்டு விலங்குகளின் தோற்றம்

நாம் நினைப்பது போல எல்லா விலங்குகளும் கடவுளால் தனித்தனியாகப் படைக்கப்பட்டவை அல்ல. இன்று நாம் வீட்டு விலங்குகளாக வளர்க்கும் பல விலங்குகள் மனித வரலாற்றின் பிந்தைய காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டவையே! அதாவது பின்வரும் இரண்டில் எதோ ஒன்று.

1. மனிதன் தன்னுடைய தேவை கருதி ஒரு வகை விலங்கைப் பழக்கப்படுத்தி, தனக்கு வேண்டிய பண்புகள் உள்ள விலங்குகளை மட்டும் தேர்வு முறையில் இனப்பெருக்கம் செய்து (selective breeding) தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது.

2. மனிதனின் உணவு மற்றும் இருப்பிடம் சார்ந்த பழக்கங்களால் மனிதனோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மிருக இனங்கள் சில, காலப்போக்கில் இயற்கையாகவே வீட்டு விலங்குகளாகப் பரிணமித்தது (coevolution).

விலங்குகள் மட்டும் அல்ல, பூச்சிகள், தாவரங்கள் என்று பலவும் இவ்வாறு தெரிவு முறை இனப்பெருக்கம் மூலமோ, சார்புப் பரிணாமம் மூலமோ (coevolution) தற்கால நிலையை அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக பேன்களை எடுத்துக்கொண்டால், மனிதன் ஆடை அணியும் பழக்கம் வரும் முன் வாழ்ந்த பேன் இனம், அவன் ஆடை அணிய ஆரம்பித்த பிறகு சார்புப் பரிணாம வளர்ச்சியால் வேறு வைகையாகப் பரிணமித்தது. அதுபோல, மனிதன் தன் விருப்பத்தின்படி தேர்வு செய்த பண்புகள் உள்ள செடிகளை பயிரிட்டு ஒரே வகையாக இருந்த காட்டு முட்டைகோஸ் செடியை, முட்டைகோஸ், காளிபிரளவர், நூல்கோல் போன்ற பல வகைத் தாவரங்களாக மாற்றினான். இப்படி நம் கண்முண்ணே இருக்கும் பலவும் நம்மை அறியாமலோ அல்லது நம் விருப்பத்தின் படியோ நம்மால் உருப்பெற்றவை என்றால் நம்ப முடிகிறதா?

சரி, இங்கே சில விலங்குகளை மட்டும் எப்போது, எங்கு, எதிலிருந்து வீட்டு விலங்குகளாக மனிதனால் மாற்றப்பட்டன என்று பார்ப்போம்.(இந்த அட்டவணை காலத்தால் முந்தையது தடங்கிப் பிந்தியது வரை தொகுக்கப்பட்டுள்ளது)

வ.எண் விலங்கு/பறவை மூதாதை காட்டு இனம் (wild ancestor) காலம் இடம்
1 நாய் ஓநாய் கி.மு. 13,000 ஐரோப்பா
2 வெள்ளாடு பாரசீக ஐபெக்ஸ் கி.மு.10,000 மேற்கு ஆசியா (துருக்கி, இரான்)
3 பன்றி காட்டுப் பன்றி கி.மு. 9,000 மேற்கு ஆசியா, சீனா
4 செம்மறி ஆடு காட்டுச் செம்மறி கி.மு. 8,500 துருக்கி
5 மாடு (திமில் இல்லாத இனம்) ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா
6 மாடு (திமில் உள்ள இனம்) இந்திய ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா
7 பூனை ஆபிரிக்கக் காட்டுப் பூனை கி.மு. 7,500 மேற்கு ஆசியா
8 கோழி காட்டுக்கோழி கி.மு. 6,000 இந்தியா, தென்கிழக்கு ஆசியா
9 கழுதை ஆபிரிக்கக் காட்டுக் கழுதை கி.மு. 5,000 எகிப்து
10 வாத்து காட்டு வாத்து கி.மு. 4,000 சீனா
11 எருமை காட்டெருமை கி.மு. 4,000 வடகிழக்கு இந்தியா, சீனா
12 ஒட்டகம் பாலை ஒட்டகம் கி.மு. 4,000 அரேபியா
13 குதிரை காட்டுக் குதிரை கி.மு. 3,500 மத்திய ஆசியா
14 புறா மாடப்புறா கி.மு. 3,500 மத்தியத் தரைக்கடல்ப் பகுதி
15 வான்கோழி காட்டு வான்கோழி கி.பி. 100 - 200 மெக்சிக்கோ, யூ.எஸ்.ஏ
16 தங்க மீன் பிரஷ்ஷியக் கெண்டை கி.பி. 300 - 400 சீனா
17 சண்டை மீன் (fighter fish) பெட்டா மீன் கி.பி. 1800 தாய்லாந்து
18 வளர்ப்பு நாரி (ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது) நாரி கி.பி. 1950 சோவியத் ஒன்றியம்

No comments: